சிரிப்பதே தியானம்தான்!

எப்போதும் ‘உம்;’ என்று முகத்தைக் காங்கிரீட் தனமாக வைத்துக் கொண்டிருப்பவரிடம் நெருங்கிப் பேசப் பலரும் யோசிப்பார்கள்.
கொஞ்சம் சிரித்த முகமாக இருப்பவர்களிடம் பேச யோசிக்க மாட்டார்கள். சட்டென்று பேச்சின்மூலம் நெருக்கம் உருவாகி விடும். சுற்றுலாவுக்குப் போகும்போது, கலகலப்பான ஒருத்தர் இருந்தால் அந்தச் சுற்றுலாவே கலகலப்பாக ஆகிவிடும். அதற்காகவே அவருக்காகக் காத்திருந்து அவருடைய சவுகர்யத்திற்கேற்ப சுற்றுலா போகிறவர்களும் இருக்கிறார்கள்.
சில கனமான சந்தர்ப்பங்களையும் நகைச்சுவை கலந்த பேச்சு திசை மாற்றிவிடும். வின்சென்ட் சர்ச்சில் சீரியஸாக எதைப் பற்றியோ மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது கீழே இருந்த ஒருவர், காகிதத்தில் ‘முட்டாள்’ என்று எழுதி, சர்ச்சிலிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
அதை வாங்கிப் பார்த்த சர்ச்சில் சொன்னார், ‘யாரோ ஒரு கனவான் அவருடைய கையெழுத்தை மட்டும் போட்டு அனுப்பியிருக்கிறார்!’ உடனே மேடையில் கலகலப்பு.
சிரிப்பு என்பதே ஒரு தியானம் மாதிரிதான். மனசு லேசாக, அது அருமையான வெளிப்பாடு. சிரிக்கக்கூட ரொம்பவும் யோசிக்கிறார்கள் சிலர். ‘சிரிச்சு சிரிச்சு சீரழிஞ்சு போனான்’. ‘எதுக்குப் பல்லைப் பல்லைக் காட்டுற’ ‘சிரிப்பாய்ச் சிரிச்சுப் போச்சுய்யா அவன் வாழ்க்கை.; இந்த மாதிரிப் பிரயோகங்கள் நம்மிடம் இருப்பதால், பொதுஇடங்களில் வாய்விட்டுச் சிரிக்கத் தயங்குகிறார்கள். நகைச்சுவையைக் கேட்டால்கூட வாயைப் பொத்திக் கொண்டு தயக்கத்துடன் சிரிப்பார்கள் சிலர். சிரிப்பது இயல்பான வி~யமே ஒழிய, அது தவறான வி~யமா? பெரியவர்களைவிட, சிரிப்புக்குப் பக்கத்தில் நெருக்கமாக இருப்பவர்கள் குழந்தைகள். அவர்களைச் சிரிக்க வைக்கச் சிரமப்பட வேண்டியதில்லை. வழக்கமாக எந்த ஆஸ்பத்திரிக்கு ஒருவரைக் கொண்டு போனாலும்? அங்கு வழக்கமாக ஒரு ‘டயலாக்’ சொல்வார்கள். ‘ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்திருக்கலாமே…?’
இதன் நினைவாக ‘ஹியூமர் கிளப்’பில் சொல்லப்பட்ட ஜோக் இது: நோயாளியைக் கொண்டு போனவர்களிடம் ஒரு டாக்டர், ‘ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வந்திருக்கலாமே?’
அதற்கு நோயாளியுடன் வந்தவர் சொல்கிறார், “ஆக்ஸிடெண்ட் நடந்தே அரை மணி நேரம்தானே ஆகுது!”
‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ஒருவர் அடிக்கடி ‘எதை எதை எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி செய்யணுமோ, அதை அதை அந்தந்த நேரத்திலே அப்படி அப்படி செய்யணும்’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கு உதாரணமாக ஒரு ‘சீரியஸான’ ஜோக் இது… வயதான ஒருத்தர் கல்யாண வீட்டுக்குப் போனால், அடுத்துத் திருமணமாகப் போகிற பெண்களிடம் போய் கிள்ளுவார், நிமிண்டுவார். ‘அடுத்து உனக்குத்தான், உனக்குத்தான், தயாராக இரு’ என்பார். இப்படி பல திருமணங்களில் செய்ய, பலருக்கு அவர் மேல் ஏகக் கடுப்பு. அந்த சில்மி~க்காரரின் அண்ணன் இறந்து போய்விட்டார். இளசுகள் அவரிடம் போய், ‘அடுத்து உனக்குத்தான் தயாராக இரு’ என்று அதே டயலாக்கைப் பேச, அதிலிருந்து அவர் சில்மிஷம் பண்ணுவதில்லை.
குற்றாலத்துக்குப் போய் ஜாலியாகத் ‘தண்ணி’ போட்டு, ஐந்தருவிப்பக்கம் நின்றுகொண்டு ஒரு குடிமகன் கேட்டாராம், ‘இதிலே எந்த அருவியில வெந்நீர் வரும்ங்க’. சந்தர்ப்பங்களும், அதற்கேற்ற பொறுமையும், எரிச்சல்படாத மனநிலையும் இருந்தால், நம்மைச் சுற்றி இப்படி நடக்கிற பலவற்றை இரசிக்க முடியும்.
தானத்தில் சிறந்தது நிதானம்.
பூக்களில் சிறந்தது சிரிப்பூ!