காலத்தை வென்ற வெண்கலக்குரலோன் டி.எம்.எஸ்.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் பெயர் பெற்றது பாண்டியர்கள் அரசாண்ட தென்பாண்டி மண்டலத்தின் தலைநகராகிய மதுரை.
இம்மதுரையில் இசையை வளர்த்தெடுக்கவே இசைக்கு இடையூறு ஏற்பட்டபோது அதனை மாற்றிக்காட்டவே எம்பெருமானாகிய சொக்கநாதப்பெருமான் பலமுறை மதுரைக்கு வந்து மதுரையில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். தங்கள் குரலால் பெருமைபெற்ற மதுரை மணி ஐயர், மதுரை சண்முக வடிவு சுப்புலெட்சுமி (எம்.எஸ்.சுப்புலெட்சுமி) மதுரை சோமு போன்றோர் தங்களுடைய இன்குரலால் தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்த்தனர்.
என்.பி.என்.சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள் தங்கள் விரலால் நாதஸ்வரத்தால் இசைக்கு மெருகூட்டினர். சங்கரதாஸ் சுவாமிகள் போன்றவர்கள் நாடகக் கலைக்கு உயிரூட்டினர். இன்றைக்கும் மதுரையிலே சங்கரதாஸ் சுவாமி சிலையாக அமர்ந்து அரு௵ட்டுகின்றார். இத்தகைய பெருமைமிகுந்த மதுரை மாநகரின் பெருமைக்குத் தன் குரலால் பெருமை சேர்த்த கலைஞர்தான் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்.
அவரது வாழ்வின் தொடக்க காலங்களில் மதுரைக் கோவில்களிலும், பஜனை மடங்களிலும் பாடிவந்தவர், திரைத்துறைக்கு வந்தபின், தம் வாழ்நாள் முழுவதும் அரிய சாதனைகளை அனைவரும் வியக்கும் வண்ணம் செய்தார். ஏ.பி.நாகராஜன் கதாநாயகனாக நடித்த ‘பெண்ணரசி’ என்ற படத்தில் சிறுவேடத்தில் நடித்ததோடு அதில் பாடவும் செய்திருப்பார். பின்னர் தமிழ்த்திரையுலகின் இருபெரும் ஆளுமைகளான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எனத் தொடங்கி ஒரு நாற்பது ஆண்டுகாலம் எந்த நடிகர் கதாநாயகனாக நடிக்க வந்தாலும் அவருக்குப் பொருந்துமாறு தன் குரலில் ஜாலவித்தை செய்தவர் டி.எம்.எஸ்.அவர்கள்.
குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மலைக்கள்ளன், நாடோடி மன்னன், மதுரை வீரன் எனத் தொடங்கி, அவர் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்குப் பின்னணி குரல்கொடுத்து எம்.ஜி.ஆர் அவர்களை எளிய மக்களிடத்திலே கொண்டுசேர்த்த பெருமை டி.எம்.எஸ். அவர்களையே சாரும்.
இதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு சி.எஸ்.ஜெயராமன் (எம்.ஜி.ஆருக்கும்தான்) அவர்கள் பின்னணி பாடிக்கொண்டிருந்தபோது, ‘தூக்குத் தூக்கி’ படத்தில் முதன்முறையாக சிவாஜிக்குப் பின்னணி பாட, இவரைத் தேர்வு செய்தபோது சிவாஜியே சற்று யோசித்தாராம். ஆனால் இவர் பாடத் தொடங்கிய பிறகுதான், அந்தப் படத்தின் வெற்றியை உணர்ந்த சிவாஜி அவர்கள், டி.எம்.சௌந்தரராஜன் அவர்களே தனக்குத் தொடர்ந்து பாடட்டும் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்லத் தொடங்கினாராம்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் இவர்களைத் தொடர்ந்து வந்த ஜெமினி கணேசன் (பி.பி.எஸ்., ஏ.எம்.ராஜா) போன்றவர்கள் பாடினாலும் கூட, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அவர்களை அடுத்து வந்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், அசோகன் என அனைவரின் குரலாகவும் டி.எம்.எஸ்.ஸின் குரல் ஒலித்தது.
அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற படங்களில் இவர் கதாநாயகனாக நடித்ததோடு ‘கல்லும் கனியாகும்’ என்ற படத்தையும் தயாரித்தார். இவர் குரலின் தனிச்சிறப்பு என்று சொல்லுகிறபோது கே.பாலச்சந்தர் அவர்களின் ‘பாமா விஜயம்’ படத்தில் ‘வரவு எட்டணா செலவு பத்தணா….’ என்ற பாடலுக்கு டி.எஸ்.பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ்; என நான்கு பேரின் வாயசைப்பிற்கும் இவர் ஒருவரே பாடியிருப்பார் என்பது வியத்தகு செய்தி.
‘உள்ளம் உருகுதையா, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ போன்ற பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களாக அந்தக் காலத்திலேயே வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு. முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடல் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.
இவரது வெற்றிக்குக் காரணம் என்று சொல்லும்போது இவர் பாடினால் டி.எம்.எஸ். பாடுகிறார் என்று சொல்லாமல் எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று ரசிகர்கள் நம்புமாறு, ஏற்குமாறு பாடிய பெருமை இவருக்கு உண்டு.
