குருவே வழிகாட்டி…. வாழ்வின் ஒளிகாட்டி…

‘கற்றது கைம்மண் அளவு….. கல்லாதது உலகளவு…’
இது பழங்காலத்தில் நம்முடைய ஒளவைப் பாட்டி சொன்ன வார்த்தை.
‘அப்ப எவ்வளவு நாள் படிக்கிறது?’
‘இதுல சந்தேகம் என்ன?’
‘அதுக்கப்புறம் படிக்க வேண்டாமா?’
இப்படிப் பலபேர் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம். ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் பெருமையாகச் சொன்னார். ‘எம் பையன் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்!’
‘அடடே அப்படியா? அப்புறம் என்ன செய்யப்போறீங்க?’
‘இனி என்ன, செகண்ட் கிளாஸ்ல (அதாவது இரண்டாம் வகுப்புலையாம்) சேர்க்க வேண்டியதுதான்’ என்றார்!.
அக்காலத்தில் நம் நாட்டின் கல்விமுறை குருகுல முறைதான்! அதாவது, குருவாகிய ஆசிரியர் வீட்டில் தங்கித்தான் மாணவர்கள் கல்வி கற்கவேண்டும்.
பாடம் தொடங்கும்போது, அனைத்து மாணவர்களும் ‘குரு வாழ்க! குருவே துணை!’ என்று கூறித்தான் பாடம் படிக்கத் தொடங்குவார்கள்.
எனக்கு ஓர் ஆசை வந்தது. நம்முடைய மாணவர்களையும் இதுபோல எழுதச் செய்யவேண்டும் என்று.
‘எங்கே எல்லோரும் ‘குருவே துணை’ என்று எழுதுங்க’ என்றேன்.
பல மாணவர்கள் பலவாறாக எழுதியிருந்தார்கள்.
ஒரு குருவோட வீட்டில் இரண்டு மாணவர்கள் தங்கி வெகுகாலம் பாடம் படித்து வந்தார்கள்.
ஒருநாள் இரண்டு பேரும் குருவிடத்தில்,
‘குருவே! எங்கள் கல்வி எப்போது நிறைவுபெறும்? படிப்பு முடிந்துவிட்டதா? இன்னும் எத்தனை காலம் நாங்கள் இங்கே தங்கவேண்டும்?’ எனப் பணிவோடு கேட்டார்கள்.
‘நாளையே உங்கள் இருவருக்கும் ஒரு தேர்வு நடத்தப்போகிறேன். அத்தேர்வில் வெற்றி அடைந்தவர் வீடு செல்லலாம். மற்றவர் தொடர்ந்து படிக்கவேண்டும். தயாராக இருங்கள்…. நாளைக் காலை தேர்வு’ என்றார் குரு.
இரண்டு மாணவர்களும் அன்றிரவு தூங்கவே இல்லை. ‘என்ன கேட்பாரோ? எப்படிக் கேட்பாரோ? என இரவு முழுவதும் தூங்காது விழித்துப் படித்தபடி இருந்தார்கள்.
மறுநாள் காலை குரு இரண்டு பேரையும் அழைத்தார்.
‘நமது வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு காடு உள்ளது. உங்களுக்குத் தெரியும். அந்தக் காட்டின் நடுவே மிகச்சிறந்த மாமரம் ஒன்று அதிகச் சுவையுடைய பழங்களோடு காய்த்துக் கனிந்து நிற்கிறது. நீங்கள் இரண்டுபேரும் அதில் போய் பழங்களைப் பறித்து வரவேண்டும்’ என்றார்.
இரண்டுபேரும் விரைவாகக் காட்டை நோக்கி ஓடினார்கள். அந்த மரம் இருக்கும் இடத்தையும் அடைந்தார்கள். ஆனால் அந்த மரத்தைச் சுற்றி நெருங்கவிடாமல் முட்கள் நெருக்கமாகக் கிடந்தன.
முதல் மாணவன் சற்று யோசித்தான். பிறகு வேகமாகப் பின்னால் பத்தடி சென்று ஒரே தாண்டாகத் தாண்டி மரத்தின் அருகில் குதித்தான். பழங்களைப் பறித்தான். மீண்டும் தாண்டினான். குருநாதரை நோக்கி ஓடி வந்தான்.
இவர்களை அனுப்பிவிட்டுக் குருநாதரும் கூடவே அங்கு சென்று நடப்பதைப் பார்த்தபடி நின்றார். முதல் மாணவன் கொடுத்த பழங்களைப் பெற்றுக் கொண்டார்.
