தன்னம்பிக்கை

“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற”
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்”
இதுபோன்ற குறட்பாக்களைத் திருக்குறளில் படிக்கும்பொழுதும், வகுப்பறையில் பாடமாக நடத்தும்பொழுதும், மேடைகளில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பேசும்போதும் ஒரு சிந்தனை ஏற்படும். 1800 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட இக்குறட்பாக்களின் மன எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் பற்றி வள்ளுவர் சிந்தித்திருப்பது பெருவியப்பைத் தருகிறது.
காரணம் தற்காலத்தில் ‘எண்ணங்களால் உயர்வது எப்படி?’ தலைவனாவது எப்படி?, தனித்தன்மையை வளர்ப்பது எப்படி? என்று தனித்தனியே புத்தகம் எழுதிக்கொண்டும், வகுப்புகள் நடத்திக்கொண்டும், மனஊக்கத்தை உண்டாக்கப் பலர் முயல்வதைக் காண்கிறோம்.
ஆனால் திருவள்ளுவர் எவ்வளவு எளிமையாகக் கூறுகிறார். வினை விதி எல்லாவற்றையும் நிர்ணயிப்பது ஒரு மனிதனின் மன உறுதியே தவிர மற்றைய எல்லாம் அதற்குப் பிறகுதான் எனவும், நினைத்ததை நினைத்தபடி முடிக்கும் ஆற்றல், வலிமையான எண்ணங்களைக் கொண்டவர்களுக்கு வாய்க்கப்பெறும் என்பதை இத்தனை காலத்துக்கு முன்பாகக் கூறியிருப்பது வியப்பான ஒன்று.
நம்பிக்கை, நன்னம்பிக்கை, தன்னம்பிக்கை என்று சொல்லும்பொழுதே ஓர் ஊக்கம் பிறக்கிறது. ஆழமாக நம்புதல், நல்லவை நடக்குமென்று நம்புதல், அதன் காரணமாகத் தன் முனைப்பு ஏற்படும் என்று நம்புதல் என்பதே இதன் பொருள்.
மனிதன் ஆகாயத்தில் பறக்க முடியுமா? முடியவே முடியாது என்றுதான் 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மக்கள் நம்பி வந்தனர். ஆனால் அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில் பிறந்த ரைட் சகோதரர்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆகாயத்தில் பறந்துகாட்டி, மனிதகுலத்தை வியப்பில் ஆழ்த்தினார்கள். விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. ராக்கெட்டுகள் விண்வெளியில் ஏவப்பட்டன. 1969இல் ஆம்ஸ்ட்ராங் என்ற மனிதன் நிலவில் கால்பதித்து மாபெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டினான்.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பை உருவாக்கியபோது அந்தக் கண்ணாடி பல்புக்குள் ஒரு இழையைப் பொருத்தி மின்சாரத்தை அதில் பாய்ச்சி ஆராய்ச்சி செய்தார். ஒவ்வொருமுறை மின்சாரம் பாய்கிறபோதும் இழை எரிந்து போனது, கருகிப்போனது, காற்றோடு மறைந்து போனது. இம்முயற்சியை பல வாரங்கள் இரவு பகலாகத் தொடர்ந்து செய்துவந்த எடிசன், 1300ஆவது முறை ‘டங்ஸ்டன்’ என்ற இழையைப் பொருத்தி மின்சாரத்தை அதனுள் பாய்ச்சினார். அப்போது அந்த இழை ஒளிர்ந்தது. மின்சார பல்பு உருவாகியது.
இந்த வெற்றியைப் பலர் பாராட்டியபோது, ஒரு பத்திரிக்கை நிரூபர் அவரிடத்திலே, ‘மிஸ்டர் எடிசன் நீங்கள் பெருமுயற்சி செய்து 1300ஆவது தடவையில் இதனைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறீர்கள். அப்படியென்றால் 1299 முறை நீங்கள் தோற்றுத்தானே போனீர்கள்’ என்று கேட்டார். அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன் புன்னகையோடு சொன்னாராம், ‘அப்படியில்லை 1299 பொருள்கள் இதற்குப் பயன்படாது என்று கண்டுபிடித்தேன்’ என்றாராம் தெளிவாக.
இத்தகைய விடா முயற்சியுடைய தன்னம்பிக்கையாளர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். (Trend setters) மற்றவர்கள் வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். தன்னம்பிக்கையோடு வரலாற்றை உருவாக்குவோம்.