கேட்கப்படாத கேள்விகள்… சொல்லப்படாத பதில்கள்…

‘என்னப்பா… சவுக்கியமா?’ என்று யாரையும் பார்த்ததும் நாம் பேசத்துவங்குவது ஒரு கேள்வியிலிருந்துதான்.

               கேள்வி கேட்கும் மரபு வேதகாலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. அது புராணங்களிலும் இருக்கிறது. கேள்வி – பதில் பகுதியிருந்தால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கேள்வி கேட்டால் தலை வெடித்து விடும் என்றும் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.

               விக்கிரமாதித்தன் கதைகளில் மரத்தில் தொங்கும் வேதாளம்கூடக் கேள்வி கேட்கும். மகாபாரதத்தில் குருேஷத்திர யுத்தத்திற்கு முன்பு, கிருஷ்ணரிடம் அர்ஜுனன் கேட்கிற கேள்வியும் பதிலும்தானே பகவத்கீதை.

               வில்லிபாரதத்தில் நச்சுப் பொய்கைச் சருக்கத்தில் ‘கேள்வி – பதில்’ பகுதி அவ்வளவு அருமையாக இருக்கும். அதில் ஒரு கேள்வி வரும். ‘உலகத்திலேயே வேகமானது எது?’ இதற்கு மனம்’ என்று பதில் சொல்வான் தர்மன். அது போலவே எமனோடு நசிகேதன் கேள்வி கேட்பான். இப்படிப் பல புராணங்களில் கேள்வி – பதில் பகுதிகள், அந்தக் காலத்திய தர்க்கத்தை வெளிப்படுத்துகிறபடி அமைந்திருக்கின்றன.

திராவிட இயக்கமும் – அது உருவானபோது கேள்வி கேட்பதை வலியுறுத்தியது. பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், ‘நறுக்’ கென்று அவர் சொன்ன பதில்களும் பிரபலமானவை.

               பெரியாரிடம் ஒரு சமயம் கேட்டார்கள் ‘மதம் கொடியதா? சாதி கொடியதா?’

               நிதானித்து அவர் சொன்னார் ‘சாதிதான் கொடியது’

               ‘ஏன்’ மறுபடியும் கேட்டார்கள்.

               ‘மதம் மாறலாம். நம் நாடு ஒப்புக்கொள்ளும். ஆனால் அப்படி சாதி மாற முடியுமா? இந்த மாதம் ஒரு சாதி, அடுத்த மாதம் ஒரு சாதி, அடுத்த மாதம் ஒரு சாதி என்று மாற முடியுமா? வேர்கள் அதிகம் இருப்பது சாதியில்தான். அதுதான் கொடியது’ என்றார் பெரியார்.

               சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆரும்., கலைவாணரும் பாட்டாலே கேள்வி கேட்டு பதில் சொல்கிற ‘லாவணி’ பிரமாதமாக இருக்கும். அதற்கு முன்பே என்.எஸ்.கேயும், டி.எஸ்.துரைராஜும் ஒரு படத்தில் ‘லாவணி’ பாடியிருப்பார்கள். அதற்குப் பிறகு திருவிளையாடல்’ படத்தில் சிவனும், தருமியும் கேள்வி கேட்டுப் பதில் சொல்கிற காட்சி மிகவும் ரசிக்கப்பட்டது.

               இப்போது தொலைக்காட்சியிலும் ரேடியோவிலும் ‘வினாடி வினா’ என்கிற பெயரில் சாகடிக்கிறார்கள். “சூப்பர் ஸ்டார் நடித்த மூன்றெழுத்து வெற்றிப்படம் என்ன” என்று தெளிவான கேள்வி கேட்டதும்,

               ‘க்௵’ கொடுங்களேன் என்று கெஞ்சுவார்கள் நேயர்கள். முதல் எழுத்து ‘மு’ கடைசி எழுத்து ‘து’ என்று சொன்னதும், ‘முத்து’ என்று விடையை உடனடியாக ‘சமயோஜிதமாக’க் கண்டுபிடித்துச் சொல்லுவார்கள் நேயர்கள். ‘அருமையான விடை’ என்று பரவசப்படுவார் அறிவிப்பாளர்.

இன்னொரு தொலைக்காட்சி வினாடி வினா நிகழ்ச்சி. ‘இந்தியாவின் முதல் பிரதமர் யார்?’ கேட்பார் அறிவிப்பாளர். பதில் சொல்ல வேண்டியவர்கள் விழிப்பார்கள்.

               ‘சார்… ஒரு க்௵ சார்’

               அவரோட முதல் எழுத்து ‘நே’, கடைசி எழுத்து ‘ரு’.

               அப்படியும் விழிப்பார்கள்.

               கூடுதல் டிப்ஸாக ‘நே’ எழுத்துக்கும் ‘ரு’ எழுத்துக்கும் இடையில் எந்த எழுத்தும் இல்லை என்று அறிவிப்பாளர் சொன்னதும், ‘நேரு’ என்று கண்டுபிடித்துச் சொல்லிவிட்டு கைதட்டுவார்கள் நேயர்கள். ‘சரியாகச் சொல்லி விட்டீங்களே… சபாஷ்’ போடுவார் அறிவிப்பாளர்.

               இந்தவிதமான கேள்வி பதிலால் எப்படி அறிவு வளரும்?

               ‘நதியெங்கே போகிறது’

               ‘கண்களிலே நீர் எதற்கு’ என்ற கேள்வி பதில் பாணியில் பல பாடல்கள் இங்கிருக்கின்றன.

               இருந்தாலும், வகுப்பறைகளிலும், சமூகத்திலும் எத்தனையோ கேள்விகள் எழுப்பப்படாமலும் எத்தனையோ பதில்கள் சொல்லப்படாமலும் இருந்து கொண்டே இருக்கின்றன.

               அது வேறு கதை!

               எல்லாக் கேள்விகளுக்கும் எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லோராலும் பதில் சொல்ல முடியாது. பதில்களும் கிடையாது. இதுதான் உண்மை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.