சுனாமி – ஆழிப்பேரலை

உலகம் தோன்றிய நாள் முதலாக மனிதஇனத்திற்குக் கடலைக் காண்கிறபோதெல்லாம் மனதில் ஆனந்தமும், அச்சமும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனந்தத்திற்கான காரணம், முதல் உயிரினம் தோன்றியது (அமீபா என்ற ஒரு செல் பிராணி) கடலில்தான். எனவே பிறந்தவீட்டைப் பார்ப்பதுபோல மனதில் ஆனந்தம். அச்சத்திற்கான காரணம் கடல் கரைகள் அற்றது. எந்தநேரமும் பொங்கி எழலாம் என்கிற எண்ணம்தான். ‘நீர் மிகின் சிறையும் இல்லை’ என்கிறது ஒரு சங்கப்பாட்டு.
தரையில் இருக்கின்ற உயிரினங்களைப்போலவே ஆழ்கடலிலும் நுண்ணுயிர் தொடங்கி, மீன், ஆமை, கடல்பசு, கடற்குதிரை, கடல்பாம்பு, மற்றும் யானையைக் காட்டிலும் பெரிய உயிரினமான திமிங்கலமும் கடலில்தான் உள்ளன.
இக்கடலில் மீன்கள் மட்டுமல்லாமல் முத்துக்கள், பவளப்பாறைகள் போன்ற இயற்கைவளங்களும் நிறைந்து காணப்படுகின்றன. உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கக் கண்டங்கள் ஒன்றாக இருந்து பின்னர் காலப்போக்கில் பிரிந்திருக்கலாம் என ‘இடம்பெயரும் கண்டங்கள்’ என்ற நூல் குறிப்பிடுகிறது.
மனிதவாழ்க்கையின் தொடக்கத்தில் தரைவழிப்போக்குவரத்தும், நீர்வழிப்போக்குவரத்தும்தான் இருந்ததாக அறிகிறோம். இருபதாம் நூற்றாண்டில்தான் வான்வழிப்போக்குவரத்துகள் தொடங்கின. (1903 ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடிப்பு) வழக்கமாகக் கடல் அமாவாசை அன்றும் பௌர்ணமி அன்றும்தான் ஆர்ப்பரித்துச் சீறி எழும் என்கின்றனர் அறிவியலாளர்கள். நிலத்தில் இருப்பதைப்போலவே கடலுக்கு அடியிலும் எரிமலைகள் உண்டு. கடலுக்கு அடியில் பூகம்பங்களும் ஏற்படுவதுண்டாம்.
இத்தகைய கடல், எரிமலைகளால் பூகம்பங்களால்தான், சுனாமி என்னும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதாக அறிகிறோம். சுனாமி என்பது ஜப்பானிய சொல். இச்சொல் தமிழில் ஆழிப்பேரலை என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றது. தமிழகத்தில் ஆழிப்பேரலைகள் ஏற்பட்டதுக்கான ஆதாரங்களை ‘கடல் கொண்ட தென்னாடு’ என்ற நூல் விரிவாகக் கூறுகிறது.
நிலந்தரு திருவிற் பாண்டியன் ஆண்ட தெற்குப் பகுதிகளைக் கடல்சூழ்ந்து கொள்ளும்போதெல்லாம் அம்மன்னன் தன் தலைநகரை வடக்குநோக்கி மாற்றிக்கொண்டு வந்தானாம். பின்னர் அவன் வழிவந்த பாண்டியர்களுக்கு மதுரையே தலைநகரமானது என வரலாறு குறிப்பிடுகின்றது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமியை மீண்டும் இந்த நூற்றாண்டில்தான் (2004 டிசம்பர் 26ஆம் தேதிதான்) மக்கள் நேரடியாக அறிந்தார்கள். தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டது. இன்றைக்கும்கூட ஜப்பான், இந்தோனேஷியா, அந்தமான் போன்ற பகுதிகளில் சுனாமியின் தாக்குதல் எப்போதும் நிகழலாம் என்ற அச்சம் நிலவிவருகிறது. இத்தகைய சுனாமி குறித்த சில விளக்கங்களைக் கீழே காண்போம்.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலகஅளவில் ஒத்துழைப்பு அவசியம் என ஐ.நா. சபை வலியுறுத்துகிறது. இதற்காக அனைத்து உலகநாடுகளையும் ஒருங்கிணைத்து ஐ.நா. சபை கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு மாநாடு நடத்தியது.
அந்த மாநாட்டில் பேசியவர்கள் இயற்கைப் பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு, கல்வியறிவு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றனர். இயற்கைப் பேரிடர்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம் என்று வலியுறுத்தினர்.
ஐக்கிய நாடுகள் சபையில் சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பைப் பெருமளவில் குறைக்க முடியும் என்பதற்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி சுனாமி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள், அதுபோன்ற அவசரகாலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
இன்னொரு சுனாமி இனிமேல் வேண்டாம். இயற்கையோடு நாமும் விளையாட வேண்டாம்.