கண்டு மகிழவும்… உண்டுமகிழவும்…

தைப்பொங்கலின் மூன்றாம்நாளைக் காணும்பொங்கலாக நாம் கொண்டாடுகின்றோம். நன்றித் திருநாளாக, திருவள்ளுவர் தினமாக முதல் இரண்டு நாட்களைக் கொண்டாடியபின் தை மூன்றாம் நாளைக் காணும்பொங்கல், சிறுவீட்டுப் பொங்கல், கன்னிப்பொங்கல் என்னும் பலபெயர்களோடு இதனை அழைத்து கொண்டாடுகின்றோம்.
இந்தநாளைப் பொறுத்தஅளவில் பொழுது சாயும் மாலைநேரத்தில் வீட்டில் உள்ள உறுப்பினர்களோடும், உறவினர்களோடும் நண்பர்களோடும் நீர்நிலைகளை நோக்கிச் சென்று அதன் கரைகளில் அமர்ந்து வீட்டிலிருந்து கொண்டுசென்ற பல்வகையான உணவுப்பொருள்களை (சித்ரான்னங்களை) ஊரோடும் கூடி உண்ணும் அழகான திருநாள்தான் காணும் பொங்கல் திருநாள்.
இதில் உணவுப் பதார்த்தங்களைக் கரையிலே வைத்துவிட்டு, ஆற்றுநீர், குளத்துநீர், கண்மாய் நீர், கடல்நீர் என எதுவாக இருந்தாலும் அதனை முதலில் வணங்குவது மகளிர் வழக்கம்.
பின்னர் வழிபாடு தொடங்கும். எவ்வாறு என்றால்? மார்கழி மாதம் முழுவதிலும் வீட்டுவாசலில் கோலமிடும்போது சாணஉருண்டை வைத்து அதன்மேல் பூசணி பூ வைத்திருப்போம். அதனை சாணத்தோடு தட்டி எருவாட்டியாகக் காயவைத்து அவற்றில் சில எருவாட்டிகளை எடுத்து வந்து அவற்றின் மீது கற்பூரம் ஏற்றி அதனை நீர்நிலைகளில் விட்டு, குலவையிட்டு வணங்கிவிட்டு பின்னர் கொண்டு வந்திருக்கின்ற பல்வேறு வகையான உணவுகளை மகிழ்வோடு உண்ணுகிற நாள் இந்நாளே.
இப்படிப்பட்ட நேரத்தில் ஒருபுறத்தில் இளைஞர்கள் கபடி விளையாடுதல், கம்பு சுற்றுதல், போன்ற வீரவிளையாட்டுகளை விளையாட, குழந்தைகள் மணல்வீடு கட்டி கோபுரம் கட்டி மகிழ்வார்கள். வீட்டுக்குள்ளேயே இருந்த ஆண்களும் பெண்களும் நண்பர்களையும் உறவினர்களையும் சென்று காண்பதாலேயே இது ‘காணும் பொங்கல்’ எனப் பெயர் பெற்றது எனக் கூறுவோரும் உண்டு.
தை மாதம் பிறந்துவிட்டதால் ஆண்கள் பெண்களுக்கான திருமணம் குறித்த பேச்சுகளையும் இப்படிப்பட்ட இடங்களிலேயே பேசித்தீர்மானிக்கும் வழக்கமும் உண்டு. எவ்வகையில் பார்த்தாலும் மனித வாழ்க்கையின் மகிழ்ச்சிக்காகவும் மங்கலகரமான நிகழ்வுகளுக்காகவும்தான் திருவிழாக்கள் இருக்கின்றன என்பதை நாம் இவ்விழாக்கள் மூலம் அறிந்து கொள்கிறோம்.
காணும் பொங்கலை கண்டு மகிழுங்கள், உறவுகளோடு உண்டு மகிழுங்கள்…