கற்றார்கள்…. வென்றார்கள்…

படித்தால் உலகை வெல்ல முடியுமா? என்ற கேள்வி இன்றைய இளையதலைமுறையிடம் இருக்கிறது. இதற்குக் கவியரசு கண்ணதாசன் அவர்களுடைய பாணியில் விடைசொல்வதாக இருந்தால்,
‘மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னைத் தானும் அறிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்….’
என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் நடித்த ‘வேட்டைக்காரன்’ படப் பாடலைச் சொல்லலாம்.
இதற்கு இரண்டு ஆதாரங்களை உங்களுக்குத் தருகிறேன். நான் தயார்… நீங்கள் தயாரா….?
அந்தப் பத்து வயதுப் பையனுடைய அப்பா ஒரு விறகுவெட்டி, செருப்புத் தைக்கும் தொழிலும் அவருக்குத் தெரியும். அவர்களுக்கு வீடு என்று தனியாக எதுவும் கிடையாது. அதனால் ஊர் ஊராக அல்லது காடு காடாகச் செல்வார்கள். அந்தப் பையனும் அப்பாவோடு சென்றதால் பள்ளிக்கூடம் சென்றது கிடையாது. ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆசை உண்டு. தந்தைக்கு உதவியாக விறகு வெட்டுவான். சிறு நகரங்களுக்குத் தந்தையுடன் சென்று வருவான். எங்காவது பள்ளிக்கூடங்களைப் பார்த்தால் ‘நாமும் இங்கே படிக்கலாமே!’ என ஆசைப்படுவான்.
சிலவருடங்களில் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தன் சிற்றன்னையிடம் கற்றுக்கொண்டான். அதன்பிறகு எங்கு சிறுதுண்டுக் காகிதம் கிடைத்தாலும் அதை எடுத்து, அது எந்த இடமாக இருந்தாலும் கவலைப்படாமல் சத்தமாகப் படிப்பான். மனதிற்குள் வாசிக்கும் வழக்கம் அவனுக்குக் கிடையாது.
ஒருநாள் பக்கத்து ஊர்க்காரரிடம் சில புத்தகங்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டான். ஐந்து மைல் நடந்து சென்று அவரிடம் ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருவதாகக் கேட்டான். இரவலாகத் தருமாறுதான்.
‘கவனம்… கிழிந்தாலோ, தொலைந்தாலோ புதிய புத்தகம்தான் எனக்கு வாங்கித் தரவேண்டும்’ எனச் சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தார்.
பையனுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி. வாசித்துக்கொண்டே (சத்தம் போட்டுத்தான்) வீடு வந்தான். சிலநாட்கள், அந்தப் புத்தகத்தோடுதான் படுப்பது, உண்பது, மரத்தின் மேலேறி வாசிப்பது எல்லாம். அந்த வீட்டில் விளக்கு வசதி கிடையாது. அவன் வீடு – அது வீடே கிடையாது. இடிந்த மண்சுவர், ஒழுகும் கூரை. அவ்வளவுதான்.
ஒருவழியாகப் புத்தகம் முழுவதும் படித்து முடித்தான். மறுநாள் பக்கத்து ஊருக்குச் சென்று அதைத் திருப்பித் தரவேண்டிய நாள். இரவு அந்தப் புத்தகத்தைக் கூரையில் செருகி வைத்துவிட்டுப் படுத்தான்.
இரவு மழை பெய்யத் தொடங்கியது. விடாத மழை. அதிகாலையில் மண்சுவர் இடிந்து கூரை ஒரு பக்கம் இறங்கிவிட்டது. எல்லோரும் வெளியே வந்தார்கள். எல்லாப் பொருட்களிலும் ஈரமண், சகதி. இந்தப் பையனுக்குத் திடீரென்று தன் புத்தகம் ஞாபகத்திற்கு வர, அந்தக் கூரையைத் தேடி ஓடினான். கூரை சகதியில், புத்தகம் அதே சகதி மண்ணில்.
பதட்டத்தோடு அதை எடுத்துத் தண்ணீரில் மெதுவாகக் கழுவி, காயவைத்து அப்போதே கிளம்பிப் பக்கத்து ஊருக்குச் சென்றான். புத்தக்காரரிடம் பயத்துடன் நடந்ததைச் சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தான்.
அவர் அதை வாங்க மறுத்தார்.
‘புதிய புத்தகம் வாங்கிக்கொடு, இல்லாவிட்டால் புத்தகத்துக்குரிய விலையைக் கொடு’ என்றார்.
‘ஐயா புத்தகம் வாங்கப் பணம் இருந்திருந்தால்;, நான் ஐந்துமைல் நடந்து தங்களைத் தேடி வந்திருக்கமாட்டேன். நான் ஏழை. தயவுசெய்து என்னை மன்னித்து இதை ஏற்றுக்கொள்ளுங்கள்…’
‘முடியாது. புத்தகத்துக்குரிய விலைக்காக நீ என்னிடம் வேலை செய்யவேண்டும். செய்வாயா?’
