கவி காளமேகம்

தமிழ்க் கவிதை உலகில் திருவள்ளுவர் போல ஒரு நூலைப் படைத்து பெருமை பெற்றவர்கள் சிலருண்டு. சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள், சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கத் தேவர், இராமாயணம் பாடிய கம்பர் போன்ற புலவர்கள், தாங்கள் படைத்த காப்பியங்களால் பெருமை பெற்றார்கள். ஆனால் காளமேகப் புலவர் போன்ற பிற்காலப் புலவர்கள் தாங்கள் படைத்த தனிப்பாடல்களால் மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள். காளமேகப் புலவர் தமிழகத்தில் திருக்குடந்தை என்று அழைக்கப்படுகிற கும்பகோணம் நகரிலே பிறந்து, ஸ்ரீரங்கத்திலே பள்ளிகொண்ட பெருமாள் கோவிலிலே பரிசாரகனாக (சமையல் வேலை செய்பவர்) இருந்து, அருகிலிருந்த திருவானைக்காவல் என்னும் சிவதலத்தில் வாழ்ந்த மோகனாங்கி என்ற பெண்ணை விரும்பி அவளோடு வாழ்க்கை நடத்தியவர். பின்னர், தன் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து, இடத்திற்கும், தான் சந்தித்த நபர்களுக்கும், தன் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் ஏற்றபடி கவிதைகளைப் பாடித் தந்தவர். இவரது காலம் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர்.
சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் வீழ்ந்தபின், தமிழகத்தில் சிற்றரரசர்களும், ஜமீன்தார்களும், திருமடத் தலைவர்களும் புலவர்களை ஆதரித்தனர். அக்காலப் புலவர்களும் தமிழ்ப் பாடல்களைப் புனைவதை மட்டுமே அறிந்திருந்ததால், மேலே சொன்ன செல்வம் படைத்தோரைச் சார்ந்து வாழவேண்டிய சூழல் இருந்தது. காளமேகப் புலவரும் இத்தகைய வள்ளல்களைப் பாடியும், தன்னோடு போட்டியிட்டவர்களோடு மோதியும், கோபமேற்பட்டபோது வசைபாடியும், கடவுளர்களை ‘நிந்தாஸ்துதி’ எனும் முறையில் வஞ்சப் புகழ்ச்சியால் வசைபாடியும், சிலேடைப் பாடல்களால் நகைச்சுவை உணர்வைக் கூட்டியும் வாழ்ந்துள்ளார்.
இன்னும் சொல்வதாக இருந்தால் ஆககவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக் கவி, எனும் நான்கு வகைக் கவிஞர்களுள் நம் காளமேகப் புலவர் ஆககவியாகத் திகழ்ந்துள்ளார். ஆககவி என்பவர்கள் நினைத்த மாத்திரத்தில் பாடல்களைப் புனையும் ஆற்றல் கொண்டவர்கள்.
“வசைபாடக் காளமேகம்” எனும் ஒரு வழக்குச் சொல் தமிழகத்தில் உண்டு. அதற்குக் காரணம் ஒரு சபையிலோ, ஓர் இடத்திலோ தமக்கு அவமானம் ஏற்பட்டால் சிலர் இறைவனிடம் முறையிடுவர். இன்னும் சிலர் தனியே சென்று மனம் வருந்துவர். ஆனால் காளமேகம் போன்ற புலவர்களோ தங்கள் கோபத்தைப் பாடலாகப் பதிவு செய்வார்கள். அவை இலக்கியமாகவும் அமைவதுதான் சிறப்பு.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு, போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாத அக்காலத்தில் நடந்தும், மாட்டு வண்டிகளில் பயணம் செய்தும், காளமேகம் போன்ற புலவர்கள் உணவிற்காகவும், பொருளுக்காகவும் அலைந்து திரிந்திருக்கிறார்கள்.
ஆககவியான இவர், கடவுளர்களைப் பாடுகிறபோது நகைச்சுவை உணர்வுடனும், நட்பு மிகுந்த தோழமையுடனும் பாடல்களைப் பாடியிருப்பது வியப்புக்குரிய ஒன்று.
முழுமுதற் கடவுளான சிவபெருமானாக இருந்தாலும், காக்கும் கடவுளான திருமாலாக இருந்தாலும், அவர்களை, இவர் காணுகிற புதிய கோணம் மகிழ்வுக்குரிய ஒன்றாகும்.
