கர்நாடக இசை என்பது தமிழிசைதான்… மு.அருணாசலம்..

தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர் மு.அருணாசலம் அவர்கள். இவர், நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.

மு.அருணாசலம் அவர்கள் நாகை மாவட்டத்திலுள்ள (முன்பு தஞ்சை மாவட்டம்) திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி பிறந்தார்.

அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றை 15 நூல்களில் பல அரிய தகவல்களோடு பதிவு செய்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் புலமைபெற்ற அருணாசலம் அவர்கள் இலக்கிய, இலக்கணத் தத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், ஓலைச்சுவடிகளைத் தேடிச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் கல்வெட்டுகளைப் படிப்பதிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். இவர் பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்றுக் கொண்டவர்.

மு.வரதராசனார், கா.சு.பிள்ளை, உ.வே.சாமிநாதன், வையாபுரிப்பிள்ளை, திரு.வி.கலியாணசுந்தரம், ரசிகமணி டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்ற தம் சமகாலத்திய தமிழறிஞர்களோடும், அரசியல் தலைவர்களோடும் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார்.

இவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் “அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்… அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த்தாள்களில் இடம்பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை” என்று எழுதியுள்ளார்.

மு.அருணாசலம் அவர்கள் பத்திரிக்கை ஆசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று ஆகிய பண்புகளைக் கொண்டவர். உ.வே.சா. அவர்களுடன் பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது என்ற நூல் முழுமையடைந்தது. அவர் சேகரித்த சுவடிகளில் திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது’ என்னும் குறிப்போடு கூடிய அழகிய சுவடி வெளியிடப்பட்டது.

மு.அருணாசலனார், இசைத்தமிழ் பற்றிய வரலாற்றினை, இரண்டு ஆய்வு நூல்களாக மிக விரிவாக எழுதியுள்ளார். தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு என்பவையே அவை. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இசை வளர்ந்த வரலாற்றைத், தக்க ஏற்புடைய சான்றாதாரங்களுடன் விளக்கும் இப்பெரு நூல்கள் தமிழின் இசை தொடர்பான அனைத்தையும் ஆவணப்படுத்துகின்ற களஞ்சியமாக விளங்குகின்றன.

கர்நாடக சங்கீதம்; என்ற ஒன்று இல்லை. அந்தப் பெயரால் சொல்வதெல்லாம் தமிழிசைதான். திருவையாற்றில் தியாகையர் தெலுங்கு மொழியில் பாடிய கீர்த்தனங்கள் எல்லாம்; தமிழிசை அடிப்படையில்தான்’ என்ற கருத்தை ஆதாரங்களுடன் இவர் நிறுவுகின்றார்.

கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டித் தமிழிசைச் சிற்பிகளான முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை ஆகியோரின் வரலாற்றை விளக்கி, மூவருமே கர்நாடக இசையின் ஆதி மும்மூர்த்திகள் என நிறுவி, உலகிற்குச் சுட்டிக் காட்டிய பெருமையும் மு.அருணாசலனாரையேச் சாரும்.

இவர், காந்தியடிகளின் ஆதாரக் கல்வி மற்றும் கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946இல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபா பாவே, ஜே.சி. குமரப்பா, ஜே.பி. கிருபளானி ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. அதன் விளைவாகத் தம் சொந்தஊரில், தம் சொந்த முயற்சியால் காந்தி வித்யாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார் மு.அருணாசலம் அவர்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் மு.அருணாசலம் அவர்களுக்கு 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘மதிப்புறுமுதுமுனைவர் பட்டம்’ அளித்துக் கௌரவித்தது.

தமிழிலக்கியம், தமிழிலக்கணம், தமிழிசை ஆகியவற்றுக்குத் தொண்டாற்றிய மு.அருணாசலம் அவர்கள் 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி மறைந்தார்.

இவரது மறைவு தமிழுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.