சிலேடை விருந்து
தமிழ்மொழிக்கு இனிமை தருவன உவமை, உருவகம், சொல்லடுக்கு, சந்தப்பாக்கள், உயர்வு நவிற்சி, சிலேடை என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மொழியும் இவ்வாறு தனக்கெனத் தனிச்சிறப்பைப் பெற்று விளங்கத்தான் செய்யும்.
தமிழில் ‘இரட்டுற மொழிதல்’ அல்லது ‘சிலேடை’ என்பது கேட்டுக் கொண்டிருப்பவர்களை, வாசிப்பவர்களைத் தன் வயப்படுத்தும் தன்மை உடையது எனச் சொல்லலாம். இச்சிலேடை, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும். இதில் செம்மொழிச் சிலேடை கற்றவர்க்கு மட்டும் எளிதில் விளங்குவது, மற்றது கல்லாதவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு தெளிவாய் அமைவது.
ஒருசொல், இருபொருள் தருமாறு வருவதே இரட்டுற மொழிதலாகும். மேடைக்கலையில் வல்லவர்களான கி.வா.ஜெகந்நாதன், கிருபானந்த வாரியார் போன்றோருடைய பேச்சில் மிகச் சரளமாகச் சிலேடைச் சொற்கள் புகுந்துவரும்.
ஒருமுறை கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னையிலிருந்து கிளம்பி அதிகாலை நேரத்தில் தான் பேசவேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்தார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க வந்தவர்கள், அழகிய பூமாலை ஒன்றை அவருக்கு அணிவித்தார்கள். உடனே அவர், ‘ஆஹா! இந்த ஊரில் காலையிலேயே மாலை வந்துவிட்டது’ என்றாராம். இங்கே மாலை என்ற ஒரு சொல் பூமாலை, மாலைநேரம் இரண்டுக்கும் பொருந்திவந்து நயம் தந்திருப்பது சிறப்பு.
அன்றைக்கு அவ்வூர் மேடையில் கி.வா.ஜ., பேசுவதற்காக அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் ஒலிபெருக்கிக் கருவி (மைக்) வைக்கப்பட்டிருந்தது. அவர் பேசத் தொடங்கியபோது அது சரியாக வேலை செய்யவில்லை. ஒலிபெருக்கிக்காரர், பல முயற்சிகள் செய்தும் ‘மைக்’ பயனற்றதாக இருந்தது. உடனே அவர் வேறு ஒரு மைக்கைக் கொண்டுவந்து வைத்தார்;. அதுவும் வேலை செய்யவில்லை. உடனே கி.வா.ஜ., அவர்கள் அந்த இரண்டு மைக்குகளையும் பார்த்து, ‘இம்மைக்கும் மறுமைக்கும் இவை பயனில்லை’ என்றாராம். இந்த இடத்தில் இம்மை, மறுமை என்பது இந்தப் பிறப்பு, மறுபிறப்பு என்ற ஒரு பொருள். மற்றது இம் – மைக்கு, மறு – மைக்கு என ஒலிபெருக்கி ஆகி வந்தது.
ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு இனிய பாடலைச் சொல்லி, ‘இதை இசையோடு பாடினால் நன்றாக இருக்கும்’ என்று கூறினார். உடனே வகுப்பிலிருந்த ஒரு மாணவன் எழுந்து, ‘ஐயா, உங்களுக்குப் பாடத்தெரியுமா?’ எனக் கேட்பதற்குப் பதிலாக, ‘ஐயா, நான் உங்களைப் பாடயில பார்க்கணும்’ என்றானாம் ஆர்வமாக.
‘பாடையில்’ என்றால் ‘பாடுகிறபோது’ என்றொரு பொருளும், இறந்தபிறகு தூக்கிச் செல்லப் பயன்படுகின்ற பாடையிலே என்ற மற்றொரு பொருளும் தந்து சிலேடை அமைகின்றது.
கிருபானந்த வாரியார் அவர்கள் கூட்டத்தில் மிக இனிமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிலர் கூட்டத்திலிருந்து எதற்காகவோ எழுந்து வெளியே சென்றார்கள். உடனே வாரியார் சுவாமிகள் பேசுவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு பிறகு சொல்லத் தொடங்கினார். ‘நீங்களெல்லாம் எனக்குச் ‘சொல்லின் செல்வர்’ என்று பட்டம் கொடுத்திருக்கிறீர்கள். இத்தனை நாட்களாக அந்தப் பட்டத்திற்கான பொருள் எனக்குப் புரியாமல் இருந்தது. இப்போது புரிந்துவிட்டது நான் சொல்லின் அவர் செல்வர் (போவார்கள்) அதனால்தான் ‘சொல்லின் செல்வர்’ என்றாராம்.
‘சொல்லின் செல்வர்’ என்கிற பட்டம் கம்பராமாயணத்தில் இராமபிரான் அனுமனுக்கு வழங்கிய பட்டமாகும். கிட்கிந்தா காண்டப் பகுதியில் தன்னிடத்திலே வந்துபேசிய அனுமனின் அறிவாற்றலைக் கண்டு வியந்து ‘யார்கொல் இச்சொல்லின் செல்வன்!’ என வினவியதாகக் கம்பர் தம் இராமகாதையில் குறிப்பிடுவார்.
இலக்கியங்களில் அதிலும் குறிப்பாகத் தனிப்பாடல்களில் சிலேடையை அதிகமாகக் கையாண்டவர் ஆசுகவியாக விளங்கிய காளமேகப் புலவரே ஆவார்.
ஆமணக்குக்கும் – யானைக்கும், வைக்கோலுக்கும் – யானைக்கும், பாம்புக்கும் – எலுமிச்சம்பழத்திற்கும், தேங்காய்க்கும் – நாய்க்கும் எனப் பல்வகையாக சிலேடைப் பாடல்களைப் பாடியிருப்பவர் காளமேகப் புலவர். எடுத்துக்காட்டாக ஒரு பாடலில்,
தீமையில்லாத திருமலைராயன் பட்டணத்தில் வாழுகின்ற என்தோழிப் பெண்ணே, தேங்காயையும், நாயையும் ஒப்பிட்டுப் பார்;த்தால் ஒன்றாகத்தானிருக்கும். எப்படித் தெரியுமா? தேங்காய்க்கு ஓடும் இருக்கும், அதனை உடைத்துப் பார்;த்தால் உட்புறம் தேங்காய் வெள்ளையாய் வெளுத்திருக்கும். எல்லோரும் விரும்புமாறு தென்னங்குலையாகத் தொங்கும்.
நாய் எப்படிப்பட்டது தெரியுமா? அது கொஞ்சதூரம் ஓடும்; பிறகு உட்கார்ந்திருக்கும் – அதாவது ஓடும் இருக்கும். நாயினுடைய உள்வாய் வெளுத்திருக்கும். விடாமல் குரைப்பதற்கு ஒருபோதும் நாணம் கொள்ளாது. அதனால் தேங்காயும் – நாயும் ஒன்றுதான் என்பதை,
“ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்காய் தில்லைத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்இணை செப்பு”
எனப் பாடிக் காட்டுகிறார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு கடைக்கு உணவருந்தச் சென்று, தோசை கொண்டுவரும்படிச் சொன்னாராம். தோசை வந்தவுடன் தொட்டுக்கொள்வதற்குச் சர்க்கரை (சீனி) வேண்டும் என்று கேட்டாராம். உடனே அந்தப் பணியாளர், ‘ஐயா, வாசலிலேயே எழுதி வைத்திருக்கிறோமே, நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கேட்டாராம். உடனே கலைவாணர், ‘அப்படியா! என்ன எழுதியிருக்கீங்க?’ என்றாராம்.
‘இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது’ என்று எழுதியிருக்கிறோம். ‘அப்படியா! ரொம்பச் சரி, இன்னொரு தோசை கொண்டுவா. அதுக்கு சர்க்கரை கொண்டுவா’ என்றாராம். உடனே பணியாளர் கோபமாக, ஐயா! இப்போதுதானே சொன்னேன்’, என்றவுடன், கலைவாணர், ‘நிறுத்து! என்ன எழுதியிருக்கு வாசல்ல இன்று – முதல் தோசைக்குச் சர்க்கரை கிடையாது. அதனால் ரெண்டாவது தோசைக்குக் கொண்டு வா’ என்று கேட்டவரையே மடக்கினாராம்.
ஆங்கில வார்த்தைகளை வைத்துக்கொண்டும் சிலேடையாகப் பொருள் கூறுவதுண்டு.
சிவபெருமான் குடியிருக்கிற கைலாய மலைக்கு, ஏன் அப்பெயர் வந்ததென்றால், இலங்கை வேந்தனாகிய இராவணன் ஒருமுறை தன் இருபது கைகளினால் அந்த மலையைத் தூக்க முயன்றானாம். அப்போது சிவபெருமான் கோபத்தில் தம் கால் பெருவிரலால் அம்மலையை அழுத்த, அவனது இருபது கைகளும் மலையில் மாட்டி அற்றுப் போய்விட்டனவாம். இப்படிக் கை – லாசானதால் (Lose) கை – லாஸ் என்று பெயர் பெற்றதாம்’, என வேடிக்கையாகச் சொல்வதுண்டு.
சொற்களை இருபொருள்படும்படி பிரித்தும், மயக்கியும் கேட்பவர்க்கும், வாசிப்பவர்க்கும் இனிமை தருமாறு சிலேடைகளைப் பயன்படுத்தித் தமிழ்மொழியின் இனிமைக்கு இனிமை சேர்த்தவர் பலர்.
சிலேடை விருந்து – சொல்லும்போது நாவிற்கு இனிமை, கேட்கும்போது செவிக்கு இனிமை.