ஒருமுறை திருக்கண்ணபுரத்திற்குச் சென்ற காளமேகம் அக்கண்ணபுரப் பெருமாளை வணங்கிக் கேலிமிகுந்த குரலில், ‘கண்ணபுரத்துப் பெருமாளே! இந்த உலகில் அதிக அவதாரங்களை நீ எடுத்ததாக எண்ணிப் பெருமைப்பட வேண்டாம். உனக்கு அவதாரங்கள் பத்துதான், முக்கண்ணனாகிய சிவபெருமானுக்கோ பிறப்பே இல்லை. ஆனால் என் பிறவியை எண்ணிப் பார்த்தால் எண்ணவே முடியாது. எனவே அதிகப் பிறவிகள் எடுத்த நானே உன்னிலும் உயர்ந்தவன்’ என்பதை,
“கண்ணபுர மாலே கடவுளிலும் நீயதிகம்
உன்னிலுமே யானதிக மொன்றுகேள் – முன்னமே
உன் பிறப்போ பத்தா முயர் சிவனுக் கொன்றுமில்லை
என் பிறப்பெண் ணத்தொலை யா”
எனப் பாடுகிறார்.
இம்மாதிரியே சிவபெருமானைப் பாடுகிறபோதும் இனிமையான பாடலொன்றைப் பாடுகிறார்.
திருச்செங்கோடு என்ற சிவத்தலத்திற்கு இறைவனை வழிபடச் செல்கிறார் காளமேகம். அக்கோயிலிலுள்ள சிவபெருமானை வணங்கிவிட்டு, நிந்தாஸ்துதியாக ஒரு பாடலும் பாடுகிறார். “பெருமையும் ஒழுக்கமும் கொண்டு நாட்டின் நடுவே உள்ள கோயில்களில் இத்தனை காலமாகக் குடியிருந்த எம்பெருமானே! இன்றைக்கு இந்தக் காட்டுக்கு நடுவே திருச்செங்காட்டில் வந்து நீர் தங்கியிருக்கிற காரணத்தை நான் அறிந்துகொண்டேன்.
நீர் இரண்டு கொலைகளைச் செய்திருக்கிறீர், ஒரு கொலையைச் செய்யுமாறு தூண்டியிருக்கிறீர். முன்னொரு காலத்தில் மார்க்கண்டேயனுக்காக காலகாலனைக் காலால் உதைத்துக் கொன்றீர். அதற்கு முந்திய காலத்தில் மன்மதனாகிய காமனை நெற்றிக் கண்ணால் எரித்துக் கொன்றீர். சிவத்தொண்டராகிய சிறுத்தொண்டனையும் அவரது மனைவியையும் அவர்கள் பெற்ற பிள்ளையாகிய சீராளனையும் அவர்களே கொல்லுமாறு தூண்டினீர். (இத்தகைய பழிகளைப் போக்கிக் கொள்ளத்தான் நீர் இந்தத் திருச்செங்கோட்டிலே மறைந்திருக்கிறீர் எனத் தெரிந்து கொண்டேன்” என்பதை,
“காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ – சீலருடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர்திருச்செங்;
காட்டிலே வீற்றிருந்தக் கால்”
எனும் பாடலாக்கிப் படைத்துள்ளார்.
அக்காலப் புலவர்கள் பொருளுக்காகவும், உணவுக்காகவும் அலைந்து திரிந்து வள்ளல்களைப் பாடி வாழ்க்கை நடத்தினார்கள் என்றாலும், காளமேகப் புலவர் போன்றோர்களே தங்கள் வாழ்க்கை நிலையை எளிமையாக, இனிமையாக, கடவுளை வழிபடும்போதுகூட நகைச்சுவை உணர்வு மேலிட வாழ்ந்திருக்கிறார்கள். சிலேடைப் பாடல்கள் பாடுவதிலும், காளமேகப் புலவர் வல்லவராகத் திகழ்ந்தார் என அறிகிறோம்.
அவரது இடைவிடாத பயணமும், மக்களின் நடுவே இருந்து அவர்களின் தன்மையை உள்வாங்கி எளிய பாடல்களாக்கித் தந்த திறனும், புலவர் பெருமானாகிய காளமேகத்திற்குத் தமிழ் இலக்கிய உலகில் தனியிடம் கிடைக்கச் செய்தது என்பது உண்மை.