சந்தேகப் பேய்…

               ஒருமுறை நண்பர்களுடன் கொடைக்கானல் கிளம்பினோம். என்னைச் சேர்த்து ஐந்து பேர். இருக்கிற காசை வைத்துக்கொண்டு, சங்கடங்களைக் கூட, சந்தோஷமாக எடுத்துக்கொள்ளும் வயது அப்போது. நாங்கள் ஐந்து பேருமே, கொடைக்கானலை அப்போதுதான் பார்க்கிறோம்.

               நாங்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும், அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் எங்கள் தோற்றத்தைப் பார்த்தவுடன், சடாரென்று கைடாக மாறி, எங்களுக்கு வழிகாட்ட, தங்க, உணவு ஏற்பாடு செய்யத் தயாராகி விட்டார். தங்குவதற்கு ஊருக்கு நடுவிலிருந்தால் அதிக வாடகை ஆகுமென்று மரங்களடர்ந்த தோப்புக்கு நடுவே, ஏற்பாடு செய்து கொடுத்தார்.

               அது நெஞ்சம் மறப்பதில்லை’ வீடு போல் இருந்தது. மாடியறையில் தங்குதற்கு ஏற்பாடு செய்துவிட்டு, ஒரு திடுக்கிடும் செய்தியையும் சொன்னார். அந்த அறையில் ஒரு பெண் தூக்கு மாட்டிச் செத்ததாகவும், அந்த உடலைப் புதைக்காமல் எரித்துவிட்டதால் பேய் வருவதற்கான சாத்தியம், சத்தியமாக இல்லையென்று, சொல்லிவிட்டு, எங்களில் இரண்டுபேரைக் கூட்டிக்கொண்டு ஒரு மலையாள மெஸ்ஸில் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய அழைத்துச் சென்றார்.

               மற்ற மூன்று நண்பர்களும், தாங்கள் தூங்கப் போவதாகச் சொல்லி அங்கேயே தங்கிவிட்டார்கள். நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அறைக்குப் போனோம். அது மலைப் பிரதேசமானதால், மாலை ஐந்து மணிக்கே இருட்டிவிட்டது. அந்தக் கைடாகப்பட்டவர் காலையில் வருவதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

               நாங்கள் வீட்டை நெருங்கியதும், திடுக்கிட்டுப் போய்விட்டோம். அப்படி ஒரு இருட்டில், அப்படி ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. பிறகு நானும், நண்பனும் தட்டுத் தடுமாறிப் போய், அந்த வீட்டுக் கதவை ‘தட் தட்’ டென்று சத்தத்துடன் தட்டத் தொடங்கினோம். உள்ளிருந்து ஒரு அசைவும் இல்லை. நாங்கள் விடாமல் தட்டிய தட்டில் அந்தப் பகுதியில் எந்தப் பேய் இருந்தாலும், ஓடிப் போயிருக்கும்.

               வெகுநேரம் சத்தம் வராமல் இருக்கவும், கூட இருந்த நண்பன் ஒரு கருத்துச் சொன்னான். மூணுபேரும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு இருப்பாங்களோ என்று பயத்தோடு கேட்டான். வேறு வழியில்லாமல் நான் அந்த வீட்டுப் பின்பக்கமாகப் போய், பாத்ரூம் கதவு வெளிப்பக்கம் வழியாக, உள்ளே குதித்தால், பாத்ரூம் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. நான் திரும்ப மேலே வரமுடியாமல், உள்ளிருந்து கதவைத் தட்ட, வெளியிலிருந்த அந்த நண்பனும் தட்ட, உள்ளே படுத்திருந்த மூன்றுபேரும் எழுந்து, போட்ட அலறலில் பல பேர் ஓடி வர, ஒரு வழியாக எல்லாக் கதவையும் திறந்து, நாங்கள் எல்லோரும் சந்தித்தபோது இரவு மணி பத்து. அதற்குப் பிறகு எந்தப் பேய்க்குத் தூக்கம் வரும்?

               ஆனால், அந்த ஐந்து நாட்களும் ஒருவரையொருவர் பேயாகச் சந்தேகப்பட்டதை நினைத்து, இப்போதும் தொலைபேசியிலும், கடிதங்களிலும் பகிர்ந்து சிரிப்பதுண்டு.

              ஏன் கடிதம் எழுதுகிறீர்கள்? என்று கேட்பீர்கள். பேய்க்குத்தான் படிக்கத் தெரியாதே! இதை யாரும் பேயிடம் சொல்லவேண்டாம்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.