கிராமத்து மனிதர்கள்
எங்கள் கிராமத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே, இந்த வீரம்மாவைப் பார்த்திருக்கிறேன். ‘விளக்குமாற்று வீரம்மாள்’ என்ற பெயர் சுற்றுப்பட்டிகளில்கூடப் பிரபலம். அநேகமாக இவள் பிறவியிலேயே விதவை என்பது ஒரு சாரார் கருத்து.
பெரும்பாலும் சடையாகவும் இல்லாமல், மொட்டையாகவும் இல்லாமல் ஒரு மாதிரியாகத் தொங்கும் முடி. அதைப் பார்த்தாலே ‘சடாமுடி’ நினைவிற்கு வரும். ஐம்பது வயதைத் தாண்டிய உடம்பு. தான் எதையும் சட்டை செய்யாதவள் என்பதைக் காட்டுவதுபோலச் சட்டையே போடாத உடம்பு. சேலையைக் கட்டி அதனையும் இடுப்பில் இழுத்துச் சொருகி, ஆடுகால் தசை ‘தடங் தடங்’ என்று அதிர, வலது கையில் விளக்குமாற்றையும், இடதுகையில் வாளியும் பிடித்துச் சிலர் வீட்டு வாசலைப் பெருக்குபவள்.
பெரும்பாலும் காலையில் மட்டுமே காட்சி தருபவள். ஒருநாள் காலையில் பார்க்காவிட்டால் இனி அடுத்த நாள் காலையில்தான் பார்க்க முடியும். இடையில் எல்லார் வீட்டிலும் எல்லா வேலையும் பார்க்கப் போய்விடுவாள் வீரம்மாள்.
சாதாரண நேரமாக இருந்தாலும் கையில் விளக்கமாறு மட்டும் இல்லாமல் இருக்காது. பீமனின் கதாயுதம் போல இவளுக்கு விளக்குமாறு.
இவள் பேசிக்கேட்க வேண்டுமென்று நினைப்பவர்கள் தகர ‘டின்’ ஒன்றில் மண்ணைப் பரப்பி அதன்மீது ஒரு கல்லை வைத்துத் தேய்த்தால் போதும், இவள் சத்தம் கேட்கும். எப்போதும் யாரையாவது நாசமாகப் போகச் சொல்லிக்கொண்டே இருப்பாள். நாசமாகப் போவது, இவளைப் பொறுத்த அளவில் கடைக்குப் போவது போல!
அன்றைக்குக் காலையில் நான் படித்துக் கொண்டிருந்தபோது வந்தாள் வீரம்மா.
“தம்பி! இந்த நாயத்தப் பாத்தியா?” நான் அன்றைக்கு முழித்த முகம் சரியில்லை என்பதை உணர்ந்தேன்.
“தம்பி இந்த நாயத்தப் பாத்தியா?”
“எந்த நாயம்?”
“எந்த எந்த நாயமா? அட, நீ கொள்ளேல போக, நீ நின்ன இடம் நீர்முங்கிப் போக, நீ வெலங்குவியா, இல்லை பொட்டலாப்போயி பொசுக்குன்னு போவ”
எனக்கு அழுகை வராத குறைதான். என்னிக்கும் இல்லாம இன்னிக்குத்தான் பரீச்சைக்குப் படிக்க உட்கார்;ந்தேன். அப்போது தான் தெரிந்தது காலையில் படிப்பது எவ்வளவு தவறு என்று.
“நிறுத்து, நீ என்ன சொல்ற?”
“சொல்றேன் சொறக்காய்க்கு உப்பில்லேன்னு, அவதான் அந்தக் கட்டேல போறவா, குருட்டு…. (‘விதவை’ என்பதன் தமிழ்ச்சொல்) இன்னிக்குக் காத்தாலே நாவச்சிருந்த சாணிய எடுத்து, எருத்தட்டிப்புட்டா, அவளைச் சும்மா விடுவனா, விளக்குமாத்தால சுங்கு பரத்துவேன் ஏண்டி, எங்கிட்டியா டான்ஸ் பண்றே? உங்குலமென்ன குடியென்ன…”
“அடிஏங் நாத்து நடுற நல்லம்மா
நாத்து வெலை என்னம் மான்னே”
அவள் தொடர்ந்தாள். அப்போதுதான் தெரிந்தது அவள் திட்டியது என்னை இல்லையென்றும், அவள் விரோதியான யாரோ ஒரு நல்லம்மாவையோ பொல்லம்மாவையோ என்றும்!
“ஏன் வீரம்மா, நீதான் எப்பவும் சாணி எதிர்த்த வீட்லதான எடுப்ப என்ன ஆச்சு?”
“என்ன ஆகும் கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடும ஆடிக்கிட்டு வந்துச்சாம்”.
