ஜி.யூ.போப்

சமயப்பணி செய்ய இந்தியாவுக்கு, குறிப்பாகத் தமிழகத்துக்கு வந்த அயல்நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் பலரும் தமிழ்மொழியைக் கற்று, அதன் அருமையை உணர்ந்து சமயப் பணியோடு, தமிழ்ப் பணியையும் சிறப்பாகச் செய்தனர்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய கால்டுவெல், தமிழில் உரைநடையை அறிமுகம் செய்து தேம்பாவணி என்ற நூலை எழுதிய வீரமாமுனிவர். ரேனீஸ் ஐயர் இவர்களோடு நினைக்கத்தக்க தமிழ்ப்பணியைத் தமிழுக்குச் செய்து 42 ஆண்டுகள் தமிழகத்திலேயே வாழ்ந்தவர் ஜி.யூ.போப் என்று அழைக்கப்படுகின்ற ஜார்ஜ் யூக்ளோ போப் ஆவார்.
ஜி.யூ.போப் 1820ஆம் ஆண்டு பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார். இவருடைய தாய் தந்தையார் பெயர் ஜான் போப் – கேதரின் யூக்ளோ என்பதாகும். ஜி.யூ.போப்பின் உடன் பிறந்தவர்கள் பத்துப் பேர்களாவர். இவர் தமது 6ஆவது வயதில் தம் தாய் தந்தையரோடு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டார். சமயக்கல்வி அதிகம் போதிக்கப்பட்டது.
சிறுவயதிலேயே கடவுளுக்குத் தொண்டு செய்யவேண்டும். சமயப்பணி ஆற்றவேண்டும் என்று விரும்பினார் ஜி.யூ.போப். அக்காலத்தில் கிறித்தவ விவிலிய நூலான பைபிள் இரண்டு மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.
பழைய ஏற்பாடு ஹீப்ரு மொழியிலும் (ஏசுநாதர் பேசிய மொழி), புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. ஜி.யூ.போப் ஹீப்ரு, கிரேக்கம் இரண்டு மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். அத்தோடு இந்தியாவின் ஒரு பகுதியாகிய தமிழகத்தில் குறிப்பாகத் தென் தமிழகத்தில் சென்று சமயப்பணி செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். அதற்காக வடமொழியாகிய சமஸ்கிருதத்தையும், தென்மொழியாகிய தமிழையும் கற்கத் தொடங்கினார்.
1839ஆம் ஆண்டு ஜி.யூ.போப்பின் வேண்டுதலுக்கு ஏற்றபடி கிறித்தவ சங்கத்தார் சென்னைக்குச் செல்லும் மரக்கலம் ஒன்றில் அவரை அனுப்பி வைத்தார்கள். 8மாதங்கள் பிரயாணம் செய்து அவர் சென்னையை அடைந்தார். அந்த 8மாத காலத்திலும், அவர் இடையறாது தமிழ் மொழியையும், வடமொழியையும் கற்றுத் தேர்ந்தார்.
சென்னையில் ‘சாந்தோம்’ என்னுமிடத்தில் இருந்த திருச்சபையில் தம்முடைய சமயப்பணியை ஜி.யூ.போப் தொடங்கினார். அங்கிருந்தபோது திராவிட மொழியின் கிளைமொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவற்றை ஆராய்ந்து தெலுங்கு மொழியை மிகக் கடினமாகக் கற்றுத் தேர்ந்தார். பிறகு அவரது விருப்பப்படி தமிழ்நாட்டின் தென் பகுதியாகிய திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சாயர்புரத்திற்கு இவர் அனுப்பப்பட்டார். சாயர்புரம், தூத்துக்குடியிலிருந்து 16கி.மீ தூரத்திலுள்ள ஊர், கடற்கரைப் பகுதி, கடல் மணலும் பனை மரங்களும் இணைந்த பகுதியானதால் ‘தேரி’ என்று அதனைக் குறிப்பிடுவர்.
ஜி.யூ.போப் சாயர்புரத்தில் செய்த முதல்காரியம் ஒரு கல்விக்கூடத்தை நிறுவியதுதான். 1848இல் அங்கு ஒரு நூலகமும் நிறுவப்பட்டது. பின்னர் உயர் பள்ளியாக, கல்லூரி அளவிற்கு அது மாற்றப்பட்டது. தமிழ், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை அங்கிருந்தோர் கற்றார்கள்.
ஜி.யூ.போப் மிகக் கண்டிப்பான ஆசிரியர், அவர் பள்ளியில் என்ன கிடைக்கும் என்று கேட்டால் நல்ல படிப்பு, நல்ல உணவு, நல்ல அடி இவை மூன்றும் இருந்தால்தான் மாணவர்களை உருவாக்க முடியும் என்று அவர் சொல்வார்.
8ஆண்டுகளுக்குப் பிறகு உடல்நோயால் பாதிக்கப்பட்டதால் அவர் தம் தாய்நாடாகிய இங்கிலாந்திற்குத் திரும்பினார். 1850ஆம் ஆண்டு இங்கிலாந்தில் திருமணம் செய்துகொண்டு, மீண்டும் தமிழகத்தில் தஞ்சாவூருக்குத் தம் மனைவியோடு வந்து சமயப் பணியைத் தொடங்கினார்.
அக்காலத்தில் தமிழ்பயிலும் மாணவர்கள் தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களைப் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்ததைக் கண்ட இவர், சிறிய இலக்கண நூல்களைத் தமிழில் எழுதத் தொடங்கினார். இந்த இலக்கண நூல்கள் வினா – விடை முறையில் அமைந்திருந்ததால் மாணவர்கள் கற்பதற்கு அது மிக எளிதாய் அமைந்திருந்தது. இதைத் தவிர தமிழகத்திலிருந்த ஐரோப்பியர்கள் தமிழ்மொழியை எளிதாகக் கற்றுக்கொள்ள தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமி; அகராதிகளைத் தொகுத்தார்.
