குரங்கும்… குழந்தையும்…

               ஒரு ஊருக்கு ராமாயணக் கதையைக் கதா காலட்சேபம்’ செய்ய ஒரு முதியவர் வந்திருந்தார்.

       ஊர்ப்பெரியவர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தார்கள். கதை சொல்பவர் ஆர்வத்தோடு கேட்டார். ‘பெரியோர்களே, இராமனின் கதையை, ராமாயணத்தை உங்கள் ஊரில் காலட்சேபம் செய்ய வந்துள்ளேன்…. சம்மதம்தானே!’

               ‘சந்தோஷம்…. சம்மதம்…’ என்றார்கள் ஊர்ப்பெரியவர்கள்.

               ‘ஒருமாதம் முழுவதும் சொல்லட்டுமா?’

               ‘ஒரு மாதமா…’இழுத்தபடி கேட்டார்கள் ஊரார்.

               ‘சரி 15 நாட்கள் கதை சொல்லவா?’

               …..

               ‘சரி…. ஒரு வாரத்தில் கதையை முடிக்கவா?’

               ‘ஒரு வாரமும் அதிகம்தான்’ முணுமுணுத்தார்கள் சிலர்.

               ‘சரி ஐயா மூன்று நாட்களுக்குள் முடித்துவிடுகிறேன்’.

               யாரும் பதிலே பேசவில்லை.

          கோபம் கொண்ட கதை சொல்பவர் ‘ஒண்ணும் வேண்டாம் ஐயா, ஐந்து நிமிஷத்திலே இராமாயணம் சொல்லவா?’ எரிச்சலோடு கேட்டார்.

               ‘அப்படியே செய்யுங்கள்’ சந்தோஷமாக எல்லோரும் சொன்னார்கள்.

           ‘இந்த உலகத்தில் எவன் ஒருவன் தாய்தந்தையரின் சொற்படி கேட்டு நடக்கிறானோ அவனுக்கு உலக உயிர்கள் எல்லாம் துணைசெய்யும்’.

               ‘எவன் ஒருவன் மாற்றான் மனைவிமீது ஆசை கொள்கிறானோ அவனை உடன்பிறந்தவர்களே காட்டிக் கொடுப்பார்கள். இதுதான் இராமாயணம்’ என்றார் கதை சொல்பவர் மூச்சு வாங்க.

               ‘எப்படி…. எப்படி?’ என்றார்கள் ஊரார்கள்.

               அயோத்திய மன்னனான தசரதனின் மனைவியருள் ஒருத்தியான கைகேயியின் விருப்பப்படி, தாய் சொல் கேட்டுத் தந்தைக்காகக் காட்டுக்குச் சென்ற இராமனுக்கு உலக உயிர்களான, ஜடாயு எனும் பறவை, சாம்பவன் எனும் கரடி, அனுமன், சுக்ரீவன் எனும் குரங்குகள் உதவி செய்தன. ஏன், அணில்கள் கூடப் பாலம் கட்ட மணல் கொண்டு வந்தன.

         ஆனால், இராமனின் மனைவியான சீதாப்பிராட்டியின் மீது ஆசைகொண்ட இலங்கை மன்னன் ராவணனை உடன்பிறந்த தம்பியாகிய விபீஷணன் காட்டிக்கொடுத்தான். இதுதான் ராமாயணம்’ என முடித்தார் கதைசொல்லி.

     ஊரார் மகிழ்ந்து அவருக்குப் பரிசு கொடுத்து அனுப்பினர். தன் அறிவைப் பயன்படுத்தியவருக்குப் பரிசு கிடைத்தது.

               இத்தகைய புத்திக்கூர்மை நமக்கு மட்டும்தான் உண்டா? நம் மூதாதையரான விலங்குகளுக்கு இல்லையா?

        சில சம்பவங்கள், நம்மைக் காட்டிலும் அவை புத்திசாலியோ என நினைக்கவைக்கும்.

               ஒரு தடவை அழகர்கோவிலுக்குப் போயிருந்தோம். அந்தக் கோயிலின் கீழே திருமாலிருஞ்சோலைப் பெருமாளும், மேலே பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளனர்.

               அந்த மனையில் சிலம்பாறு நூபுரகங்கை’ என்ற பெயரில் சிறு அருவி போலக் கொட்டும். அதில் எல்லோரும் குளிப்பது வழக்கம்.

         நண்பர்கள் எல்லோரும் குளிக்கப்போனதால் நான் எல்லோருடைய பெட்டிகளையும் காவல் காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

               எனக்கெதிரே ஒரு சிறு குழந்தை மொட்டையடித்து, அதில் சந்தனம் தடவி, புதிதாகக் காது வேறு குத்தி, பொரி, மிக்சர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, நின்றபடி தின்று கொண்டிருந்தது.

               அந்தக் குழந்தையின் பெற்றோர் குளிக்கப்போயிருந்தார்கள். அழகர்மலையின் குரங்குகள் அபாரமான அறிவுடையவை.

               அவற்றைப் பள்ளியில் சேர்த்தால் இந்த நேரம் விஞ்ஞானிகளாக மாறியிருக்கும். ஒரு குரங்கு நேராக வந்து அந்தக் குழந்தையிடம் நின்றது.

               குரங்கை ஆர்வத்துடன் பார்த்தது குழந்தை. மிக்சர் பொரி பையை ஆர்வத்தோடு பார்த்தது. சட்டென்று குழந்தையிடமிருந்து அதைப் பிடுங்க ஆரம்பித்தது குரங்கு.

               குழந்தையோ விடவில்லை. குரங்கும் விடவில்லை.

               நான் எழுந்து போவதற்குள் அந்தக் காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். பையை இறுகப் பிடித்தபடி அழ ஆரம்பித்தது குழந்தை.

               குழந்தை பிளாஸ்டிக் பையை விடாது என்பதைத் தெரிந்துகொண்ட குரங்கு, ஒரு கையில் பையைப் பிடித்தபடி மறுகையால் பையிலிருந்த மிக்சர், பொரி இவற்றை வாரிவாரி தன் வாயில் அடைக்கத் தொடங்கியது.

      குழந்தை அப்படியே ஆச்சரியத்தோடு, அழுவதை நிறுத்திவிட்டுக் குரங்கு தின்பதையே பார்த்தபடி, பையையும் விடாமல் பிடித்திருந்தது.

               குழந்தை யோசிக்காததை குரங்கு யோசித்துச் செயல்படுத்திய விதம்தான் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

               அதனால் வெற்றி பெறுபவர்கள் வழி எப்போதும் தனிவழி தான்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.