ஞானம் வந்திருச்சு…

இப்போதைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள். அவசரங்கள். இதனால் மனஇறுக்கம் கூடி விடுகிறபோது இதிலிருந்த நம்மை விடுபட வைப்பது நகைச்சுவை உணர்வே.
அதுதான் நம் மனசை லேசாக்குகிறது. நம் பிரச்சனைகளை இறகுபோல உணரவைக்கிறது. எல்லோருக்குமே இயல்பாக நகைச்சுவை உணர்வு இருக்கி;றது. இல்லை என்றால் ரசிக்க முடியாது.
நகைச்சுவைக்கென்று சூழலும் மனநிலையும் முக்கியம். சில திரைப்படங்களில் ஒரு நகைச்சுவை நடிகர் தோன்றியதுமே சிரித்து விடுவார்கள். பழைய படமாகிய ‘புதுமைப்பித்தன்’ னில் ஒரு காட்சி. படம் ஆரம்பித்ததும் கப்பலைக் காட்டுவார்கள். கொடியை அதில் ஏற்றும்போது, தலைகீழாக மேலே போவார் சந்திரபாபு. அந்தக் காட்சியே சிரிப்பதற்கானச் சூழலை உருவாக்கிவிடும்.
திருச்சி பேராசிரியராகிய ராதாகிருஷ்ணன் அவர்கள் தலையில் கட்டுக்குடுமி வைத்திருப்பார். மேடையில் தன்னைத்தானே அறிமுகப்படுத்தும்போதே; இப்படி ஆரம்பிப்பார். ‘தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு தடவை போய் இறங்கினதுமே ஒருத்தன் வந்து என்னைக் கும்பிட்டான். ‘என்னை நீ பார்த்திருக்கிறாயா?’ ன்னு கேட்டேன். ‘என்ன அப்படிச் சொல்லிப்பிட்டீங்க. பண்ணையார் வீட்டுக் கல்யாணத்திலே நீங்கதானே தவில் அடிச்சீங்க?ன்னு சொன்னான்’ என்று பேச்சை ஆரம்பிக்கும்போதே கூட்டம் களை கட்டிவிடும். முன்னாலிருக்கும் கூட்டம் ரசிக்கத் தயாராகிவிடும்.
சிலவீடுகளில் நுழைகிற கணவன்மார்கள் ‘காலிங்பெல்’லை அடித்துவிட்டு, மனைவி கதவைத் திறக்க வருவதற்குள் ஒளிந்து கொள்வார்கள். குழந்தைகளிடம் விளையாடுவார்கள். உடனே வீட்டுச் சூழ்நிலையில் இறுக்கம் குறைந்து கலகலப்பாகிவிடும்.
திருக்குறள் முனுசாமி ஓர் ஊருக்குப் போயிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு கடுமையான மழை. கூட்டம் நடத்த முடியவில்லை. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவருக்கோ வருத்தம்.
‘ஐயோ… இன்னிக்குக் கூட்டம் நடத்த முடியாது போலிருக்கே… மழை வந்துருச்சே…’ என்று அவர் வருத்தப்பட,
‘அதைவிடுப்பா. நான் எப்போ கூப்பிட்டாலும் வருவேன். மழை நீ கூப்பிடுறப்போ வருமா? வராது! சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு. சாப்பிட்டுக் கிளம்பறேன்!’ என்று சொல்ல, விழா ஏற்பாடு பண்ணியவருக்குத் திருப்தி. இவ்வாறு இக்கட்டிலும் கை கொடுக்கும் நகைச்சுவை உணர்வு.
நான் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். பெரிய அரங்கம். நல்ல கூட்டம். நான் பேசுகிறேன். ஆனால் கூட்டத்திற்குக் கேட்கவில்லை. சத்தம் போடுகிறார்கள். மைக்செட்காரர் வந்து எதைஎதையோ நோண்டினார். பாக்ஸை சரிபண்ணிவிட்டு மேடைக்கு வந்து என்னிடம் மெதுவாகச் சொன்னார்.
‘எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஸ்பீக்கர்தான் லூஸ்!’ நான் உடனே, ‘பாருங்க… என்ன அழகா ஸ்பீக்கர் தான் லூசுன்னு சொல்றார்’ என்று சொன்னதும், ஒரே சிரிப்பு.
இன்னொரு சமயம். காரைக்குடியில் திருமண வீடு. நான் வாழ்த்திப் பேச வேண்டியவன். நான் போகத் தாமதமாகிச் சாப்பாட்டுப் பந்தியே ஆரம்பித்துவிட்டது. கல்யாண வீட்டுக்காரருக்கு ஏமாற்றம் என்றாலும், ‘நல்லவேளை ஞானம் வராமப் போனாத்தான் ஆபத்து’ என்று, என் பெயரை வைத்து கிண்டலாகச் சொன்னார்.
பக்கத்திலிருந்த பொண்ணு வீட்டுக்காரர் டக்கென்று ‘வரவேண்டிய காலத்துல ஞானம் வந்திருந்தால் நல்லா இருக்குமேய்யா…’ என்று சொன்னாரே பார்க்கலாம்.
நகைச்சுவை உணர்வு, எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நெகிழ்வாக்கி விடுகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை.