கே.எம்.முன்ஷியின் ஜெய் சோம்நாத்….

இந்தியா ஒரு பண்டைய தேசம் என்பதும், அறிஞர்களும் ஞானிகளும் நிறைந்த தேசம் இதுவென்பதும் உலகோர் ஏற்றுக்கொண்ட உண்மை. இதை மகாகவி பாரதி தன்னுடைய பாடலிலே சொல்லும்போது
ஞானத்திலே பர மோனத்திலே – உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர்நாடு………
என்று கூறுவார்.
தென்னாடாகிய தமிழகத்திற்கு மூவாயிரம் ஆண்டு இலக்கிய வரலாறு உண்டு. இதேபோன்று வடஇந்தியாவிலும் வேதகால நாகரீகம் தொடங்கி, இதிகாசங்களைத் தோற்றுவித்த வால்மீகி, வியாசர், காளிதாசர், பாரவி போன்ற படைப்பாளப் பெருமக்களை கொண்ட வரலாறு அங்கும் உண்டு.
இன்றைக்கும்கூட வி.ச.காண்டேகரை, சரத்சந்தரை இந்தியமக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்தவகையில் குஜராத்தில் 1887இல் தோன்றிய கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (கே.எம்.முன்ஷி) அவர்களுடைய தேசப்பணியும், இலக்கியப்பணியும், ஆன்மிகப்பணியும் இந்திய வரலாற்றில் இன்றைக்கும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறன. இவர் நாட்டுப்பற்றாளராக இருந்ததோடு காந்திய கொள்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.
அதேசமயத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் இந்திய சமஸ்தானங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முயன்றபோது, அதற்குத் துணைநின்ற பெருமையும் கே.எம்.முன்ஷி அவர்களுக்கு உண்டு. இவர் உத்தரப்பிரதேசத்தில் கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் சிறந்த வழக்கறிஞரும்கூட. இவருடைய முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டதே இன்று புகழோடு விளங்குகின்ற பாரதிய வித்யா பவன். இவையெல்லாவற்றுக்கும் மேலாக இவர் உலகமக்களால் போற்றப்படுவதற்கு மிக முக்கிய காரணம் கிருஷ்ணனைக் குறித்து இவர் எழுதிய ஏழு பாகங்களைக் கொண்ட நூல்களும், சோம்நாதபுர ஆலயத்தின்மீது 17முறை படையெடுத்த கஜினி முகமதுவின் செயல்பாடுகளை ‘ஜெய் சோம்நாத்’ என்ற பெயரில் இவர் எழுதிய வரலாற்று நவீனமும்தான் இவரது நிலைத்தப் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன.
நான் பள்ளியில், கல்லூரியில் படிக்கிற காலங்களில் சரித்திரக் கதைகளையும், பயண நாவல்களையும் வாழ்க்கை வரலாறுகளையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பேன். இவற்றுள் என்னால் மறக்கமுடியாத வரலாற்று நாவல் தமிழில் எப்படி கல்கி எழுதிய பொன்னியின் செல்வனோ, கன்னடத்தில் எப்படி மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் ஐயா எழுதிய சிக்க வீர ராஜேந்திரா நாவலோ அதைப்போன்றே கே.எம்.முன்~p குஜராத் மொழியில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஜெய் சோமநாத் நாவலும் ஒன்றாகும்.
இந்த நாவல் மட்டும் பாகுபலியின் இயக்குநர் ராஜமௌலி மற்றும் பத்மாவதி பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி போன்றவர்கள் கையில் கிடைத்தால் மிகப் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக நம் கண்முன்னே இப்போது அமையும் என்பது உண்மை.
இந்த நாவல் தொடங்குகிறபோது கஜினி முகம்மதுவின் படையெடுப்புக்கு முந்தைய காலத்தில் தொடங்குகிறது. அப்போது அவ்ஆலயத்தை நாமே நேரில் பார்ப்பதுபோல வர்ணனை செய்திருப்பார் கே.எம்.முன்ஷி. கஜினி முகம்மது படையெடுத்து வருகிறார் என்பதை அப்போது ஆண்ட மன்னர்கள் நம்ப மறுத்தார்கள். ஏனென்றால் பினாக பாணியாகிய சிவபெருமானின் அருள் தங்களுக்கு இருக்கிறது என்று பரிபூரணமாக நம்பினார்கள்.
அதற்குமேலும் சகாரா போன்ற பாலைவனத்தைப் பெரும் படையோடு குடிநீர் இல்லாமல் கடக்க முடியாது என்பதை உறுதியாக நம்பினார்கள். ஆனால் கஜினி முகம்மது ஒரு லட்சம் ஒட்டகங்களை வரிசையாக நிறுத்தி அதன் முதுகில் இரண்டு பக்கங்களிலும் தோல்பைகளில் நீர்நிரப்பி, வீரர்களின் தாகத்தைத் தணித்து சோமநாதபுரத்திற்குள் நுழைந்து அந்த ஆலயத்தைக் கொள்ளையடித்த வரலாற்றை ஒருமுறை அல்ல இரண்டுமுறை அல்ல பதினேழுமுறை அவ்ஆலயம் கொள்ளையடிக்கப்பட்ட செய்தியை இந்நாவல் விவரிக்கும்போது படிக்கின்ற நாம் நடுநடுங்கிப் போகிறோம்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் அழிந்துபோன அந்த ஆலயத்தை மீட்டுருவாக்கம் செய்து கும்பாபிேஷகம் செய்தபோது நம் கே.எம்.முன்ஷியும் உடனிருந்திருக்கிறார். தற்போது பிரதமர் மோடி அவர்கள் அவ்ஆலயத்தை மேலும் பொழிவுறச்செய்தார் என்பதை நம் காலத்தில் நாம் அறிகிறோம். இந்த வரலாறுகளைத் தெரிந்துகொள்ள ஜெய் சோம்நாத் நாவலை ஒருமுறை படித்துப் பாருங்கள். இந்நாவலைப் படைத்த கே.எம்.முன்ஷியைப் பற்றி இன்னும் சில விரிவான தகவல்களைக் கீழே காண்போம்…
கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (கே.எம்.முன்ஷி) குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற கல்வியாளர், அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். பல்முனைத் திறமையாளர். இவர் 1887ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள பரூச் நகரில் பிறந்தார்.
