கடித இலக்கியங்கள்

கடிதம், தபால், அஞ்சல் இப்படிப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்ற கடிதப் போக்குவரத்துகள், மனிதர்களுக்கு இடையேயான தொடர்பு மூலங்கள் என்று சொல்லலாம்.
காதல் கடிதங்கள், அழைப்புக் கடிதங்கள், அரசியல் தொடர்பான கடிதங்கள், உறவுமுறைக் கடிதங்கள் என்று இதனை வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.
தொலைபேசி வந்தபிறகு, குறிப்பாகச், செல்போன்கள் வந்தபிறகு கடிதம் எழுதுகிற முறை அருகிப் போனது. எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் தொலைபேசியிலும், செல்போனிலும் பேசப் பழகிக் கொண்ட நாம், எழுதத் தயங்குவது இயற்கைதான்.
நண்பர் ஒருவர் தொடர்ந்து கடிதம் எழுதிக்கிட்டே இருப்பார். அதுல கடைசி வரியில்,
‘இந்தக் கடிதம் கிடைச்சாலும், கிடைக்கலைன்னாலும் மறக்காம பதில் போடு. அதிலயும் கிடைக்கலன்னா உடனே எழுது’ என்றும் குறிப்பிட்டிருப்பார்.
இலக்கியங்களில் கடிதங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவா? என்ற கேள்வி எழுகிறது. சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதிய இரு கடிதங்களை இளங்கோவடிகள் அருமையாகப் படைத்துக் காட்டுகிறார். இதேபோல பெருங்கதை என்ற காப்பியத்தில் ஓர் அருமையான கடிதம் பற்றிய செய்தி வரும். பெருங்கதையில் வருகின்ற உதயணன் என்னும் மன்னனின் மனைவியாகிய வாசவதத்தை அலங்காரத்தில் மிகுதியும் விருப்பமுடையவள். அவளுக்கு ஒப்பனை செய்கின்ற பணிப்பெண் அலங்காரங்களை முடித்தபிறகு, வாசவதத்தையின் நெற்றியில் அழகிய திலகமிடுவாள். இந்த அலங்காரத்தைத் தன் கணவனாகிய உதயணனிடம் சென்று காட்டுகிறாள். அவளது அலங்காரத்தைக் கண்டு மகிழ்ந்த மன்னன் அவளது நெற்றித்திலகத்தைப் பார்த்து வியப்படைகிறான். காரணம் அத்திலகம் பாலிமொழி எழுத்துக்களால் வரையப்பட்டிருந்தது. பாலிமொழியறிந்த மன்னன் அதன் பொருளை அறிந்துகொண்டு மகிழ்கிறான். பின்னர் மனைவியைத் தன்னருகே அமரச்செய்து, ‘அன்பே! இந்தத் திலகம் மிக அழகாக இருக்கிறது. இருந்தாலும் இதனினும் அழகாக நான் எழுதுகிறேன் பார்’ எனக்கூறி அத்திலகத்திற்குப் பதிலாக, அதே மொழியில் தன் விருப்பத்தைத் திலகமாக அவள் நெற்றியில் எழுதுகிறான்.
மன்னனும், ஒப்பனைப் பெண்ணும் மாறிமாறித் தன்னை அலங்கரிப்பதாக மகாராணி மனம் மகிழ, ஒரு காதல் கடிதம் பாலிமொழியில் ஒப்பனைப் பெண்ணுக்கும், மன்னனுக்குமிடையில் பரிமாறப்பட்ட செய்தி மகாராணிக்குத் தெரியவில்லை. உலகில் ஒரு காதல் கடிதத்தைத் தன் கணவனுக்காகத் தானே தன் நெற்றியில் சுமந்து சென்ற பெண் வாசவதத்தையாகத்தானே இருப்பாள். ஏனைய உலக இலக்கியங்களில் இது மாதிரியான அரிய கடிதச் செய்திகள் இருக்கின்றனவா என்பதை ஆராயலாம்.
மகாத்மா காந்தி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம், இன்றைக்கும் அவரது வரலாற்றின் ஒரு பகுதியாக எண்ணப்படுகிறது.
பண்டித ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்து தம் மகளாகிய இந்திரா பிரியதர்சினிக்கு எழுதிய கடிதங்கள், உலகவரலாற்றில் ஒரு பகுதியாகத் தொகுக்கப் பெற்றிருக்கின்றன.
தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் திராவிட நாடு, காஞ்சி போன்ற பத்திரிக்கைகளில் எழுதிய கடிதங்களும், முரசொலியில் கலைஞர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்களும், திராவிட இயக்க வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் எனலாம்.
திரு.வி.கலியாணசுந்தரனார் (திரு.வி.க.) ‘எனது இலங்கைச் செலவு’ என எழுதிய கடிதங்களும், மு.வரதராசனார் ‘தம்பிக்கு’ என எழுதிய கடிதங்களும் கடித இலக்கியங்களில் குறிப்பிடத் தகுந்தவை.
‘சீட்டுக்கவி’ என்கின்ற இலக்கிய வடிவம், புலவர்கள், வசதி படைத்த வள்ளல்களுக்குப் பொருள் கேட்டு எழுதும் கடித இலக்கியங்களாகும்.
மறைமலையடிகள் ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ என ஒரு புதினத்தையே கடித வடிவில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தில் புதுமைப்பித்தன் கடிதங்கள், கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா) கடிதங்கள், கி.ராஜநாராயணனுடைய கரிசல் காட்டுக் கடுதாசிகள், கல்யாண்ஜியினுடைய கடிதங்கள், ரசிகமணி டி.கே.சியின் கடிதங்கள் ஆகியன தொகுக்கப்பெற்று, புத்தக வடிவில் வந்துள்ளன.
இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கடிதவடிவில் ஒரு நாவலையே படைத்துள்ளார். ரஷ்ய எழுத்தாளர்களில் ‘முதலாசிரியன்’ என்ற புகழ்பெற்ற குறுநாவலை எழுதிய சிங்கிஸ் ஐத் மாத்தவ்-வும், ‘யாரோ ஒருத்தியின் கடிதம்’ என்ற குறுநாவலை எழுதிய ஸ்டெபான் ஸ்வெஇக்-கும் தங்களுடைய படைப்புகளைக் கடித வடிவிலேயே தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யப் புரட்சியின்போது லெனின் தோழர்களுக்குப் பத்திரிக்கைகளில் எழுதி வெளியிட்ட வேகம் மிகுந்த கடிதங்கள் ரஷ்யப்புரட்சிக்கு மேலும் விரைவைத் தந்தன.
இத்தனை வலிமை வாய்ந்த கடிதம் தற்காலத்தில் அதிகம் எழுதப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியதுதான். கடிதங்கள் எழுதப்பட வேண்டும்…. வாசிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அவை வரலாற்றுச் சின்னங்கள்.