பள்ளிக்கூடங்களில் படிக்கின்ற மாணவர்கள் தத்தம் தாய்மொழியிலேயே கல்வி பயில வேண்டும் என்பது ஜி.யூ.போப் அவர்களின் திடமான கருத்து. அதனால், தான் உருவாக்கிய பள்ளிகளில் எல்லாம் தமிழ் மாணவர்களுக்கும், தமிழ் மொழியிலேயே நூல்களைக் கொடுத்து, தமிழ் மொழியிலேயே கற்பிக்க ஆணையிட்டார். இதற்காக தமிழ்ச் செய்யுள்களையெல்லாம் தொகுத்துத் தொகை நூல் ஒன்றையும் பதிப்பித்தார்.
திருக்குறள், நாலடியார், பழமொழி, நீதி நூல்கள், ஒழுக்கநெறி காட்டும் பாக்கள் இவற்றையெல்லாம் ஒன்றாகத் தொகுத்து, அதற்கு ‘தனிச்செய்யுள் கலம்பகம்’ எனப் பெயரிட்டுப் பதிப்பித்தார். அதோடு எவற்றையும் எளிமையாக உணர்ந்து கொள்ள செய்யுள் தவிர, உரைநடை நூல் அவசியம் என்றுணர்ந்து, தமிழில் எளிய உரைநடை நூல்களை எழுதி வெளியிட்டார்.
பள்ளி கல்லூரிகளுக்கு முதன்முதலில் பாடப்புத்தகங்களை வெளியிட்டவர் ஜி.யூ.போப் என்பதை நாம் மறக்கலாகாது.
பின்னர் தஞ்சாவூரிலிருந்து கிளம்பி உதகமண்டலம் சேர்ந்து அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1858இல் உதகமண்டலத்தில் ‘Store House’ என்னும் இடத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். பிற்காலத்தில் அது கல்லூரியாக வளர்ந்தது. தாம் அங்கிருந்த காலத்தில் மிகச்சிறந்த நூல் நிலையம் ஒன்றையும் அவர் உருவாக்கினார். குறிப்பாகச் சிறைக்கூடங்களுக்குச் சென்று அங்கு கல்லாத பேர்களுக்குப் பாடம் நடத்தினார்.
பின்னர் உதகமண்டலத்திலிருந்து பெங்க௵ருக்கு வந்து அங்கிருந்த ‘பிஷப் காட்டன் பள்ளி’யில் தலைமையாசிரியரானார்.
1882ஆம் ஆண்டு ஜி.யூ.போப் இந்தியாவிலிருந்து விடைபெற்று தன் தாய்நாட்டிற்குத் திரும்பினார். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஜி.யூ.போப் பேராசிரியரானார். அங்கு தமிழ், தெலுங்கு மொழி கற்போருக்கு அவரே ஆசிரியராக இருந்து கற்பித்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு நொடிப் பொழுதையும் அவர் வீணாக்கவில்லை. தமிழிலிருந்த மிகச்சிறந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அவர் முதன்முதலில் மொழிபெயர்த்தது திருக்குறளையே ஆகும்.
ஏறத்தாழ 4ஆண்டுகள் இம்முயற்சியில் இறங்கி, 1886இல் அரிய குறிப்புகளோடு திருக்குறள் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டார். அதில் குறளின் பெருமையைப் பற்றிக் கூறும்போது, ‘இந்நூல் வடசொற்கலப்பில்லாத தூய தமிழில் ஆக்கப்பட்டுள்ளது’ என்றும்,
‘தாழ்மை, அன்பு, மன்னிப்பு போன்ற கிறித்துவத்தில் சொல்லப்படுகின்ற குணங்கள் திருக்குறளில் காணப்படுகின்றன’ என்றும், ‘வேதம், கோபம், சாட்சி போன்ற வடசொற்கள் இல்லாமல் மறை, வெகுளி, கரி எனும் சொற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடுகிறார்.
திருக்குறளையடுத்து அவர் மிகுதியும் விரும்பி மொழி பெயர்த்தது நாலடியார் என்னும் நூலே ஆகும். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் 7ஆண்டுகள். ‘தமிழ் மக்களின் ஒழுக்க நெறியை மிகச் சிறப்பாகக் கூறுவது நாலடியார்’ எனக் குறிப்பெழுதுகிறார். பின்னர் தாம் மிகவும் உயர்வாக மதித்த ‘திருவாசகத்தை’ மொழிபெயர்க்கத் தொடங்கினார். அதனைச் செம்மையாக மொழிபெயர்த்து 1900ஆவது ஆண்டில் தம் 80ஆவது வயதில் தன் பிறந்தநாளான ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டார். பின்னர் மணிமேகலையை மொழிபெயர்க்கத் தொடங்கினார். ஆனால் அவ்வேலை முற்றுப்பெறவில்லை. புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகிய நூல்களை அவர் பதிப்பித்தார்.
1908ஆம் ஆண்டு இவ்வுலகத்திலிருந்து விடைபெற்ற அவர், அதிக நாட்கள் வாழ்ந்தது நம் தமிழகத்தில்தான். அதிகத் தமிழ் நூல்களை மொழிபெயர்த்து, உலகத்தார்க்கு தமிழின் பெருமையை அறியச் செய்தவரும் அவர்தான்.
ஜி.யூ.போப் சிந்தனையாலும், செயலாலும் ஒரு தமிழ் மாணவர்தான்.