அதுபோல அவள் தொடர்ந்தாள். அந்தாதியில் தொடங்கி பழமொழியில் விளையாடுவது அவளுக்குக் கை வந்த கலை. அந்நேரம் உள்ளே இருந்து என் பாட்டி வெளியே வந்தாள். வீரம்மாளின் கண்ணும் அகமும் பாட்டியைக் கண்டதும் பிரகாசித்தன. அவள் குரல் மாறியது. வீரம்மா ஆனந்தத்துடன் ஆரம்பித்தாள்.
“யம்மா அந்தக் கழுதை, அந்தத் தடிப்பயலோட ஓடிட்டா, எனக்குத் தெரியும்! மினுக்கி மினுக்கிச் சட பின்னி மின்னாடி வந்தாளாம் சின்னப் பொண்ணுன்னது சொல்றாப்பிலே இருந்தா, சொல்லாம ஓடிட்டா ஏன் தெரியுமா? சற்று முற்றும் பார்த்துவிட்டுக் குரலைத் தாழ்த்தி ஏதோ பிசாசு ரகசியம் சொல்வதுபோலச் சொன்னாள்.
“அவ மூணு மாசமா முழுகாம இருக்காளாம்”
அதுக்கு ஏன் ஓடணும்? என்று என் பாட்டி கேட்டாள்.
ஓடுகாலிக் குடும்பம், ஓடி ஓடித்தான் தொலையும். இவ அம்;மா என்ன வாழ்ந்தா?…. பேச்சுத் தொடர்ந்தது. பாட்டி பிடிபட்டாள். நான் தப்பித்தேன்.
இன்னொரு நாள் என்னைப் பிடித்தாள். ‘தம்பிகிட்ட இன்னேரத்துல சொல்லப்பிடாது, நேத்து ரெண்டாவதாட்டம் விட்டப் பிறகு, அந்தத் திண்ணைல வந்துபடுத்தேனா… தூக்கமே வல்லே, என்ன ஆச்சு தெரியுமா?
“மழை பெஞ்சுச்சா?”
“மழையும் பேயலை ஒரு மண்ணும் பேயலை, அந்தச் செவிடன் பொண்டாட்டி, சந்து வழியாப் போனா, என்னடா இந்த நேரத்தில் போறாளேன்னு நோட்டம் விட்டேன். போன 10 நிமிசமாத் திரும்பி வல்ல (ஒரு நிமிசம் நிறுத்தினாள் “சனியனே சொல்லித் தொலையேன். அவ யாரு கூடயாவது போய்ட்டாளா?” நான் கேட்க வாயைத் திறந்தேன்)
“தம்பி கவனமாக் கேளு. உள்ளே போனவ சாணியோட வர்றா… அவதான் தெனம் சாணிய எடுக்கிறா, அப்பவே புடிச்சு இருப்பேன். காலையிலே பாரு”
காலையில் பார்த்தால் தெருவே அலறியது. விளக்குமாற்றைத் திருப்பிப் பிடித்து வீரம்மா சுழற்றிச் சுழற்றி சண்டைபோட, சாணி எடுத்தவள் அதேமுறையில் இவளை அடிக்க, கிராமத்தில் ஒரு உக்கிரமான போர் முன் அறிவிப்பின்றி நடைபெற்றது.
சண்டை முடிவில் அவளை எல்லா வார்த்தைகளிலும் திட்டிவிட்டு, வீரம்மாள் எங்கள் வீட்டுக்கு வந்தாள். “தம்பி, ஒண்ணு நீ சத்தியம் பண்ணு… இல்லாட்டி நான் சத்தியம் பண்றேன்… உங்கண்ணு அவிஞ்சு போகும் அப்படின்னு அவளைச் சொல்லிச் சொல்லி அடிச்சேன்” எனத் தொடர்ந்தாள்.
வயதானவள், விதவை, அனாதை, படிக்காதவள் வாழ்க்கையில் போற்றிப் பாதுகாக்கும் சொத்து சாணம் தான். அவள் அறிந்த அக இலக்கியமெல்லாம் உடன்போக்கு (ஓடிப்போவது) போன்றவையே, பேசுவது பழமொழியும் ‘செந்’தமிழும். செய்வதோ புறநானூற்றுப் போர்கள். இவளன்றோ தமிழ்க்குடியின் வீரமறத்தி.
இப்படிப்பட்ட கிராமத்து மனிதர்களை இன்றைக்கு நம்மால் காணமுடியுமோ? இல்லையோ? தெரியவில்லை. ஏனென்றால் மனிதர்கள் மட்டுமில்லை கிராமங்களுமே தொலைந்துபோய்க் கொண்டிருக்கின்றன. என்ன செய்வது, மாற்றம் ஒன்றுதான் மாறாதது.






