தசாவதானி… கமல்…

“மூன்றாம் பிறை” படம் முடிந்து நண்பர்களோடு வெளியே வந்தபோது,
‘கமலஹாசன்’ போன்ற அற்புதமான கலைஞர்கள் வாழுகின்ற காலத்தில் நாமும்
வாழ்கின்றோம் என்பதை எண்ணும்போது பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும்
இருக்கிறதென்று நான் என் நண்பர்களிடத்திலே சொன்னேன். அவர்களும் ‘ஆமாம்’
என்று உற்சாகமாக என் கருத்தை ஆமோதித்து வரவேற்றார்கள்.
அப்போது நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் எம்.ஏ., படித்துக்
கொண்டிருந்தேன் (1982). குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’
அறிமுகமாகிப் ‘பாதக்காணிக்கை’ ‘பார்த்தால் பசி தீரும்’ ‘வானம்பாடி’
‘ஆனந்தஜோதி’ எனப் பல்வேறு படங்களில் துறுதுறுப்பான சிறுவனாகக்
காண்போர் இதயத்தை ஈர்த்தவர் குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன், சந்திரபாபு, தங்கவேலு என்று
பல்வேறு கலைஞர்களோடு இணைந்து நடிக்கும் அரியவாய்ப்பு அவருக்கு
அப்போதே கிடைத்திருந்தது.
சிறுவயதில் டூரிங் டாக்கீஸ்களில் மணல் தரையில் மல்லாந்து படுத்துக்கொண்டு ‘பாதாள பைரவி’ படத்து ரங்காராவையும், ‘மதுரை வீரன்’எம்.ஜி.ஆரையும் பார்த்து, பயந்தும், வியந்தும் திரிந்த காலத்தில், களத்தூர் கண்ணம்மா படத்தில் என்னைப் போன்றே ஒரு சிறுவனைப் பார்த்தபோது,ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. அதிலும் அந்தப்பையன் ‘அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே’ என்று பாடுவதைக் கேட்டபோது ‘என்னமாய் நடிக்கிறான்
இந்தக்குழந்தை’ என்று ஊரே வியந்தபோது எனக்குப் பள்ளிக்கூடத்தின் மீதே
வெறுப்பு வந்தது.அடுத்தடுத்து வந்த படங்களில் அந்தச் சிறுவனின் வளர்ச்சி அபாரமாய்
இருந்தது.
திடீரென்று, ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,
ஜெமினிகணேசன், சாவித்திரி என்று பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் சிறுவன்
கமலுக்கு ‘டபுள் ஆக்ஷன்’ ரோல்.
இப்போது ஒரு சினிமா புதிர்.
திரு.கமல்ஹாசன் அவர்கள், செல்வி. ஜெயலலிதா அவர்களுடன் படத்தில்
நடித்திருக்கிறாரா? என்ன படம்? என்ன வேடம்?
பதில்:-
‘அன்புத் தங்கை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தில் வரும்
நாட்டிய நாடகக் காட்சியில் புத்தத் துறவியாக கமல்ஹாசன் நடித்திருப்பார்.
நாட்டியப் பெண்ணாக செல்வி. ஜெயலலிதா நடித்திருப்பார்.
அக்காலத்தில்தான் இயக்குநர் சிகரம் திரு. பாலச்சந்தர் கண்களில் கமல்
என்ற துடிப்பான இளைஞர் பட, படஉலகில் இளமையான புதிய நட்சத்திரம் ஒன்று
ஒளிவீசத் தொடங்கியது.
சரி கமல் அவர்களுக்கும், அவரின் இரசிகரான எனக்கும்
எப்படித் தொடர்பு ஏற்பட்டது தெரியுமா?
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நூல் வெளியீட்டில் சென்னை,
காமராசர் அரங்கத்தில்தான் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர்
தலைமையில் நடந்த விழாவில், பத்மஸ்ரீ கமல் அவர்களை மிக அருகில்
சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புத்தக வெளியீட்டில் ‘பிலிம்சேம்பர்’
அரங்கில் எங்களின் நட்புத் தொடர்ந்தது.
‘விருமாண்டியில்’ திரு. கமல் அவர்களோடு சேர்ந்து பணிபுரியும் வாய்ப்புக்
கிடைத்தது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரையில் கால்பதிக்கும் வாய்ப்பும்
எனக்கு அவரால் கிடைத்தது.
இலக்கியம், புதுக்கவிதை, பழைய சினிமா, உலகசினிமா, பட்டிமன்றம்,
நகைச்சுவை உலகம், அமெரிக்கப் பயணங்கள், புத்தக வெளியீடுகள்… என்று
எங்களின் நட்புலகம் இன்றைக்கும் தொடர்கின்றது.
பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் பல்வேறு பரிமாணங்களை
அருகிலிருந்து பார்த்து வியந்து கொண்டிருப்பவன் நான்.
சொந்தக் குரலில் பாடும் நல்ல பாடக நடிகர், மேலும் மரபுவழிச் சங்கீதம்
தெரிந்த பாடகர், சிறந்த நடனக்கலைஞர், சிறந்த பன்மொழிக் கலைஞர், மற்றும்
ஒரு ஆக்ஷன் நடிகரும் கூட, மேலும் அவர் ஓர் ஒப்பற்ற ஒப்பனைக் கலைமிகு
நடிகர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குநர்,
மனிதம் போற்றும் மனிதர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
“கலைஞானிக்குள் கவிஞானி“
கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு கவிதைகளைப் புதுக்கவிதைகளாகச்,
சந்தக்கவிதைகளாகச் சுயமாய்ச் சிந்தித்துப் படைக்கும் ஆற்றல் மிகுந்த
கவிஞராகத் திகழ்ந்து வருகிறார். இவரின் கவிதைகள் அச்சு வடிவிலும் அவரது
கம்பீரமான குரலில் ‘ஒலிநாடா’ வடிவிலும் விரைவில் வெளிவர வேண்டும். அந்த
வகையில், கமல் ஒரு சிறந்த கவிஞராகவும் உள்ளார்.
கமலின் ஒரு கவிதை,
“ஏ சூரிய பகவானே!
நீ குந்தியின்
கர்ப்பத்திற்குக் காரணமாய் இருக்கிறாய்…
என் சோலார் வாட்ச்சை
ஓடவும் வைக்கிறாயே”
இப்படி எத்தனையோ கவிதைகள்.
‘விருமாண்டியில்’ வரும் ‘உன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை’
என்னும் அற்புதமான பாட்டு கமலின் கவிதைக் கைவண்ணமே.
மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதிலும்,
‘கொன்னக்கோல்’ என்று சொல்லப்படும், வாயினாலும், குரலினாலும் ஜதியோடு
அந்தக் கலையிலும் வல்லவர் கமல். சான்று ‘விஸ்வரூபம்’ படம் ‘உன்னைக்
காணாத’ எனும் பாடலில் வரும் ஜதிக்குரல் கமலின் குரலே.
இத்தனைக்கும் மேலாகக், கணினியை இயக்கவும், புதிய அறிவியல்
தொழில்நுட்பங்களைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யவும் எப்போதும்
எதையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட, ‘கமல் ஓர்
ஆராய்ச்சி மாணவராக’ என்றைக்கும் மிளிர்ந்து வருகிறார்.
இன்னும் ‘விரித்துரைத்தால் வேதாந்தமாகும்’ ‘தசாவதானி’ (பத்து
கலைகளில் வல்லவர்) கமல், ‘சதாவதானியாகும்’ (நூறு கலைகளில் வல்வலர்)
காலம் விரைவில் வரும்.