சக்தி தருவாய் சக்தி…

இந்த உலகத்தில் நம்மை அறிமுகப்படுத்துவதும், உலகத்தாரை நமக்கு அறிமுகப்படுத்துவதும் தாய்தானே! அவளின்றி ஓர் அணுவும் அசையாது. தாயின்றி உலகம் தனித்து இயங்காது. தாய்ப்பாசம் என்பது உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் உண்டு. இதில் உயர்திணை, அஃறிணை பேதமில்லை. நிலத்தில், நீரில், ஆகாயத்தில் என எங்கு வசிக்கும் உயிரினங்களுக்கும் உற்ற துணை தாய்தான்.
உலகைத் துறந்த சந்நியாசிகள்கூட தாய்ப்பாசத்தை மறக்கவில்லை. ஆதிசங்கரர், ‘காலடி’ எனும் இடத்தில் தான் துறவு மேற்கொள்வதற்காகத் தாயிடம் அதற்கு ஒப்புதல் பெறும்பொருட்டு, ஒரு முதலைத் தன் காலைப் பிடித்துக்கொள்வது போலவும் சந்நியாசத்தை மேற்கொண்டால்தான் பிடித்த காலை விடமுடியும் என்று அந்த முதலை சொல்வதாகக் கூறித், தாயின் ஒப்புதலைப் பெறுகிறார். அப்போதும்கூட ‘உன் கடைசிக் காலத்தில் உன்னைக் காண வருவேன்’ என்று வாக்குறுதியும் தந்து அதை நிறைவேற்றவும் செய்கிறார்.
பட்டினத்தடிகள் பொன்னும் பொருளையும் துறந்தார். கைப்பிடித்த மனைவியையும் மறந்தார். ஆனால் தாயின் கடைசிக்காலம் வரை அந்த ஊரிலேயே ஆண்டியாகத் திரிந்தார். தாய் மறைந்தபோது ‘எப்பிறப்பில் காண்பேன் இனி’ எனக் கலங்கினார். மேலும் விறகுக்கட்டையில் தாயின் உடல் பட்டுவிட்டால் வேதனை ஏற்படுமே என வாழைத்தண்டுகளை வைத்து,
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே!
எனத் தாயை வணங்கி அஞ்சலி செய்ததைப் பார்க்கிறோம்.
முருகப்பெருமானை உருவாக்கியவர் வேண்டுமானால் சிவபெருமானாக இருக்கலாம். ஆனால் சக்தியே தன் சக்தி முழுவதையும் திரட்டி சக்திவேலாக குமரன் கையில் கொடுத்தாள். அதனால்தான் இன்றைக்கும் பராசக்தியிடம் வேல் பெற்ற திருவிழா நவராத்திரிகளில் கொண்டாடப்படுகிறது.
பிறந்த குழந்தையை பாராட்டுவது சீராட்டுவது ஒருவகை என்றால், கருவிலிருக்கும் முகம் தெரியாத குழந்தையைச் சுமந்து மகிழ்கிறாளே அவளுடைய அந்தத் தியாகத்திற்கு ஈடேது இணையேது. ஆண்கள் உடல்வலிமை உள்ளவர்கள்தான். ஆனால் மனவலிமைமிக்க பெண்ணினத்தால்தான் மகப்பேறு எனும் பிரசவவலியாக வேதனையைப் பொறுத்துக் கொள்ள முடிகிறது. அந்தத் துயரம் மீண்டும் வருமென்று தெரிந்தாலும் அதற்கு அஞ்சாமல் மீண்டும் மீண்டும் அவள் குழந்தைகளைச் சுமப்பதால் அல்லவோ இந்த உலகில் உயிர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.
தாயால் வளர்க்கப்பட்டவர்கள் எல்லோருமே தரணியில் புகழ்பெற்றார்கள் என்பது வரலாறு. சிவாஜியின் தாயாரான ஜீஜாபாய் தன் மகனுக்கு வீரக்கதைகளைச் சொல்லி அச்சத்தைப் போக்கியதோடு மகாராஷ்டிராவின் மாவீரராக அவரை மாற்றிக் காட்டியதும் அப்பெருமாட்டிதான்.
சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு முறையும் தாயார் தன்னிடம் தோற்கும்போது, ‘ஏனம்மா! நீங்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறீர்கள்’ என்று சிவாஜி கேட்க, ‘என் மகன் விளையாட்டில் கூட தோற்கக் கூடாது’ என்று கூறினாராம் அந்தத் தாய்.
இதேபோல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக இருந்து பின்னர் தேசப்பிதாவாக மாறிய மகாத்மா காந்தியடிகள் சத்தியாகிரகத்தையும் உண்ணாவிரதம் மாண்பினையும் தன் தாயிடம் இருந்தே கற்றுக்கொண்டாராம்.
அவருடைய தாயார் விரதநாட்களில் சூரியனை வணங்காமல் உணவு உண்ண மாட்டாராம். அதனால் காந்தியடிகள் சிறுபிள்ளையாக இருந்தபோது வாசலிலே அமர்ந்து சூரிய உதயத்தைப் பார்த்தவுடன் தாயாரை அழைக்க ஓடுவாராம். தாயார் வெளியே வருவதற்குள் சூரியன் மேகத்துக்குள் மறைந்து விடுமாம். சூரிய நமஸ்காரம் செய்ய முடியாத அந்தத் தாய் அன்றைக்கு உணவு உண்ண மாட்டார்களாம். இப்படி இரண்டு மூன்று நாட்களானாலும் தன் தாய் உண்ணாமல் இருக்கும் நிலையைக் கண்டுதான் காந்தியடிகள் பிற்காலத்தில் உண்ணாவிரத நோன்பினை தயங்காது மேற்கொண்டார் என அறிகிறோம்.
போர்க்களத்துக்குச் சென்ற அந்த வீரனுடைய முகம் வெடிகுண்டால் கருகிச் சிதைந்துபோனது. குரலும் பேசமுடியாத வண்ணம் போனது. ஆனாலும் அவன், அவன் தாயை, மனைவியைப் பார்க்க விரும்புகிறான். அப்போது அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் ‘என்னைப் போரில் காப்பாற்றிய உயிர் நண்பன் ஒருவன் நம் ஊருக்கு வருகிறான். எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. நீங்கள் அவனை நம் வீட்டு மனிதர் போல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று எழுதி அனுப்பிவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து ஊருக்கு வருகிறான்.
தாயாரையும் மனைவியையும் அவனுக்கு அடையாளம் தெரிகிறது, அவனை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டார்களா எனத் தெரியவில்லை. ஆனாலும் அன்பாகப் பார்த்து வழியனுப்பி வைத்தார்கள். ஊருக்குச் சென்றபோது அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் அவனுடைய தாயார் எழுதியது. ‘மகனே! வந்தது நீதான் என்பதை நாங்கள் அறியமாட்டோமா! உன்முகமும் குரலும் மாறிப்போனாலும் உன் வாசத்தை நாங்கள் மறப்போமா!’ என்ற கடித வரிகளை படித்த மகன் குலுங்கிக் குலுங்கி அழுதான். இது ஒரு ரஷ்யச் சிறுகதை.
தாய் என்பவள் தன் பிள்ளைகளை பாசத்தால் மட்டுமல்ல வாசத்தாலும் அறிவாள். உலகெங்கும் இருக்கிற அன்னையரை வணங்குவோம்.
அன்னை நம்மைக் காக்கும் காப்பகம்.
நமக்குப் பாலும் உணவும் தருகிற உணவகம்.
நாம் துன்புறும்போது அதிலிருந்து காக்கிற மருந்தகம்.
எனவே அகத்தில் இருக்கும் அன்னையை ஜெகத்தினில் வணங்குவோம்.
அன்னை ஓர் ஆலயம்!