டி.எம்.எஸ். இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் “டி.எம்.எஸ். அவர்களின் நிலைத்த புகழுக்குக் காரணம் அவரது பக்திப் பாடல்களா? சமுதாயப் பாடல்களா?” என்ற தலைப்பிற்கானப் பட்டிமன்றத்திற்கு நான் நடுவராகச் சென்றிருந்தேன். அந்த விழாவுக்கு வந்திருந்த டி.எம்.எஸ். அவர்கள் நான் முதலில் பேசத்தொடங்கியபோது, அரங்கத்தில் ரசிகர்களோடு அமர்ந்திருந்தார். நான் பேசப்பேச, அவர் மகிழ்ந்து மேடைக்கு வந்து என்னோடு அமர்ந்துகொண்டு ரசிக்கத் தொடங்கினார்.
அப்போது நான், திரைப்படங்களில் நடிகர்கள் காதல் காட்சியில் பாடும்போது காதலி உடனிருப்பார். சோகக் காட்சியில் பாடும்போது குழந்தையோ, தங்கையோ உடனிருப்பார்கள். ஆனால் நம்முடைய ஐயா அவர்கள் (டி.எம்.எஸ்.) ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடும்போது, இயற்கைக் காட்சிகளோ, உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளோ யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களெல்லாம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு இவர் பாடி ஜெயித்திருக்கிறார் என்று நான் சொன்னபோது, அவர் எழுந்து நின்று என்னை உச்சி முகர்ந்து ஆசிர்வாதம் செய்தார். என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக நான் இதைப் பலமேடைகளில் குறிப்பிடுவேன்.
இன்றைக்கும் இரவுநேரங்களில் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் டி.எம்.எஸ். அவர்களின் குரல் ஒலிக்காத நாளில்லை. இத்தகைய பெருமைமிகுந்த வெண்கலக் குரல் படைத்த டி.எம்.எஸ்.அவர்களைக் குறித்து மேலும் சில செய்திகளைக் காண்போம்…
தமிழகத்தில் சுப்ரபாதங்களும், சகஸ்ரநாமங்களும் ஓங்கி ஒலித்த இடங்களிலெல்லாம் எளிய தமிழிலான பக்தி இசை பரவித் தன் செல்வாக்கை நிறுவியிருந்த காலகட்டம். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழிசை வரலாற்றில் தன் பெயரை நீங்காத ஒன்றாக எழுதியவர் டி.எம்.எஸ். என்றழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்.
தமிழ் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள், மதுரையில் மார்ச் மாதம் 24ஆம் தேதி 1922ஆம் ஆண்டு மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல்வளத்தின் மீது அக்கறைக் காட்டத் தொடங்கிய அவர், மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக, இரண்டு ஆண்டுகள் இசைப்பயிற்சி பெற்ற அவர், தனது 21ஆவது வயதிலிருந்து தனியாகக் கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த டி.எம்.சௌந்தரராஜனை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது ‘கிருஷ்ண விஜயம்’ திரைப்படத்தில் ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதடி’ என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம்செய்தார். அதைத் தொடர்ந்து ‘மந்திரி குமாரி’, ‘தேவகி’, ‘சர்வாதிகாரி’ போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிட்டியது. ‘தேவகி’ படத்தில் இவர் பாடி, நடிக்கவும் செய்தார்.
50களின் தொடக்கத்தில் திரைத்துறையில் கால்பதித்த டி.எம்.எஸ்ஸின் குரல் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. காரணம் டி.எம்.எஸ்ஸின் குரல் நிகழ்த்திக் காட்டிய ஒரு நாடக பாவமான முறை. அதுவே, மக்களின் மனங்களைத் தொட்டது. எப்படி அவரின் திரைப்பாடல்கள் புகழ்பெற்றனவோ அதேபோல் பக்திப்பாடல்களும் புகழ்பெற்றன.
‘உள்ளம் உருகுதையா’, ‘கந்தன் திருநீறணிந்தால்’, முதலியன முருகன் பக்திப் பாடல்கள் ஏறக்குறைய தமிழ்வேதங்களைப் போல மிகவும் பக்தியோடு பக்தர்களால் பாடவும், கேட்கவும் பட்டன.
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
வைணவக் குடும்பத்தில் பிறந்தபோதும் காலம் முழுவதும் தன்னை முருகபக்தனாகவே அடையாளப்படுத்திக்கொண்டு அப்படியே வாழ்ந்து மறைந்தவர் டி.எம்.எஸ். அவர் காலத்தில் வாழ்ந்த சமயப் பெரியவர்களான மகாபெரியவா, புட்டபர்த்தி சாயிபாபா ஆகியோர் இவரைக் காணவிரும்பி அழைத்து அவருக்கு ஆசி வழங்கி கௌரவித்தனர்.
டி.எம்.எஸ்ஸின் பல பக்திப் பாடல்களுக்கு அவரே இசையும் அமைத்திருக்கிறார். அப்படி அவர் இசையமைத்துப் பாடிய பாடல்களில் ஒன்று ‘கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்…’ என்னும் பாடல். தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த இந்தப் பாடலில் சரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்த ராகமாலிகா வகையைச் சேர்ந்தது. அந்த ராகத்தின் பெயரும் அந்தச் சரணத்தில் வரும்.
2010ஆம் ஆண்டு கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற பாடலே டி.எம்.சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்.
டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு 1978ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சங்கீத மும்மூர்த்திகளாகிய தியாகையர் (டி) முத்துச்சாமி தீட்சிதர் (எம்) சாமா சாஸ்திரி (எஸ்) மூவரும் என் பெயரிலேயே இருக்கிறார்கள் என்று டி.எம்.எஸ். மகிழ்வோடு ஒருமுறை குறிப்பிட்டது நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. டி.எம்.எஸ். டி.எம்.எஸ். தான்!