கந்தசஷ்டியும்… சூர சம்ஹாரமும்…

தமிழ்க்கடவுளாகிய முருகன் சங்கஇலக்கியங்களில் பெரிதும் போற்றப்படுகின்ற பழைமையான கடவுள். சங்கஇலக்கியமாகிய பத்துப்பாட்டில் முதலாவதாக உள்ள நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை முருகப்பெருமானுடைய ஆறுபடை வீடுகளினுடைய பெருமையைக் கூறுகின்ற நெடும்பாட்டு. இதேபோல, எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலிலும் முருகப்பெருமானின் பெருமை எடுத்துரைக்கப்படுகின்றது.
இம்முருகப்பெருமான் வேலினை உடைய வீரனாக, பாலமுருகன், வீரமுருகன், ஞானமுருகன் என்று அனைவராலும் போற்றி வணங்கப்படுகின்றார். ஐப்பசி மாதத்தில் அமாவாசை அடுத்த வளர்பிறை நாளில் முருகனைவேண்டிப் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர். இது ‘சஷ்டி’ என்று அழைக்கப்படுகின்றது. குறிப்பாகக் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பார்கள்.
‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’- இது பழமொழி.
இந்தப் பழமொழியினுடைய பொருள் சமைக்கின்ற மண்சட்டிகளில் உணவோ, காய்கறிகளோ இருந்தால்தான் அது அகப்பையாகிய கரண்டியில் எடுத்தால் வரும். இது வெளிப்படையான பொருள்.
இதையே பக்திப்பூர்வமாகப் பார்ப்போமேயானால் திருமணமான பெண்கள் சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு எனக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் கூறுவார். பெண்கள் மட்டுமல்லாது குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் இந்த சஷ்டியில் விரதம் இருப்பது அவரவருடைய வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு என்ற நம்பிக்கையும் காலங்காலமாக நிலவி வருகிறது.
இந்த சஷ்டி விரதம் என்பது உணவைத் தவிர்த்தும், பாலையும், மிளகையும் மட்டும் எடுத்துக்கொண்டும் மனதை ஒருமுகப்படுத்தியும் முருகனை நினைத்து விரதம் இருப்பது முறை. இது ஒருவகையான வேண்டுதல். அப்படியென்றால் வேண்டுதலுக்காகப் பாதயாத்திரை செல்வார்கள், பால்குடம், காவடி எடுப்பார்கள். பசியோடு விரதம் இருக்கக் காரணம் என்ன? என்றால், இதற்குக் கந்தபுராணத்தில் விடை இருக்கிறது. இலங்கையை ஆண்ட சூரபத்மன் தன் தம்பிமாரோடு தவமிருந்து சிவபெருமானிடத்திலே ‘உன்னாலன்றி எங்களை யாராலும் அழிக்க முடியாத வரத்தைத் தா’ என்று வேண்டிப் பெற்றுக்கொண்டான். வரம் பெற்ற பிறகு தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அப்போது அவனை அழிக்கச் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணின் நெருப்பிலிருந்து ஆறுமுகப்பெருமானை உருவாக்கினார்.
முருகப்பெருமானும் தன் தாயாகிய பார்வதிதேவியிடம் சூரனை அழிப்பதற்காகச் சக்தியின் வடிவமான வேலாயுதத்தைப் பெற்றார். அத்தோடு சூரன் வலிமைமிகுந்தவன் ஆதலால் அவனை அழிப்பதற்காக அவரே ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருச்செந்தூரின் கடற்கரையில் ஆறுநாட்கள் விரதமிருந்து மனவலிமையால், உடல்வலிமையால், வேல்வலிமையால் அசுரகூட்டத்தையே வென்றார். சூரபத்மனை இருகூறு ஆக்கி சேவற்கொடியாகவும், தனக்கான மயில்வாகனமாகவும் மாற்றிக்கொண்டார். இதுவே சூரசம்ஹாரம் எனப்படும். இந்த நிகழ்வைத்தான் திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். முருகனின் புகழை அருணகிரிநாதரின் திருப்புகழ் சொற்களில் இப்படிப் போற்றலாம்,
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவவேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
தீமை அழிந்து நன்மை வெல்லுகின்ற திருநாள்தான் இத்திருநாள்.
முருகனின் திருவடிப் போற்றுவோம்!