‘தாராளமாக எந்த வேலையையும், எவ்வளவு நேரமும் செய்வேன். வேலை செய்து முடித்தபின் இந்தப் பழைய புத்தகத்தை எனக்கே தந்துவிடுவீர்களா? கூலியாக!’
‘சரி அப்படியே. இதோ என்னுடைய வயலில் உழவு வேலை செய்யவேண்டும். என் இரு குதிரைகளில் ஒன்றிற்கு உடல்நலமில்லை. நீயே அந்தக் குதிரைக்குப் பதில், மற்றொரு குதிரையோடு சேர்ந்து ஏர் இழுத்து உழவேண்டும்.
‘அப்படியே செய்கிறேன்’ மகிழ்ச்சியோடு சொன்னான். மூன்றுநாட்கள் குதிரையோடு ஏர் இழுத்து, வேலைமுடித்து, அந்தப் பழைய புத்தகத்தை அதற்கான வெகுமதியாகப் பெற்று மிகுந்த மகிழ்ச்சியோடு தன் ஊருக்குக் கிளம்பி நடந்தான்.
ஒரு புத்தகத்திற்காகப் பத்து மைல்கள் நடந்து, மூன்றுநாள் ஏர் உழுது புத்தகத்தைப் பெற்ற இளைஞன், சில ஆண்டுகளில் சட்டம் பயின்று, பல தோல்விகளைச் சந்தித்து, அரசியலில் சேர்ந்து பிற்காலத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
அவன் பெயர் ஆப்ரஹாம் லிங்கன்!
இவரது வாழ்க்கையில் எத்தனையோ கொடிய சம்பவங்கள். இவர் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது, இவரது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், இவரை அவமதிக்கும் எண்ணத்தில், ‘மிஸ்டர் லிங்கன், இதோ நான் காலில் அணிந்திருக்கும் காலணிகள் உங்கள் தந்தையார் தைத்துக்கொடுத்தவை தெரியுமா?’ என ஏளனமாகச் சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்ட பலரும் சிரித்தார்கள். உடனே ஜனாதிபதியான லிஙகன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க, ‘ஐயா, இந்த நல்லநேரத்தில் என் தந்தையை நினைவுகூர்ந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. அவர் மட்டுமல்ல, நானும் செருப்புத் தைக்கும் தொழிலில் வல்லவன்தான். என் தந்தையிடம் இத்தொழிலைப் பயின்றிருக்கின்றேன். உங்கள் காலணியில் ஏதேனும் குறையிருந்தால் என்னிடம் தாருங்கள். உடனே சரிசெய்து தருகிறேன்’ என்றார்.
எதிர்கட்சி நண்பர் வெட்கித் தலைகுனிந்தார். இப்போது சொல்லுங்கள். படித்ததால் ஜெயித்தவர் ஆப்ரஹாம் லிங்கன் என்பதை மறுக்கமுடியுமா?
சரி… அமெரிக்க நாட்டில் ஆப்ரஹாம் லிங்கனைப் பற்றிப் பார்த்தோமே, நமதுநாட்டில் ஒரு செய்தி சொல்லவா?
நூற்றைம்பது வருடங்களுக்கு முன், நமது நாடு ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்தது. இவ்வளவு பள்ளிக்கூடங்கள் கிடையாது. ஏதாவது ஒரு ஊரில் ஒரு வாத்தியார் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்திருப்பார். கொஞ்சம் வசதி உள்ள வீட்டுப்பிள்ளைகள் பணம் அல்லது தானியங்களைக் கொடுத்துப் படித்து வருவார்கள்.
அதற்குமேல், அதவாது உயர்கல்வி, கற்கவேண்டுமென்றால், அதற்குரிய ஆசிரியரிடம் தனியாகப் பணம் கொடுத்துக் கற்கவேண்டும்.
நம் கதாநாயகன் பெயர் மீனாட்சிசுந்தரம். ஏழைக்குடும்பம்தான். திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்தது. உயர்கல்வி யாரிடமாவது கற்கவேண்டும். அதற்கு வசதியில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அந்த ஊருக்கு ஒரு பிச்சை எடுக்கும் சாமியார் ஒருவர் வந்தார்.
அவர் ஓர் அன்னக்காவடி. அன்னக்காவடி என்றால்…? காவி உடை அணிந்திருப்பார்கள். தங்களின் ஒரு தோள்பட்டையில் தராசுபோன்ற பிச்சைப் பாத்திரங்களைத் தூக்கிச்செல்வார்கள். ஒரு உலக்கை போன்ற மடித்தடியின் இருமுனைகளிலும் இரும்புச் சங்கிலிகளைத் தொங்கவிட்டு, அதில் ஒரு தட்டை இணைத்து அதில் பித்தளைப் பானைகளை வைத்திருப்பார்கள். இதற்கு அன்னக்காவடி என்று பெயர். ‘காவடி’ என்பது தோளில் தூக்கிச் செல்வது.
