காடு… கடவுளின் வீடு…

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.”
பூமியில் மனிதஇனம் தோன்றுவதற்கு முன்பு தோன்றியவை மரங்கள் சூழ்ந்த வனம். மரங்களைத் தொடர்ந்தே உலக உயிரினங்களும் பின்னர் மனித உயிர்களும் தோன்றியிருக்கலாம் என்பது அறிவியல் கூறும் செய்தி. உலகெங்கும் காடுகள் இருந்தன என்பதற்குச் சான்றாதாரங்கள் அந்தந்த நாட்டில் தோன்றிய இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்றவையே.
இந்திய பரத கண்டத்தில் தோன்றிய ஆதி காவியமான வால்மீகியால் எழுதப்பட்ட இராமாயணத்தில் இராமன் 14வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கைகேயி வரம் கேட்பதாகக் காட்டப்படுகிறது. இதை அடுத்துத் தோன்றிய மகாபாரதத்திலும் பாண்டவர்களும் பாஞ்சாலியும் 12ஆண்டுகள் காட்டில் வசிக்கவேண்டுமென்று துரியோதனன் கட்டளையிட்டதாக அக்காப்பியம் எடுத்துக்கூறுகிறது.
உண்மைக்காக வாழ்ந்த அரிச்சந்திரன் விஸ்வாமித்திரருக்காக நாடு துறந்து, காடு சென்ற வரலாற்றையும் அரிச்சந்திர புராணத்தில் பார்க்கிறோம். மேலும் அக்காலத்தில் நாடுகளுக்கு இயற்கை அரண்களாகக் காடுகள் இருந்ததைப் “புறப்பொருள் வெண்பா மாலை” போன்ற நூல்கள் தமிழில் கூறுகின்றன.
விக்ரமாதித்தனும் அவனுடைய அமைச்சராகிய பட்டியும் நாடாறு மாதம் காடாறு மாதமாக ஆட்சி செய்ததையும் விக்ரமாதித்தன் கதைகளில் படித்திருக்கிறோம்.
தமிழர்கள் நிலங்களைப் பிரிக்கும்போது, மலையும் மலை சார்ந்த இடங்களைக் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடங்களை முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த இடங்களை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடங்களை நெய்தல் என்றும் மணலும் மணல் சார்ந்த இடங்களைப் பாலை என்றும் பகுத்து வைத்திருந்தனர். இதில் முல்லை நிலப்பகுதியில் காட்டின் இயற்கை வளம் மிக அழகாக வர்ணிக்கப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு தொழில்புரட்சியும் இராட்சதக் கருவிகளின் வருகைக்குப் பிறகு, காடுகள் அழிக்கப்பட்டன. நான் கல்லூரியில் படித்த காலங்களில் மொழிபெயர்ப்பு நாவல்களை அதிகம் படிப்பேன். அதில் நாடோடி என்பவர் தமிழில் மொழிபெயர்த்த மராட்டிய நாவலான ‘வனவாசி’ காடுகளின் அழிப்பையும் தொழிற்சாலைகளின் வளர்ச்சியையும் எடுத்துரைப்பதாக எனக்குப் படித்த ஞாபகம்.
இதேபோல, சா.கந்தசாமி அவர்கள் எழுதிய ‘சாயாவனம்’ என்னும் நாவலும் தஞ்சைப் பகுதிகளில் அழிக்கபட்ட காடுகளைப் பற்றிய நாவல்தான். காடுகளின் பயன்களை உலகிற்கு உணர்த்த அந்தக் காலத்தில் வேட்டைக்காரர்கள் மற்றும் காடுகளில் பயணித்த எழுத்தாளர்களின் அனுபவங்களும் எழுத்துக்களும்தான் நமக்கு ஆதாரமாய் கிடைக்கின்றன.
பிலோ இருதயநாத் என்னும் எழுத்தாளர் காடுகளினூடே பயனப்பட்டு இயற்கையின் அழகையும் அங்கு வாழ்கிற மக்களைப் பற்றியும் கட்டுரை வடிவில் எழுதிய செய்திகளை நான் மஞ்சரி இதழில் படித்திருக்கிறேன்.
உலகின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிப்பதில் சதுப்பு நிலக்காடுகளுக்கும் அமேசான் காடுகளுக்கும் பெரும் பங்கு உண்டு என்பது அறிவியலாளர்கள் கருத்து.
தற்காலத்தில் காடுகள் குறைந்து வருவதால் மழையின் அளவும் குறைந்து வருகிறது. தற்போது ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அடர் வனங்களை உருவாக்க வேண்டும் என்று தற்கால மனிதர்களும் அரசாங்கமும் முயற்சி எடுத்திருப்பது பாராட்டிற்குரிய ஒன்று. மேலும் உலகக் காடுகளின் தினம் பற்றி சில செய்திகளைக் காண்போம்…
பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21ஆம் தேதி சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் மூலம் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பலநாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.
பருவகால நிலை சீராக இருப்பதற்குக் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் மாதம் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் காடுகளால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் வனவளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் எடுத்துச் சொல்லப்படுகிறது.
உலகின் பல பகுதிகளில் உள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் காடுகள் பல விலங்குகளுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண்அரிப்பையும் தடுக்கின்றன.
காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.
நம் இந்தியாவில் சுமார் காடுகள் மற்றும் மரங்கள் சூழப்பட்டிருக்கிறது. சுமார் 100 தேசிய பூங்காக்கள், 515 வனவிலங்கு சரணாலயங்கள் இருக்கின்றன. தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் மழை பெய்வதில் காடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். இந்தியப் பொருளாதாரம், விவசாயத்தைப் பெருமளவில் சார்ந்துள்ளது. எனவே காடுகளை பாதுகாப்பது நமது கடமை.
மனிதர்களுக்கு நாடு எவ்வளவு முக்கியமோ… காடும் அதைவிட முக்கியம்! காடுகளைக் காப்போம்! உலக உயிர்களை மீட்போம்!