தொழில்முறை வழக்கறிஞரான இவர் பின்னாளில் இலக்கியம் மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டார். குஜராத் இயக்கத்தில் மிகவும் அறியப்பட்டவர். காந்தியின் இந்திய வருகைக்குப் பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் சேர்ந்து முழுமூச்சுடன் ஈடுபட்டார். பலமுறைகள் சிறை சென்றிருக்கும் இவர் உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும்போது சர்தார் படேல் இவரைக் கவர்ந்தார். படேலின் தீரமும், மனஉறுதியும் இவரைப் பெருமளவு ஈர்த்தது.
1930ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளியில் உறுப்பினராய் இருந்தார். மகாத்மா காந்தியின் ஆசியுடன், கே.எம்.முன்ஷி 1938இல் பாரதிய வித்தியா பவன் எனும் கல்வி அறக்கட்டளையை நிறுவினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை அமைக்கும்போது அம்பேத்கர் தலைமையில் இருந்த குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். இவை அனைத்திற்கும் மேலாக குஜராத்தில் சோம்நாத் சிவன் கோவிலைப் புனரமைத்து மீண்டும் கும்பாபிேஷகம் நடந்து மக்கள் தரிசனத்திற்குத் தயார் செய்யும் வேலையை சர்தார் படேல் செய்ய ஆரம்பிக்கும்போது இவர் பின்னிருந்து அதற்கு ஆவன செய்து கோவிலைச் சீரமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடித்து, சோம்நாத் கோயிலை மீண்டும் மக்களுக்கு அர்ப்பணித்தார்.
கே.எம்.முன்ஷி 1952 – 57 வருஷங்களில் உத்தரப் பிரதேசத்தின் கவர்னராக இருந்து வந்தார். அரசியல் தவிர, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் இயற்கையை நேசிக்கும் ஒரு ரசிகரும் ஆவார்.
முன்ஷி, கன்ஷ்யாம் வியாஸ் என்ற புனைப்பெயருடன், குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தார். குஜராத்தின் சிறந்த இலக்கியவாதிகளுள் ஒருவராக நற்பெயரைப் பெற்றார். ஒரு எழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும் இருந்த முன்ஷி, பார்கவா என்ற குஜராத்தி மாத இதழைத் தொடங்கினார். யங் இந்தியாவின் இணை ஆசிரியராக இருந்த அவர், 1954இல் பாரதிய வித்யா பவனால் வெளியிடப்படும் பவன்ஸ் ஜர்னலைத் தொடங்கினார். முன்ஷி குஜராத்தி சாகித்ய பரிஷத் மற்றும் இந்திய சாகித்ய சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார்.
இவற்றைத் தவிர இவர் ஒரு பெரும் இலக்கியவாதியாகவும் இருந்து வந்தார். தம் சொந்த மாநிலமான குஜராத்தின் மேல் பெரும் ஈடுபாட்டுடன் இவர் அதன் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார். முன்ஷி, தனது வரலாற்று நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக அவரது முத்தொகுப்பு படன் – நி- பிரபுதா (படனின் மகிமை), குஜராத் – நோ – நாத் (குஜராத்தின் இறைவன் மற்றும் மாஸ்டர்), மற்றும் ராஜாதிராஜ் (ராஜாக்களின் ராஜா). அவரது மற்ற படைப்புகளில் ஜெய் சோம்நாத் (சோம்நாத் கோவிலில்,), கிருஷ்ணாவதாரம் (கிருஷ்ணர் மீது), பகவான் பரசுராமன் (பரசுராமன் மீது), மற்றும் தபஸ்வினி (தி லுர் ஆஃப் அதிகாரம்) ஆகியவை இந்திய சுதந்திர இயக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட கற்பனையான இணையான நாவல் மகாத்மா காந்தி. முன்ஷி ஆங்கிலத்திலும் பல குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதினார்.
சோம்நாத் கோயிலின் மீது முகமது கஜினி தாக்குதல் நடத்தியது குறித்த முன்ஷியின் எண்ண ஓட்டத்தை அவரது “ஜெய் சோம்நாத்” புதினத்தில் காண முடியும்.
சிறுவயது முதல் கிருஷ்ணர் பற்றிய பல்வேறு கதைகளைக் கேட்டு வந்த இவர், அதன் அடிப்படையில் கிருஷ்ணாவதாரம் பற்றிய ஏழு புத்தகங்களை எழுதியுள்ளார்.
முன்ஷி தனது படைப்புகளை குஜராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் எழுதினார். இந்திய சுதந்திரத்திற்கு முன், முன்ஷி இந்திய தேசிய காங்கிரஸின் ஒரு பகுதியாக இருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் சுதந்திர கட்சியில் சேர்ந்தார். முன்ஷி, இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர், இந்தியாவின் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் மற்றும் உத்தரப்பிரதேச ஆளுநர் போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
தமிழில் கல்கியின் பொன்னியின்செல்வன் என்றால், குஜராத்தில் கே.எம்.முன்ஷியின் ஜெய் சோம்நாத்.