இருபுறமும் உள்ள பாத்திரங்களில் ஒன்றில் சாதமும், மற்றதில் அரிசியும் பெற்றுக் கொள்வார்கள். ஒரே ஊரில் தங்கி இருக்க மாட்டார்கள். ஊர்ஊராகச் சென்று கொண்டே இருப்பார்கள்.
நம் கதாநாயகன் மீனாட்சிசுந்தரத்தின் ஊருக்கு அன்னக்காவடிச் சாமியார் வந்தார். அவர் சிறந்த படிப்பாளி என ஊரார் பேசிக்கொண்டார்கள்.
குறிப்பாகத் தமிழ் இலக்கணங்களை நன்கு கற்றுப் பாடம் சொல்ல வல்லவராம். அதிலும், தமிழில் அணி இலக்கணமான ‘தண்டியலங்காரம்’ என்ற நூலுக்கு இவரைவிட்டால் பாடம் சொல்ல யாரும் இல்லையாம். ஊரெங்கும் இதே பேச்சு.
இதையெல்லாம் கேள்விப்பட்ட மீனாட்சி சுந்தரம் அவரிடம் சென்று வணங்கி, ‘ஐயா தாங்கள் இலக்கணப் பாடம் சொல்வதில் வல்லவர் எனக் கேள்விப்பட்டேன். தாங்கள் எனக்குத் தண்டியலங்காரம் கற்பிக்க வேண்டும்’ எனப் பணிவுடன் கேட்டுக்கொண்டார்.
அதற்கு அந்த அன்னக்காவடிச் சாமியாரும், ‘சரி உனக்கு நான் பாடம் சொல்கிறேன். எனக்கு எவ்வளவு பணம் கொடுப்பாய்?’
‘ஐயா, எங்கள் குடும்பம் வறுமையானது. என்னால் பணம் கொடுத்துப் பாடம் கேட்க முடியாதே!’ என்றார். உடனே அவரும், ‘நானே ஊர்ஊராகப் பிச்சை எடுப்பவன். என்னாலும் பணம் இல்லாமல் பாடம் சொல்ல முடியாதே’ என்றார்.
இரண்டு நாட்கள் சென்றன. மீனாட்சிசுந்தரம் திரும்ப வந்து, ‘ஐயா நான் தங்களுக்கு ஏதாவது பணிவிடை செய்யட்டுமா?’ என்று கேட்டார்.
‘நானோ ஆண்டி. எனக்கு எதற்குப் பணிவிடை? சரி, ஒன்று செய். இந்த அன்னக்காவடியைத் தூக்கிக்கொண்டு நான் பிச்சைக்குப் போகுமிடமெல்லாம் வந்தால், நான் ஓய்வாக உள்ளபோது பாடம் சொல்லுவேன்’ என்றார்.
உடனே மீனாட்சிசுந்தரம் மகிழ்ந்து அவருடைய பிச்சைப் பாத்திரக் காவடியைத் தோள்மீது தூக்கிக்கொண்டு, அவரோடு பிச்சைக்குச் செல்லத் தொடங்கினார்.
ஊரே இந்தக் காட்சியைப் பார்த்து அதிசயித்தது. அப்படி அவரிடம் இலக்கணம் கற்ற பெரும் புலவர் யார் தெரியுமா? ‘தமிழ்த்தாத்தா’ என்று அழைக்கப்படும் மகாமகா உபாத்தியாயர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் ஆசிரியர். ‘கலிகாலக் கம்பர்’ என்றும், ஒரேநாளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவரென்றும் போற்றப்பட்டவர். தனக்கு ஏற்பட்ட நிலை மற்ற வறுமையாளர்களுக்கு ஏற்படக்கூடாது என நினைத்து இலவசமாகப் பலருக்குப் பாடம் சொன்னவர். தங்க இடமும், உணவும் அளித்தவர் ‘திரிபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்’ தான் அந்தப் பெரும்புலவர்.
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
எனப் படித்திருப்போம். தன் ஆசிரியருக்காகப் பிச்சை பெற்றுப் படித்தவர் நம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்.
கல்வியால் உலகப்புகழ் பெற்றவர் ஆப்ரஹாம் லிங்கன். அவர் போட்ட ஒரு கையெழுத்தால் கறுப்பர் இனமக்களின் வாழ்வு மலர்ந்தது. பராக் ஒபாமா, ஜனாதிபதியானார்.
‘தற்காலக் கம்பர்’ என்று போற்றப்பட்டவர் உ.வே.சா அவர்களின் ஆசிரியராகிய திரிபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்.
ஒருவர் அமெரிக்க அரசர். ஒருவர் கவியரசர்.