கணினியால் காலத்தை வென்றவர்…

‘நான் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் காலங்களில் தேர்வில்
கோல்டுமெடல் வாங்கியதில்லை; ஆனால் கோல்டுமெடல் வாங்கிய பலபேர்
எனது நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்’
-பில்கேட்ஸ்
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில்கேட்ஸ்) 1955ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் 28ஆம்தேதி அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டில் என்ற
ஊரில் பிறந்தவர். இவருக்குச் சிறுவயதிலேயே நிரலாக்கத்தில் (Program)
ஆர்வமிருந்ததால், தனது 13ஆம் வயதிலேயே நிரல்கள் (Program) எழுதத்
தொடங்கினார். பிறகு 1973இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார்.
தனது படிப்பை முடித்தபிறகு, தன் பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங்
என்பவருடன் சேர்ந்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை 1975இல் துவங்கினார்.
கணிப்பொறி பிற்காலத்தில் காலத்தையே மாற்றும் மிகப் பெரும் புரட்சியை
ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன்
தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மைச்
செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ்
நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். ஃபோர்ப்ஸ் இதழின்படி உலகின் முதல்
பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில்
தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார்.
இதுவரை பில்கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995ஆம்
வருடம் நவம்பர் மாதம் வெளியான ‘தி ரோடு அஹெட்’ என்ற புத்தகத்தை,
மைக்ரோசாப்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும்,
பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.
அதில் தனிநபர் கணினி பயன்பாட்டில் ஏற்பட்ட புரட்சியைப் பற்றியும்
உலகத்தில் அதிவேக தகவல் தொடர்பின் வரவு, எதிர்காலத்தை எவ்வாறு
மாற்றப்போகிறது என்பதைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகமே
அதே ஆண்டு நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான
நூல்களின் பட்டியலில், தொடர்ந்து ஏழுவாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும்
குறிப்பிடத்தக்கது.
பின்னர் 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட்’
என்ற நூலில், வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன
என்பது பற்றியும், தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் தகவல் வளையங்களும்
எப்படிப் போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும்
கூறப்பட்டுள்ளது.
2010இல் எடுக்கப்பட்ட ‘வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன்’, பிபிசி தயாரித்த
ஆவணப்படமான ‘தி வர்ச்சுவல் ரெவல்யூஷன்’ உட்பட பல ஆவணப்படங்களில்
பில்கேட்ஸ் தோன்றியுள்ளார்.
இன்றைய இளையசமுதாயத்தினருடைய மனக் கண்களில் பில்கேட்ஸ்
நிறுவனமும், தான் பில்கேட்ஸாக மாறவேண்டும் என்ற எண்ணமும்
ஏற்படுமானால் அதில் வியப்பேதுமில்லை.
அறிவே ஆயுதம்! ஆர்வமே வெற்றி! இதுவே பில்கேட்ஸின் தாரகமந்திரம்.