கும்பிடப்போன தெய்வம்…

சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே இரயிலில் பஸ்ஸில், சைக்கிளில், நடந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டே பிரயாணம் செய்வதில் எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம்.
புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய உணவு வகை இவற்றால் வரும் புதிய அனுபவங்கள் இவைதான் வாழ்க்கையை எப்போதும் புதுமையாக்குகின்றன என நினைப்பவன் நான்.
எனது பல்வகை உயர்வுகளுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் டாக்டர் நா.ஜெயராமன் அவர்கள் ஆவார்.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் என்னுடைய எம்ஃபில் பட்டத்திற்கும், பி.எச்.டி பட்டத்திற்கும் வாய்ப்புக் கொடுத்து வழிகாட்டியவர் அவர்தான். நான் மேடைப் பேச்சாளராக இன்று விளங்கக் காரணமானவரும் அவர்தான். சிறந்த நகைச்சுவையாளர், அரிய மனிதர்.
ஒருமுறை கேரளாவில் பாலக்காட்டிற்கு அருகேயுள்ள சித்தூர் பல்கலைக்கழகத்தில் அனைத்திந்திய பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அவரோடு மாணவர்களாகிய நாங்கள் சென்றிருந்தோம்.
குழல்மன்னம் எனும் அழகிய சிற்றூரில் தங்கியிருந்தோம். (இந்த ஊர் நம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் துணைவியார் திருமதி வி.என்.ஜானகி அவர்கள் பிறந்த ஊர்…. அவரும் சிலகாலம் முதல்வராக இருந்தவர்தான்)
அந்த ஊரில் இருந்த அழகான கோவிலுக்கு அதிகாலையில் செல்வதாக முடிவு செய்தோம். திரு.ஜெயராமன் அவர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் பத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்றோம்.
அந்தக் கோவில்…. கேரளக் கோவில்களுக்கு ஏற்றபடி அமைதியாகவும், சுத்தமாகவும், அழகாகவும் அமைந்திருந்தது. சுற்றிலும் மரங்களும், மலர்ச்செடிகளுமாய் அமைந்திருந்த அந்தக் கோவிலின் வெளிக்கதவு மட்டும் திறந்திருந்தது. நாங்கள் அனைவரும் உள்ளே சென்று பார்த்தால் எல்லாச் சந்நிதிகளும் பூட்டியிருந்தன. வெளியில் இருந்தே சுவாமியைப் பார்க்கலாம். எங்களுக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது.
‘சரி கொஞ்சநேரம் பார்ப்போம்…. கோவில் திறக்காவிட்டால் போய்விடலாம்’ என்றார் திரு.ஜெயராமன். நாங்களும் சரி என்று சற்றுநேரம் உட்கார்ந்து…. எங்களைப் போல வருபவர்களை வேடிக்கை பார்;த்துக் கொண்டிருந்தோம்.
வெகுநேரமாகியும் கோவில் திறக்க அர்ச்சகர் யாரும் வராததால் கிளம்பலாம் என முடிவு செய்து வெளியில் வந்து வேனுக்கு செல்லத் தொடங்கினோம்.
அப்போது சட்டை போடாத ஒருவர் மேலெல்லாம் திருநீறு அணிந்து இடுப்பில் பட்டுத்துணி கட்டி கைநிறையக் கொத்துக் கொத்தாகச் சாவிகளோடு வேகமாகக் கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
எங்களோடு வந்தவர்கள் எல்லோரும் வேனில் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். கடைசியாக வந்த நான் கொத்துச் சாவிகளோடு வந்தவரைப் பார்த்தேன். உடனே முடிவும் செய்துவிட்டேன். இவர்தான் நாம் கும்பிடப் போன கோவிலுக்கு குறுக்கே வந்த அர்ச்சகர் என்று….
‘எல்லோரும் வாங்க, சாமி வந்திருச்சு….’ சாமி வந்தாச்சு என்று நான் போட்ட சத்தத்தில் எனக்குத்தான் சாமி வந்துவிட்டதோ என நினைத்து வேனில் இருந்த அனைவரும் இறங்கி வந்தனர்.
கொத்துச்சாவிகளோடு வந்த அவரை நான் சுட்டிக்காட்டவும்… அனைவரும் மகிழ்ச்சியடைந்து என்னைப் பாராட்டினர். சிலர் எனக்குக் கை கொடுத்தனர்.
சீக்கிரம் வாங்க…. என்று அனைவரையும் கூட்டிக்கொண்டு நான் அவர் பின்னால் ஓட… அனைவரும் பின் தொடர்ந்தனர். கொத்துச் சாவிக்காரர் முதலில் விநாயகர் சந்நிதி முன் கொத்துச்சாவிகளை வைத்து பக்தியோடு வணங்க நாங்களும் வணங்கினோம். கதவை திறக்கவில்லை. அடுத்து முருகன் சந்நிதி சென்று அவர் வணங்க, அவரோடு நாங்களும் வணங்கினோம். அந்தக் கதவையும் அவர் திறக்கவில்லை.
அடுத்து அம்மன் சந்நிதி, சிவன் சந்நிதி, கோவிலில் இருந்த அத்தனை சந்நிதி வாசலிலும், அவர் சாவிகளை வைத்து வணங்க, நாங்களும் சளைக்காமல் வணங்கினோம்.
இதுதான் கேரளநாட்டின் வழக்கம் என்று நான் விளக்கம் வேறு தந்தேன். கடைசியில் அவர் சாவிகளை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வெளியே சென்றவர் எதிரே இருந்த தன் பலசரக்குக் கடையைத் திறந்து உள்ளே சென்றார். நாங்கள் அப்படியே நிற்க, திரு.ஜெயராமன் கோபத்தோடு என்னைப் பார்க்க, அனைவரும் என்னை அடிக்காத குறைதான். இந்த அனுபவம் எந்தக் கோவிலுக்குப் போனாலும் இப்போதும் என் நினைவுக்கு வரும்….