தன்மானத் தமிழ் மறவர் சி. இலக்குவனார்

இலக்குவனார் செய்யும் இருந்தமிழ்த் தொண்டை
விலக்குவான் செய்த வினையே – துலக்கியதே
ஊழின் வழியதொன் றின்மையால் மற்றொன்று
சூழினும் முந்துறுஞ் சொல்

-மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர்.

பன்முகத்தன்மை கொண்ட திரு. சி. இலக்குவனார் அவர்களை நான்
சிறுபிள்ளையாக இருந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன். அவருடைய
சொற்பொழிவையும் கேட்டிருக்கிறேன். என் தந்தையார் புலவர். கு.குருநாதன்
அவர்கள் மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராக (1972 -1973)
இருந்தார்.

அக்காலத்தில் தமிழக முதல்வராய் ஆட்சி செய்து கொண்டிருந்த
டாக்டர். கலைஞர் அவர்களிடத்தில் தமிழாசிரியர்கள் ஒரு கோரிக்கை
வைத்தனர். அதாவது தமிழாசிரியர்களைத் தலைமையாசிரியர்களாக ஆக்க
வேண்டும் என்பதே அக்கோரிக்கை. ஆனால் அதற்கு மற்ற துறை
ஆசிரியர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

அந்த எதிர்ப்புக்கான காரணம்
தமிழாசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதே. ஆனாலும்
தமிழாசிரியர்கள் விடாது தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஒருமுறை தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர்; அவர்கள்
மதுரைக்கு வருகை தந்தார். மதுரைப் புகைவண்டி நிலையத்திற்கு (இரயில்
நிலையம்) அருகே இருந்த ஒரு அரங்கத்தில் (தற்போது கற்பகம்
ரெஸ்டாரண்ட்) விழா நடைபெற்றது. விழாவிற்குத் தலைமையேற்றார் நம்
வீரத்தமிழர் சி.இலக்குவனார். அவ்விழாவிற்கு என் தந்தையாரோடு நானும்
போயிருந்தேன். அப்போது என் தந்தையார் தமிழாசிரியர்களின் கோரிக்கையை
முன்வைத்து அதற்கிருந்த தடையையும் மேடையில் விளக்கிக் கூறினார்.
அப்போது இலக்குவனார் அவர்கள் தமிழ் ஆசான்களின் தலைமைப் பண்புகளை
உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார். நிறைவாகத்,

தமிழக முதல்வர் டாக்டர்
கலைஞர் அவர்கள் பேசும்போது,
‘தமிழ் மட்டுமே தெரிந்த தமிழாசிரியர்களால் பள்ளிக்கூடத்தை
நிர்வாகம் செய்ய முடியுமா?’ என்று கேட்கிறார்களாம். தமிழ் மட்டுமே தெரிந்த

நான் தமிழ்நாட்டுக்கே தலைமையேற்று முதல்வராக இருக்கும்போது
தமிழாசிரியர்களால் ஏன் தலைமையாசிரியர்கள் ஆக முடியாது’ என்று
கேட்டபோது அரங்கமே அதிர்ந்தது. கலைஞர் அவர்கள் அப்போதே அதற்கான
ஆணையைப் பிறப்பித்தார்.

அப்போதுமுதல் தமிழாசிரியர்கள்
தலைமையாசிரியர்களாக பள்ளிப்பொறுப்பை ஏற்றார்கள். இன்றும் தொடர்ந்து
தலைமையாசிரியர்களாக அப்பொறுப்பிற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.
இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்தவர்கள் திரு. சி.இலக்குவனார் போன்ற
தமிழ்ப்பெருமக்கள்தான் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க
வேண்டும். அத்தகைய பெருமகனாரைப் பற்றிச் சில வரிகள்…


“தமிழ் வீறு கொண்டு வாழ வேண்டும் பெருமையுடன் வாழ வேண்டும்”
என்பதற்காகப் பாடுபட்டவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்.


மறைமலை அடிகளாரின் துணிவும், நாவலர் பாரதியாரின் உரமும், தமதெனக்
கொண்டு எத்தகு இன்னலையும் துச்சமென ஏற்றுத் தமிழே தமது மூச்சென
உயிர்த்து வாழ்ந்த செம்மல்” என, இனமானப் பேராசிரியர் அவர்களால்
பாராட்டப் பெற்றவர் இலக்குவனார் அவர்கள்.
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழறிஞர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்.
மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி,
சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள்
இயற்றியுள்ளார்.


சி. இலக்குவனார் அவர்கள் 1909 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள்
தமிழ்நாட்டின் அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டிணம்
மாவட்டம்), திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள வாய்மைமேடு என்னும்
சிற்றூரில், பிறந்தார்.


திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று 1936ஆம் ஆண்டில் புலவர்
பட்டம் பெற்றார். அங்கு பயிலும்பொழுது அக்கல்லூரியின் திருவள்ளுவர்
மாணவர் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர்த் தமிழ்மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் (Original and
Growth of Tamil Language) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து
கீழைமொழிகளில் முதுவர் (MOL)பட்டமும் பெற்றார்.

இலக்குவனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிக்
கொண்டிருந்தபோது, தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து,
விரிவாக ஆய்வும் நிகழ்த்தித் தமது முனைவர் பட்டப்பேற்றிற்கான
ஆய்வேட்டை அளித்தார். 1963இல் முனைவர் பட்டப்பேற்றிற்காக
Tholkappiyam in English with critical studies என்னும் ஆய்வேட்டை அளித்து
1963ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.

தமது பல்வேறு பணிகளின்
காரணமாகவும், பணியிழப்புகளின் காரணமாகவும் காலந்தாழ்ந்து 53ஆவது
அகவையில் இப்பட்டத்தை இவர் பெற்றாலும் தமிழ்நெஞ்சங்கள் மகிழ்ந்து
போற்றின. குமரி முதல் சென்னைவரை இவருக்குத் தமிழ்நாடெங்கும்
பாராட்டு விழாக்கள் நடந்தன.

ஒரு பேராசிரியர் தமிழ்நாடெங்கும்
பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை, பின்புமில்லை.
இவரது தொல்காப்பிய ஆங்கில நூலுக்கு அறிஞர் அண்ணா அவர்கள்
அணிந்துரை வழங்கிப் பாராட்டியுள்ளார். பின்னர்; அண்ணா தமிழக
முதல்வராகப் பொறுப்பேற்றபோது, தமது அயல்நாட்டுச் சுற்றுப்பயணத்தில்,
இந்நூலைப் போப் ஆண்டவர் அவர்களுக்கும், அமெரிக்க நூலகங்களுக்கும்
தமிழக அரசின் சார்பில் அன்பளிப்பாக அண்ணா வழங்கினார்.


கலைஞர் மு.கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப்
பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். ‘தமக்குத் தமிழுணர்வுடன்
சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்’ என்று இவரைப் பற்றித் தமது தன்
வரலாற்று நூலாகிய ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.


இலக்குவனார் தாம் பணியாற்றச் சென்ற இடமெல்லாம்
தமிழ்மன்றங்களை நிறுவியும் இதழ்களை நடத்தியும் மக்கள் மனதில் தமிழ்
எழுச்சியும் ஆர்வமும் ஏற்படப் பாடுபட்டார். 1944 முதல் 1947 வரை இவர்
நடத்திய ‘சங்க இலக்கியம்’ வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக்
கருதப்பட்டு வந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது.
சிறுகதை வடிவிலும், ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம்
செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு.வரதராசனார்,
மு.கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.

வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு
குறள்நெறி என்னும் இதழை 15.1.1964ஆம் நாள் சி.இலக்குவனார்
தொடங்கினார்.


Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில
இதழ்களையும் நடத்தினார்.
06.08.1962ஆம் தேதி மதுரையில் உள்ள திருநகரில் ‘தமிழ்மொழி
வாழ்ந்தால் தமிழும் வாழும்’ என்னும் நோக்கத்தை முன்வைத்து தமிழ்க்
காப்புக் கழகத்தை சி. இலக்குவனார் தொடங்கினார்.

இக்கழகத்திற்கு இலக்குவனார் தலைவராகவும், புலவர் இரா. இளங்குமரன் பொதுச்
செயலாளராகவும் பணியாற்றினர். இக்கழகம் தமிழில் பேசுக! தமிழில் எழுதுக!
தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க! என்னும் நான்கு செயல் திட்டங்களை
முன்வைத்துப் பணியாற்றியது போன்றவை இதன் சிறப்புகள் ஆகும்.


இலக்குவனார் அவர்களை முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி,
பயிற்சி மொழிக் காவலர், தமிழர் தளபதி, தமிழ் காத்த தானைத் தலைவர்,
இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா, தமிழ்ப் போராளி, 20ஆம் நூற்றாண்டுத்
தொல்காப்பியர், இரண்டாம் நக்கீரர், பெரும் பேராசிரியர், தன்மானத் தமிழ்
மறவர், இந்தி எதிர்ப்புப் படைத் தளபதி, செந்தமிழ்ப்படையின் மானச் செம்மல்
என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர்;. தமிழுக்கெனத் தோன்றிய அரிய
அறிஞர்களுள் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும்,
தமிழ்வீரமும், தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை.
தமிழும், தமிழரும் உயர உழைத்த முன்னோடி சி. இலக்குவனார் எனில்
மிகையல்ல.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.