கல்வி அழகே அழகு…
மனிதர்களை விலங்கு நிலையிலிருந்து வேறுபடுத்தி மனிதனாக, மனிதரில்
சான்றோனாக, தெய்வநிலைக்கு உயர்த்துவது கல்வியே. இக்கல்வியின்
அருமையையுணர்ந்த நம் முன்னோர்கள் கற்றவர்க்கு எதிலும் முதலிடம்
கொடுத்தனர்.
திருவள்ளுவர், படிப்பதற்கான வழிகளைப் பலவகையில் நமக்குத்
தந்திருக்கிறார்.
கற்க, கசடறக் கற்க, கற்பவை கற்க, கற்றபின் கற்க, கற்க நிற்க, கற்க
அதற்குத்தக
அதாவது படி, பிழையில்லாமல் படி, படிக்க வேண்டியவற்றைப் படி,
படித்தபின்பும் படி, படித்தபடி நிற்பதற்காகப் படி என்பது அவர் கருத்து.
சமண முனிவர்கள் தமிழுக்குச் செய்த கல்வித்தொண்டு மிக அதிகம். ‘பள்ளி’
என்கிற சொல் பௌத்த, சமண மதங்களிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என
அறிஞர்கள் கூறுவர். அச்சமண முனிவர்கள் எழுதிய நாலடியார் என்ற நூல்,
கல்வியின் சிறப்புக் குறித்து,
“எந்த உலகத்திலும் நாங்கள் இதுவரை, எல்லாத் துன்பங்களையும்
போக்குகின்ற மருந்தாகிய கல்வியைப்போல் கண்டதில்லை என்பதை,
“எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்விப்போல்
மம்மர் அறுக்கும் மருந்து”
என்றும், ‘கல்வி அழகுதான் அழகு; ஏனைய நிலையற்றது எனவும் கூறுகின்றது.
இத்தகைய கல்வியை எவ்வளவு நாள் கற்க வேண்டும் என்ற கேள்வி
நமக்குள் எழலாம். இதற்கும் நம் வள்ளுவரே விடை சொல்லியிருக்கிறார்.
எதையும் கருதாது, எத்தகைய இடத்திலும், மரணகாலம் வரை
படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதை,
“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”
இக்குறளில் (யா,தா,நா,டா,மா,ஊ,ரா போன்ற)அதிகமான நெடில் எழுத்துக்களை
வள்ளுவர் பயன்படுத்துகிறார். அதற்குக் காரணம், சொல்லுகிற செய்தியை
அழுத்தம் திருத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டுவதுபோல நெடில் எழுத்துக்களால்
குறளை அழகுபடுத்திக் காட்டுகிறார் வள்ளுவர்.