குருவும் சீடனும்…

மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தும்போது, தெய்வத்துக்கு மிக
அருகிலிருப்பவர் குருநாதர்தான்.
குழந்தை முதலில் அறியும் முகம் தாய் முகம். தாய், தந்தையை அறிமுகம்
செய்கிறாள். தந்தை ஞானத்தையும், கல்வியையும் தன் குழந்தை அறியும்
பொருட்டுக், குருவிடம் அழைத்துச் செல்கிறார். குரு என்கிற ஆசிரியர் அறியாமை
இருளைப்போக்கி, ஞானதீபத்தை ஏற்றிக் கல்வியைக் கற்றுத் தந்து, தெய்வத்தைக்
காட்டுகிறார்.
நல்ல குரு கிடைப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நல்ல
சீடன் கிடைப்பதும்தான்.
ஆன்மீகத்தில்… இராமகிருஷ்ண பரமஹம்சர் – விவேகானந்தர்
அரசியல் உலகில் தந்தை பெரியார்… பேரறிஞர் அண்ணா, தீரர் சத்திய
மூர்த்தி – கர்மவீரர் காமராசர்.
தமிழ் இலக்கிய உலகில் மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி
சுந்தரம்பிள்ளை – உ.வே.சாமிநாத அய்யர்.
இசை உலகில்…
மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர்
மகாராஜபுரம் சந்தானம்.
நாடக உலகில்… சங்கரதாஸ் சுவாமிகள் – டி.கே.சண்முகம்
நடிப்பு உலகில்… பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் – பத்மஸ்ரீ கமல்ஹாசன்
எனக் குறிப்பிடலாம்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் தம் வாழ்நாளில் பணம் காசுகளைக் கையில்
தொடுவதில்லை என்ற குறிக்கோளோடு வாழ்ந்த துறவி. இதைச் சோதிக்க
விரும்பிய விவேகானந்தர், ஒருமுறை இராமகிருஷ்ணர் படுத்திருந்த கட்டிலில்
ஓர் ஒரு ரூபாய் நாணயத்தை, அவர் இல்லாதபோது ஒளித்து வைத்துவிட்டுக்
காத்திருந்தாராம். வெளியிலே சென்றிருந்த பரமஹம்சர் திரும்பி வந்து அந்தக்
காசு இருந்த கட்டிலில் அமர்ந்தவுடன், மின்சாரத்தால் தாக்குண்டவற்போல
துடிதுடித்துக் கீழே விழுந்தாராம்.
மற்ற சீடர்களெல்லாம் ஓடிவந்து படுக்கையை உதறிச் சரி செய்து அவரைத்
தூக்கி நிறுத்தினார்களாம். பொன், பொருளைப், பணத்தை விரும்பாத உண்மைத்
துறவியான இராமகிருஷ்ணரே தம் குருநாதர் என விவேகானந்தர் அவரைத் தன்
மனதில் ஏற்றாராம்.
தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுகின்ற மகா மகோபாத்தியாய பட்டம்
பெற்ற உ.வே சாமிநாதய்யர் அவர்கள் தம்முடைய ஆசிரியராகிய மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “தன்
உயர்வுக்குக் காரணம் அவரே. தனக்கு உணவும், உடையும் கல்வியும் தந்து
பேருதவி புரிந்தவரும் அவரே” எனக் குறிப்பிடுகிறார்.
பக்தி நெறியில் சிறந்து விளங்கிய அருளாளர்களான சைவ சமயக்
குரவர்கள் நால்வரும், அருணகிரிநாதர் போன்றோரும் முறையே
சிவபெருமானையும், முருகக் கடவுளையும் குருவாகவும், தங்களைச்
சீடர்களாகவும், அடியார்களாகவும் எண்ணி மகிழ்ந்தனர்.
எனவேதான், அருணகிரிநாதர் ‘கந்தர் அனுபூதி’ என்ற தமது நூலில்
முருகனிடத்தில் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். “முருகப்பெருமானே! நீ
என்னை ஆட்கொள்ள வரும்போது தாயாகத், தந்தையாக, சகோதரனாக,
உறவினராக வருவதைக் காட்டிலும் குருவாக வந்து என்னை ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்பதை,
“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
என வேண்டுகிறார்.
குரு, சீடன், ஆசிரியர், மாணவன் எனும் பாரம்பரியம் தந்தை, மகன்
உறவுபோல நம்நாட்டில் பழைமையானது, என்றும் இனிமையானது.