கல்வியால் உயர்வோம்…

“கற்கை நன்றே! கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே!”
பிச்சை எடுத்தாவது படிப்பைத் தொடரவேண்டும் என அதிவீரராம பாண்டியன் ‘வெற்றி வேட்கை’ என்ற நூலில், கூறியதைக் காண்கிறோம்.
ஏனென்றால் சாதி வேறுபாடு, இனவேறுபாடு, ஏழை, பணக்காரன் ஏற்றத்தாழ்வு இத்தனையிலிருந்து, கல்வி ஒரு மனிதனை உயர்த்திக் காட்டும்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவர்க்கும், துரியோதனன் முதலான அவன் தம்பிமார்கள் நூறுபேருக்கும் வில்வித்தை கற்றுத் தந்தவர் துரோணர் என்னும் ஆசிரியர் ஆவார். அஸ்தினாபுரத்தில் இவர்கள் அனைவருக்கும் தங்கள் வீரத்தைப் பொதுமக்கள் முன் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினார்கள். அன்றைக்கு அர்ச்சுனன், வீரர்களுள் வீரனாய் வெற்றிக்கொடி நாட்டினான்.
அப்போது தேரோட்டியின் வளர்ப்பு மகனான கர்ணன் வில்வித்தையில் தன் திறமையைக் காட்ட, ஆசிரியர் துரோணரிடம் அனுமதி கேட்டான். ஆனால், துரோணரோ, ‘நீ யார்? உன் தாய் தந்தையர் பெயர் என்ன? நீ எந்தக் குலத்தைச் சேர்ந்தவன். இது அரசகுமாரருக்குரிய போட்டி. இதில் நீ கலந்து கொள்ள முடியாது’ என அனுமதி மறுத்தார்.
வீரனாகிய கர்ணன் வேதனையோடு திரும்பினான். அப்போது கௌரவர்களின் தலைவனாகிய துரியோதனன் தன் ஆசிரியராகிய துரோணரைப் பார்த்து, “ஐயா, ஆசிரியப் பெருமகனாரே, தாங்கள் முற்றிலும் கற்றுணர்ந்தவர். இந்த உலகத்தில் படித்தவர்கள், அழகுள்ள மங்கையர்கள், அறிவுப் பெருக்கால் உயர்ந்தவர்கள், வீரங்கொண்டு நாட்டைக் காப்பவர்கள் இவர்கள் எந்த சாதியில், எந்த இனத்தில் இருந்தாலும், அவர்களுடைய திறமையால் எண்ணப்படுவார்களேயன்றி, சாதியால் தூக்கி எறியப்பட மாட்டார்கள். இது தங்களுக்குத் தெரியாதா” எனக் கேட்டான். இதனைப் பாரதம் பாடிய வில்லிபுத்தூரார் கீழ்க்கண்டவாறு மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.
“கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை
உற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ் வுடை
கொற்றவர்க்கு உண்மையான கோதில்ஞான சரிதர
நற்றவர்க்கு ஒன்று சாதி நன்மை தீமை இல்லையால்”
(வில்லிபாரதம்)
வயிற்றுக்கான கல்வி என்பது வேறு; வாழ்க்கைக்கான கல்வி என்பது வேறு. தேடிச்சோறு தினம் தின்பதற்காகக் கல்வி கற்காமல், மனிதகுல வாழ்வை உயர்த்துவதற்காகக் கற்கும் கல்வியே என்றைக்கும் போற்றத்தகுந்தது.
விஞ்ஞானிகளின் கல்வி, உலக இருளைப் போக்கி மின்சாரம் என்னும் ஒளியைக் கொடுத்தது.
பொருளாதார மேதைகளின் கல்வி, வறுமை இருளைப் போக்கி வசதிமிக்க வாழ்வைக் கொடுத்தது.
உண்மையும், உயர்வும் மிக்க கல்வி, அறியாமை என்னும் மன இருள் அகற்றி, ஞானதீபத்தை உண்டாக்கும். இது உண்மை.