கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி…

‘இனம், மொழி, ஆகிய வேறுபாடுகளால் கிழிந்து கிடந்த இந்தியாவை ஒன்றாக்கித் தைக்க வந்த ஓர் ஊசி… வ.உ.சி…’
‘எந்தக் கப்பல் மூலம் கடல் வழியாக வாணிபம் செய்ய வந்து நம்மை ஆங்கிலேயன் அடிமைப்படுத்தினானோ அந்தக் கப்பல் மூலமே அவனை நாட்டை விட்டு ஓடவைக்க வேண்டும்’ என்று வணிகக் கப்பலை ஓட்டிக் காட்டிய பெருமையுடைய ஒரே தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.
வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. இதனால் இவர் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற அடையாளத்துடன் திகழ்ந்தார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திப் போராட்ட வீரர் எனும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றிக் கட்டுரைகளையும், செய்யுள்களையும், எழுதியுள்ளார். ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும், தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வ.உ.சி. 1892 ஆம் ஆண்டு பால கங்கார திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்துக்களால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
இவர், தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் ‘சுதேசி பிரச்சார சபை’, ‘தர்ம சங்க நெசவு சாலை’, ‘தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்’, ‘சுதேசிய பண்டக சாலை’, ‘வேளாண் சங்கம்’ போன்றவற்றை ஏற்படுத்தினார்.
ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்ய இந்தியாவிற்குள் நுழைந்து, பிறகு நாட்டினை ஆளத்துவங்கியது நாம் அறிந்ததே. அந்த வாணிபத்தினை நிறுத்த நினைத்த வ.உ.சி. ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாகக் கப்பல் போக்குவரத்தினைத் தொடங்கினார். ஆனால் அவர் முதலில் துவங்கியபோது வாடகைக் கப்பலை எடுத்து நடத்தியதால் அதனைத் தொடர்ந்து அவரால் நடத்த இயலவில்லை.
இதனால் சொந்தமாகக் கப்பல் வாங்க முடிவெடுத்த வ.உ.சி. தூத்துக்குடித் தொழிலதிபர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த மற்ற மாநில நண்பர்களிடம் இது குறித்துப் பேசினார். அந்நிலையில் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கிய பாலவ நத்தம் ஜமீன்தாராகிய பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இதற்காக அக்காலத்திலேயே ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அனைவரும் தங்களது வியாபாரச் சரக்குகளை வ.உ.சி தொடங்கிய சுதேசி நிறுவனக் கப்பலில் கொண்டுவர ஆரம்பித்தனர். இதனால் சுதேசி கப்பல் நிறுவனம் வளர ஆரம்பித்தது. இதனைப் பார்த்த ஆங்கிலேய அரசு இப்படியே போனால் தங்களது கப்பல் போக்குவரத்து பாதிக்கும் என்று நினைத்து சுதேசி நிறுவன கப்பல் தங்களது கப்பல் மீது மோத வந்தது என்று பொய் வழக்கினைத் தொடுத்தது.
ஆனால் அதிலும் தனது வாதத்திறமையால் வெற்றிபெற்றுத் தொடர்ந்து தனது கப்பல் நிறுவனத்தினை நடத்தி வந்தார் வ.உ.சி. இதனால் ஆங்கிலேய அரசு அவரின் வளர்ச்சியினை உற்று கவனித்து வந்தது.
நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கத் திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களுடன் சேர்ந்து வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் போராடினார்கள். இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி மார்ச் 12, 1908அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.
1908ஆம் ஆண்டு நடந்த திருநெல்வேலி எழுச்சியில் கைது செய்யப்பட்ட வ.உ.சி. அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக விடுதலை உணர்வினை மக்களுக்கு புகுத்த நினைத்தற்காக 20 ஆண்டுகளும் மேலும் சுப்பிரமணிய சிவாவிற்கு அடைக்கலம் குடுத்த காரணத்திற்காக 20வருடம் என மொத்தம் 40 வருடம் சிறை தண்டனையை வ.உ.சி.க்கு விதித்தனர்.
இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து வ.உ.சி. அவர்களுக்கு ஆதரவு பெருகியது. மேலும் இந்தத் தீர்ப்பினை எதிர்த்துப் பலரும் மேல்முறையீடு செய்யத் துவங்கினர்.
இந்நிலையில் கோவையில் சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சி. அவர்கள் மிகவும் கொடுமையாக நடத்தப்பட்டார். மேலும் அவர் சிறையில் கல் உடைத்தார், புல்வெட்டினார், மாடுகள் இழுக்கும் செக்கினை அவர் இழுத்தார். இதுபோலப் பல கொடுமைகளைச் சிறையில் அவர் அனுபவித்தார்.
இந்நிலையில் மேல்முறையீடு மற்றும் மக்கள் போராட்டம் போன்றவைகளால் அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு 1912ஆம் ஆண்டு கோவை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்தவுடன், தன்னை அழைக்க வந்தவர்களிடம் வ.உ.சி. அவர்கள் கேட்ட முதல் கேள்வி, ‘நம் கப்பலை என்ன செய்தீர்கள்?’, வந்தவர்கள் ‘நட்டத்தில் ஓடியதால் அதை ஆங்கிலேயருக்கே விற்றுவிட்டோம்’ என்று வருத்தத்தோடு சொன்னார்கள். அதைக்கேட்ட வ.உ.சி.அவர்கள், ‘ஐயோ என்ன கொடுமை! அதை நொறுக்கிக் கடலில் கரைத்திருக்கலாமே’ என்று மனம் வெதும்பிக் கூறினாராம்.
சிறைக்குச் சென்று வந்த பிறகு வறுமையில் இவர் வாடினாலும்கூடத், தமிழ் இலக்கியத்திற்கானத் தம் பணியைச் சிறப்பாக செய்து வந்தார்.
தொல்காப்பியத்திற்கும் திருக்குறளுக்கும் உரை எழுதினார். ஆங்கிலத்தில் வெளிவந்த தன்னம்பிக்கை நூல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். தனது வாழ்க்கை வரலாற்றைக் கவிதை வடிவில் எழுதிவைத்தார். ஜேம்ஸ் ஆலன் என்பவரது நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்த பெருமை இவருக்கு உண்டு.
வ.உ.சி. தொடர்ந்து மக்களுக்காகத் தனது போராட்டத்தினை நடத்தி வந்தார். பின்னர் வ.உ.சி.அவர்கள் 1936ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் மறைந்தார்.
வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த கப்பலோட்டியத் தமிழரைச், செக்கிழுத்தச் செம்மலை என்றைக்கும் நினைத்துப் போற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.
வாழ்க வ.உ.சி.யின் புகழ்!