அடுத்த மாணவன், முள்ளுக்கு அருகே சென்றான். நிதானமாக முட்களை வெட்டி ஒரு சிறிய பாதையை உருவாக்கினான். பிறகு சிரமமின்றி மரத்தின் அருகே சென்று பழங்களைப் பறித்துக்கொண்டு, தான் அமைத்த வழியே வந்து குருவிடம் பழங்களைத் தந்தான்.
இப்போது குருநாதர் இரண்டு பேரையும் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்.
‘நீங்கள் இருவரும் நான் சொன்னபடி செய்தீர்கள். பாராட்டுக்கள். உங்கள் இருவரில் இரண்டாவதாகப் பழம் கொண்டுவந்த மாணவருக்குப் படிப்பு முடிந்துவிட்டது. அவர் வீடு செல்லலாம்’ என்றார்.
முதல் மாணவனுக்குச் சற்றுக் கோபம் வந்தது.
‘ஐயா! நான் நீங்கள் சொன்னபடி விரைவாக வந்தேன். யாரும் நெருங்கமுடியாத மரத்தைத் தாவிக்குதித்து நெருங்கினேன். பழத்தையும் பறித்துக்கொண்டு வந்தேன். என் செயலை நீங்கள் குறைத்து மதிப்பிடலாமா?’ என்றான்.
உடனே குரு, ‘தம்பி உன் செயல், வீரம், வேகம் அனைத்தும் பாராட்டுக்குரியன. நானும் அதற்காக உன்னைப் பாராட்டினேன். இதோ இம்மாணவன் நினைத்திருந்தால் உன்னைப்போல் தாவிக் குதித்திருக்கலாம். ஆனால் தனக்குக் கிடைத்ததைப்போல மற்றவர்க்கும் இக்கனிகள் கிடைக்க வேண்டுமே என நினைத்துப் பாதை அமைத்துக் கொடுத்தானே, அதுதான் அவன் கற்ற கல்வி. அனைவருக்கும் உதவவேண்டும் என்ற பொதுச் சிந்தனையைக் கல்வி உனக்குக் கொடுக்கும்வரை நீ தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்’ என்றார் நிதானமாக.
மலையில் பிறந்தாலும் சந்தனத்தின் பெருமை மார்பில் பூசப்படும்போதுதான் உணரப்படும்.
கடலில் பிறந்தாலும் முத்தின் அருமை அணியப்படும்போதுதான் பாராட்டுப்பெறும். கல்வியின் சிறப்பும் இதுபோலத்தான்.
தெலுங்கு தேசத்தை ஆண்ட மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் கிருஷ்ணதேவராயர். அவரது சபையில் அறிஞர் பெருமக்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு நடுவே தெனாலிராமன் என்ற ‘விகடகவியும்’ இருந்தான். மிகுந்த அறிவாளி.
நகைச்சுவையால் எந்தச் சூழலையும் இனிமையானதாக்கும் ஆற்றல் படைத்தவன்.
ஒருமுறை பல புலவர்களும், அறிஞர்களும் கிருஷ்ணதேவராயரிடம் சென்று முறையிட்டார்கள்.
‘நீங்கள் எப்போதுமே தெனாலிரானமனுக்கு அதிகச் சலுகைகள் தருகிறீர்கள். அவன் ஒரு கோமாளி. எந்தவகையில் அவன் எங்களைவிட அறிவாளி?’ எனக் கோபமாகக் கேட்டார்கள்.
அதற்குக் கிருஷ்ணதேவராயர் விடையேதும் கூறாது சிந்தனையில் ஆழ்ந்தார்.
மறுநாள் மாபெரும் விருந்து ஒன்றிற்கு அரசராகிய கிருஷ்ணதேவராயர் ஏற்பாடு செய்திருந்தார். சபையில் இருந்த அறிஞர்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டார். தெனாலிராமனும் அதில் கலந்துகொண்டான்.
பலவிதமான உயர்ந்த இனிப்புப் பதார்த்தங்களும், பழங்களும் சித்ரான்னங்களும் பரிமாறப்பட்டன. அனைவரும் பல பிரிவுகளாக அமர்ந்தனர்.
உண்ணத் தொடங்கும் முன் அரசர் உள்ளே நுழைந்தார்.
‘சபையோர்களே…! உங்களுக்கான இனிய விருந்து. ஒரு சிறிதும் மிச்சம் வைக்காமல் உண்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் இனாமாகத் தரப்போகிறேன்’ எனச் சொல்லி நிறுத்தினார் அரசர்.
எங்கும் மகிழ்ச்சி, ‘மன்னர் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி ஒலி எழுப்பினர்.
மன்னர் தொடர்ந்தார்.
‘ஆனால் நீங்கள் உணவை உண்ணும்பொழுது உங்களின் உணவு சாப்பிடுகின்ற வலது கையை மடக்காமல் உணவை உண்ணவேண்டும். கை மடங்கினால் தலை வெட்டப்படும்!
