கலைமகளுக்கே ஆசிரியர்… கி.வா.ஜ.,…

தமிழில் சிலேடை என்பது இரட்டுற மொழிதல்’ என்ற பொருளில் வரும். அக்காலத்தில் சிலேடையாகப் பாடுவதில் காளமேகப்புலவர் வல்லவர். பேச்சில் சிலேடை தொனிக்கப் பேசுபவர்கள் தம் பேச்சால் அனைவரையும் ஈர்ப்பர். அத்தகைய வல்லமை பெற்றவர்களில் ஒருவர்தான் கி.வா. ஜகந்நாதன் அவர்கள். இவர் மிகச்சிறந்த எழுத்தாளர், பேச்சாளர் என்பதோடு பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தார்.

ஒருமுறை இவருடைய நண்பர் இவரைப் பாராட்டிப் பேசும்போது ‘உங்களுக்குக் கிடைத்த புகழ் யாருக்குக் கிடைக்கும்’ என்றாராம். அதைக் கேட்டு கி.வா. ஜ. வியப்போடு, ‘என்ன புகழ்?’ என்று கேட்க, ‘நீங்கள் கலைமகளுக்கே ஆசிரியராயிற்றே’ என்று புன்னகையோடு சொன்னாராம். கேட்ட கி.வா.ஜ.வின் முகத்திலும் புன்னகை.

இவரின் சிலேடைகள் இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றபடி அமையும். ஒருமுறை இவர் ஒரு ஊருக்குப் பேசுவதற்காக இரயிலில் சென்றாராம். காலைநேரத்தில் இரயில் அந்த ஊரில் போய் நிற்க, இவரை வரவேற்க வந்தவர்கள், பெரிய மாலையைக் கொண்டுவந்து இவர் கழுத்தில் போட்டார்களாம். உடனே கி.வா.ஜ., ‘ஆஹா! காலையிலேயே மாலை வந்துவிட்டதா?’ என்று சொன்னவுடன் அத்தனைபேரும் மகிழ்ந்து போனார்களாம்.

இதேபோல ஒருமுறை ஒரு வீட்டில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம் கி.வா.ஜ., அப்போது அந்த வீட்டில் உணவு பரிமாறிய அம்மையார் ‘ஐயாவுக்குப் பூரி பிடிக்குமா?’ என்று கேட்க, உடனே அவர், ‘ஜகந்நாதனுக்குப் பூரி பிடிக்காதா? எத்தனை  வேண்டுமானாலும் போடுங்கள்’ என்றாராம். இவ்வாறாகப் பேச்சிலும் எழுத்திலும் கவிதைப் புனைவதிலும் வல்லவராகத் திகழ்ந்த கி.வா.ஜ., அவர்களைக் குறித்து மேலும் சில செய்திகளைக் காண்போம்….

 கி.வா. ஜகந்நாதன் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர், சொற்பொழிவாளர், சிலேடைப் பேச்சில் வல்லவர். இவர் கரூர் மாவட்டம் கிரு~;ணராயபுரத்தில் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி பிறந்தார். கணிதமும், இயற்பியலும் இவருக்குப் பிடித்த பாடங்கள். இளம்வயதிலேயே திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி உள்ளிட்டவற்றை மனப்பாடமாகக் கூறுவார். எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சிதம்பரம் நடராஜர் மீது ஷபோற்றிப் பத்து’ என்ற பதிகத்தை 14ஆம் வயதில் எழுதினார். முருகன் மீதும் பல பாடல்கள் எழுதினார்.

இயல்பாகவே தமிழார்வமும் பற்றும் கொண்டிருந்த அவர், கவிதைகள், எழுத ஆரம்பித்தார். ‘ஜோதி’ என்ற புனைபெயரில் அவர் எழுதிய கவிதைகள், அக்காலப் பிரபல இதழ்களான ‘தமிழ்நாடு’ போன்றவற்றில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

காந்திஜியின் விடுதலை இயக்கம் கி.வா.ஜ.வை ஈர்த்தது. அதன்படி தூய கதராடை உடுத்தத் துவங்கினார். தானே ராட்டையில் நூல் நூற்றுக் கதர் ஆடைகளை அணிந்தார். மோகனூரில் இருந்த திலகர் வாசக சாலைக்குச் சென்று பத்திரிக்கை படிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அது அவரது தேசபக்தியை வளர்த்தது. சுதந்திரதேவி திருப்பள்ளியெழுச்சி, திருக்கோயில் போன்ற பல பாடல்களை எழுதினார்.

ஆண்டுதோறும் காந்தமலை முருகனுக்குத் திருவிழா நடக்கும். அப்படி நடந்த ஒரு திருவிழாவில் கி.வா.ஜ.வுக்குப் பேச வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் அவரது முதல் பேச்சு. அப்போது அவருக்கு வயது 22. மடைதிறந்த வெள்ளம்போல்p அவர் பேசியதைக் கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. அதுவே கி.வா.ஜ.வின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஆனது.

சென்னையில் குருகுல வாசம் துவங்கியது. அது கி.வா.ஜ.வின் வாழ்நாளில் அடுத்த திருப்புமுனை ஆனது. அதுமுதல் உ.வே.சா.வின் தமிழ்ப்பணிக்கு உதவுவதையே தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டார். உ.வே.சாவுக்கு உதவியாளராக மட்டுமல்லாமல், அவரது அன்புக்குகந்த மாணவராகவும் இருந்து இலக்கண, இலக்கியங்கள், சங்க நூல்கள், சிற்றிலக்கியங்கள், காப்பியங்கள், பிரபந்தங்கள் எனத் தமிழ் இலக்கியத்தின் பல கூறுகளைக் கற்றுத் தேர்ந்தார். மேலும் தமிழ் வித்வான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்;ச்சி பெற்றார்.

கி.வா.ஜ. அவர்கள் சிறுகதைகளும் எழுதினார். திருக்குறள், திருவெம்பாவை, திருப்புகழ், பெரியபுராணம் நூல்களுக்கு விளக்கவுரையும் எழுதினார்.

பன்முகம்கொண்ட கி.வா.ஜ. சுமார் 150க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். அவரது நூல்களுக்குத் தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா எனப் பல நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழின் பெருமையைப் பரப்பியவர் கி.வா.ஜ..

வாகீச கலாநிதி, செந்தமிழ்ச் செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித் தவமணி போன்ற பல்வேறு பட்டங்களைப் பெற்றவர் கிரு~;ணராஜபுரம் வாசுதேவன் ஜகந்நாதன் என்னும் கி.வா.ஜ.

1933ஆம் ஆண்டு இவர் வித்துவான் பட்டம் பெற்றார். மேலும் 1949ஆம் ஆண்டு திருமுருகாற்றுப்படை அரசு, 1951இல் வாகீச கலாநிதி, 1982இல் இராஜா சர். அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

1967ஆம் ஆண்டு கி.வா.ஜ.வின் ‘வீரர் உலகம்’ என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும் கம்பன் கழகம் இவரது நினைவாக கி.வா.ஜ. பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

பல்துறை வித்தகராய்… பத்திரிக்கை ஆசிரியராய்… பார் போற்ற வாழ்ந்தவர் கி.வா.ஜ.!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.