காட்டில் அதிசயங்கள்

உலக அதிசயங்கள் எத்தனை என்று கேட்டால் உடனே ‘எட்டு’ என்று
சொல்லி அவற்றை தாஜ்மஹால், பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம் என்று
வரிசைப்படுத்திக் கூறத் தொடங்குவோம். இவை தவிர நம்நாட்டிலே,
ஊருக்குள்ளே நம்மைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்ற
அதிசயங்களை நாம் எண்ணிப் பார்த்ததுண்டா?
பிலோ இருதயநாத் என்கின்ற ஓர் எழுத்தாளரை அந்தக் காலத்து
வாசிப்பாளர்கள் அறிந்திருப்பார்கள். அஞ்சல் அலுவலகத்தில் வேலை பார்த்த
இவர், தன் சொந்தச் செலவில் சுயமுயற்சியால் தமிழகத்தின் மலைப்பகுதிகளில்
காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களுடைய பழக்கவழக்கங்களை,
நம்பிக்கைகளை அங்கேயே சென்று அவர்களோடு தங்கி அதனை கலைமகள்,
மஞ்சரி, கலைக்கதிர் போன்ற பத்திரிக்கைகளில் எழுதி பதிவு செய்தார்.
சுற்றுப்புறச் சூழல், மானுடவியல் என்று, இன்று பலதுறைகள்
வளர்ந்திருந்தாலும் தம் எழுத்தில் இவற்றைத் தொடங்கி வைத்தவர் பிலோ
இருதயநாத் எனச் சொல்லலாம்.
பயண வசதிகள் ஏதுமில்லாத அந்தக் காலத்தில் சுமையேற்றி வரும்
லாரிகளில், மாட்டு வண்டிகளில், மட்டக் குதிரைகளில் பயணம்செய்து சில
நேரங்களில் இரவுப்பயணத்தைத் தவிர்த்துத் தாம் இருக்கும்; பகுதியிலேயே
தங்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பிலோ இருதயநாத்.
ஒருமுறை மலைவாழ் பழங்குடியினரைக் காண்பதற்காகச் சென்ற அவர்,
அவர்களுடைய குடிசை ஒன்றில் தங்க நேரிட்ட அனுபவத்தை எழுதுகிறார்.
நள்ளிரவு நேரத்தில் அவர் தங்கியிருந்த குடிசைக்கு வெளியே பெரிய சத்தம்
கேட்டு எழுந்து ஓடியிருக்கிறார். பக்கத்து குடிசையிலிருந்த ஒரு பெண் நெருப்பு,
நெருப்பு என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அலறியிருக்கிறாள்.
எல்லோரும் அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, நெருப்பின் வெப்பமோ, புகையோ ஏதுமில்லாமல்
வெளியில் போடப்பட்டிருந்த வெட்டப்பட்ட மரக்கட்டைகளில் சில, எரியும் கங்குபோல ஜொலித்துக் கொண்டிருந்தன. அதன் அருகில் போக அம்மக்கள் அஞ்சி நின்றபோது, அவர் மெதுவாகச் சென்று அந்தக் கட்டைகளில் ஒன்றைத் தொட்டுப் பார்த்து, பிறகு தன் கையில் அதனை எடுத்துப் பார்த்தார். வெப்பமில்லாத அந்தமரக்கட்டை தன் கையில் ஒளிர்வதைக் கண்டு ஆச்சரியமடைந்திருக்கிறார்.
மறுநாள்காலை அந்த மரக்கட்டையை வெட்டிக்கொண்டு வந்தவனிடத்தில்,
‘இதை நீ எங்கே வெட்டினாய்? இந்த மரத்தின் பெயர் என்ன?’ என்று அவனிடத்தில்
கேட்டார். அவன் அவரை அழைத்துக்கொண்டுபோய் தான் வெட்டிய அந்த அதிசய
மரத்தைச் சுட்டிக் காட்டினான். மலைச்சரிவில், அடர்த்தியான மரங்களுக்கு
இடையே இருந்த அந்த மரம், பகல்நேரத்தில் சாதாரண மரமாகவே காணப்பட்டது.
உடனே பிலோ இருதயநாத் அந்த மரத்தின் பட்டைகள் சிலவற்றைச் செதுக்கி
எடுத்துக்கொண்டு தன்ஊர் திரும்புகிறார். தன் வீட்டில் அன்றிரவு தான் கொண்டு
வந்த மரப்பட்டையை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அடைத்து, வீட்டில்
இருந்த விளக்குகளை எல்லாம் அணைக்கச் சொல்லுகிறார்.
சற்றுநேரத்தில் அந்த பாட்டில் சிறிய மின்விளக்கு போல ஒளிவீசத்
தொடங்கியது. வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சரியமடைய அந்தத்
தெருவிலிருந்த பலரும் தினசரி வந்து அந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுச்
சென்றனர்.
சிலநாட்கள் கழித்து அந்த ஒளி மங்கத் தொடங்கியது. இதனைப் பற்றி
பிலோ இருதயநாத் கூறும்போது, அந்த மரத்தின் பட்டைகளில் எண்ணெய் கசிவு
இருந்திருக்க வேண்டும். அது காற்றிலுள்ள ஆக்சிஜனோடு கலந்து அந்த ஒளியை
உண்டாக்கியிருக்கலாம்.
‘இப்படிப்பட்ட பெயர் தெரியாத மூலிகைக் குணங்களும், அதிசயங்களும்
நிறைந்த மரங்கள் நம் மலைக்காடுகளில் இருக்கின்றன. அவற்றை நாம்
பாதுகாப்பது அவசியம்’ எனவும் எழுதுகிறார்.