‘யாரங்கே ஒவ்வொருவருக்கும் பின்னே ஒரு வீரன் நில்லுங்கள். யார் கை மடங்கினாலும் தலையை வெட்டித் தள்ளுங்கள். ம்…. சாப்பிடலாம்’ என்றார் அரசர். அத்தனை பேரும் பேயறைந்தது போலானார்கள். சிலர், ‘நாம் இன்றே செத்தோம்’ என்றார்கள். யாரும் எதையும் தொடவில்லை.
‘கையை மடக்காமல் எப்படிச் சாப்பிடுவதாம்’ என்று திருதிருவென முழித்தார்கள்.
ஆனால் தெனாலிராமன் இருந்த அறையில் மட்டும் சிரிப்புச்சத்தம்.
‘அருமை, சாப்பாடு பிரமாதம்! லட்டு – தேன்’ என்ற சத்தமும் சாப்பிடும் சத்தமும் கேட்டன.
பலர் எழுந்து ஓடி, அங்கே சென்று பார்த்தார்கள். ‘அவர்களால் மட்டும் எப்படிச் சாப்பிட முடியும்?’
மன்னரும் அங்கு விரைந்தார். அங்கு கண்ட காட்சி அவரை வியப்படையச் செய்தது.
‘அருமை…..அருமை…. தெனாலிராமனுக்கு ஐயாயிரம் பொற்காசுகள் அதிகம் கொடுங்கள்’ என்றார்.
தெனாலிராமன் அப்படி என்னதான் செய்தான்?
‘இதோபார், நீ கையை மடக்காமல் அப்படியே உணவை எடுத்து எனக்கு ஊட்டிவிடு, நான் அடுத்தவனுக்கு ஊட்டுகிறேன். அப்படியே அனைவரும் உண்போம்!’ என்றான் தெனாலிராமன்.
இதேபோல ஒருவர் மற்றவருக்கு ஊட்டிவிட, எல்லோர் வயிறும் நிறைந்தது. பரிசும் கிடைத்தது.
பிறர் வயிற்றுக்கு நாம் அன்னமிட்டால் நம் வயிறு தானே நிறையும்.
பொதுநலமே அனைவரையும் அரவணைக்கும். புகழையும் தரும்.
ஈசுவரவித்யாசாகர்ன்னு ஒரு அறிஞர் வடநாட்டில் விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் திண்ணைப்பள்ளி ஆசிரியராக குருவாக இருந்தார். இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் காலத்தில் வாழ்ந்தவர்.
அவர் பெயருக்கு ஏற்றாற்ப்போல கல்விக்கடல், பரமஹம்சர் அவரை கல்விக்கடல் என்றே அழைப்பார்.
சமஸ்கிருதமும், ஹிந்தியும், ஆங்கிலமும் நன்கு தெரிந்த மேதை.
மாணவர் பலருக்கு இலவசமாகக் கல்வி கற்றுத் தேர்ந்தார். ஏழைகளுக்கு உதவிடுவார்.
ஒருநாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு கோடு ஒன்றைப் போட்டார் வித்தியாசாகர்.
மாணவர்களைப் பார்த்து, எங்கே யாராவது ஒருவர் இந்தக் கோட்டை அழிக்காமல் சிறியதாக்க முடியுமா? எனக் கேட்டார்.
இன்றைக்கு நம் பையனைக் கேட்டா, இது இருகோடு படத்தில வருது சார்னு சொல்லிடுவாங்க. ஆனால் வித்தியாசாகர் வாழ்ந்தகாலம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.
ஒரு பையனும் எழுந்து வரவில்லை. அழிக்காம எப்படிச் சின்னதாக்குவது? யோசித்தார்கள்.
ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள, அவர் போட்ட கோட்டிற்குப் பக்கத்தில் நீண்ட கோடு ஒன்றைப் போட்டான். வித்யாசாகர் போட்ட கோடு சின்னதாயிற்று.
வித்யாசாகர் அந்த மாணவனைப் பாராட்டிவிட்டுச் சொன்னார். ‘மாணவர்களே இந்தக் கோடுகள் மூலம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுங்கள்’.
‘ஒரு கோட்டினை அழித்து மறுகோடு உயரவில்லை! பிறர் அழிவில் இல்லை நம் உயர்வு. நம் உயர்வே, பிறரைப் பணியவைக்கும்’ என்று கூறினார்.
குள்ளவடிவமாக வந்த கடவுளாகிய திருமாலே! விஸ்வரூபமாக உயர்ந்தபோது உலகம் அவர் கைக்குள் அடங்கியது.
நம் உயர்வுதான் உலகை வெல்ல நமக்குச் சிறந்த வழி!