ஒரு மரணவியாபாரியின் மரணம்… ஆல்பிரட் நோபல்

2019ஆம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின்பேரில் நான் என் குழுவினரோடு பட்டிமன்றம் பேசுவதற்காக அந்நாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த நாட்டுக்கு ‘நள்ளிரவுச் சூரியன் நாடு’ என்றொரு பெயரும் உண்டு. அந்த நாட்டில் நாங்கள் பார்த்த மற்றொரு அதிசயம் எது தெரியுமா? உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசு கொடுக்கும் அரங்கம்தான். அந்த அரங்கம்; அரண்மனை போன்று மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. அங்குதான் நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெறும் என்று சொன்னார்கள். நாங்கள் அங்கு சென்று அந்த அரங்கைப் பார்த்ததோடு அதன் வாசலிலிருந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.
அப்போதுதான் ஆல்பிரட் நோபலைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இவர் வெடிமருந்தின் (டைனமைட்) மூலமாக மலைகளைத் தகர்க்கவும், பூமியைப் பிளப்பதற்குமான ஒரு வேதியியல் பொருளைக் கண்டுபிடித்தவர். அதன்மூலம் பெரும் பொருளையும் சம்பாதித்தவர் என்று ஒரு நண்பர் சொன்னார். அப்போது ஆல்பிரட் நோபலைப் பற்றி நான் படித்த செய்திகளை நண்பர்களுக்குச் சொன்னேன்.
பெரும் பணத்தைச் சம்பாதித்த இவர் ஒருநாள் வீட்டில் அமர்ந்திருந்தபோது செய்தித்தாளில் இவர் இறந்துவிட்டதாகச் செய்தி வந்திருந்ததாம். உண்மையில் இறந்துபோனது இவருடைய பெயரையே கொண்ட இவர் சகோதரர்தானாம். அந்தச் செய்தியைப் பார்த்த இவர் வீட்டில் வேலைபார்த்துக்கொண்டிருந்த படிக்காத பெண்மணியிடத்தில், ‘ஆல்பிரட் நோபல் இறந்துபோனார்’ என்று பொதுவாகச் சொல்ல, அந்த அம்மையார் சற்றும் கவலைப்படாமல், ‘எத்தனையோ பேர் இறந்துபோவதற்குக் காரணமான வெடிமருந்தைக் கண்டுபிடித்த அந்த மரணவியாபாரி செத்து ஒழியட்டும்’ என்று சொன்னாளாம்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆல்பிரட் நோபல் தன் வாழ்க்கையில் இப்படிப்பட்ட பெயரைப் பெற்றா வாழவேண்டும்’ என்று வருந்தித், தன் சொத்துக்கள் முழுவதையும் அறக்கட்டளை ஒன்றுக்கு எழுதிவைத்து அதில் வருகின்ற வருமானத்தின் மூலம் உலக நன்மைக்குப் பாடுபடுகிறவர்களுக்குத் தன் பெயரில் விருது தரவேண்டும் என்று உயில் எழுதி வைத்தாராம்.
அப்படி நோபல் பரிசு பெற்றவர்கள்தான் மேரி கியூரி, தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் பிளம்மிங் ஆகியோரும் இந்தியாவில் இயற்பியலுக்காகச் சர்.சி.வி. இராமனும், இலக்கியத்திற்காக ரவீந்திரநாத் தாகூர் அவர்களும் அந்தப் பரிசைப் பெற்றனர் என்பது நாம் அறிந்த செய்திதான் என்று சொன்ன நான், இதில் மேலும் ஒரு ஆச்சரியம் இவரது உயிலின்படி இயற்பியல், வேதியியல், இலக்கியம், உயிரியல், மருத்துவம், என எல்லாத்துறைகளுக்கும் பரிசை அறிவித்த இவர் கணிதத்திற்கு மட்டும் அதை ஒதுக்கவில்லையாம்.
காரணம் இவர் இளம் வயதில் காதலித்த பெண்ணை இவருடைய கணித ஆசிரியர்தான் மணந்துகொண்டு விட்டாராம். இதனால்கூட இவர் கணிதத்திற்கு பரிசை ஒதுக்காமல் போயிருக்கலாம் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். எப்படி இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை மாற்றிக்கொள்ள வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாத இவர் தன் சொத்துக்களை எல்லாம் உலக நன்மைக்காக அறக்கட்டளையின் மூலம் தந்துவிட்டுச் சென்றது பாராட்டுக்குரிய ஒன்றுதான். மேலும் இவரைப் பற்றிச் சில செய்திகள்….
ஆல்பிரட் நோபல் அவர்கள் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு அறிவியலாளர், வேதியாளர், பொறியாளர். டைனமைட் உள்ளிட்ட பல வெடி பொருட்களை உருவாக்கியவர். ஆயுதத் தயாரிப்பாளராகவும் இருந்தவர். உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசை நிறுவி, அதனை வழங்கத் தனது சொத்துக்களை அளித்தவர்.
ஆல்பிரட் நோபலின் தந்தை இம்மானுவேல் புகழ்பெற்ற பொறியியலாளர். ஸ்டாக்ஹோம் நகரத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் வறுமையின் காரணமாக ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்கே போர் நடக்கும் சமயங்களில் உபயோகப்படுத்தும் வகையில் கன்பவுடரைப் பயன்படுத்தினார். ஆனாலும் போர் முடிந்தபின் வறுமைக்குத் தள்ளப்பட்டார். அவரின் மகனான, ஆல்பிரட் நோபலோ கவிதை, இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
1850ஆம் ஆண்டு வேலைக்காக ஆல்பிரட் நோபல் பாரிஸ் சென்றார். அங்கு நைட்ரோகிளிசரினைக் கண்டுபிடித்த அஸ்கானியோ சோப்ரிரோ (Ascanio Sobrero) என்ற விஞ்ஞானியைச் சந்தித்தார். அதன்பின் தன்னுடைய படிப்பிற்காக அமெரிக்கா சென்றபோது USS மானிட்டரை வடிவமைத்த கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் கீழ் வேலை செய்து அவரது வேதியியல் ஆய்வுகளை மேற்கொண்டார்.
1864ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதிதான் அந்த சோக நிகழ்வு நடந்தது. ஸ்டாக்ஹோமில் நகரில் இருந்த ஹெலன்போர்க் எஸ்டேட்டில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கொட்டகையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதால், ஆல்பிரட் நோபலின் இளைய சகோதரர் உட்பட ஐந்துபேர் மரணம் அடைந்தனர். இதனால் ஸ்டாக்ஹோமில் ஆய்வுகள் செய்ய அரசு தடை விதித்தது. அதன்பிறகு ஆல்பிரட் நோபல் அவர்கள், நைட்ரோகிளிசரினை விட, கையாள எளிதான, பாதுகாப்பான பொருளாகிய, டைனமைட்டை (Dynamite) 1867ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் காப்புரிமை பெறப்பட்டது.
ஆல்பிரட் நோபல் தன்னால் ஏற்பட்ட அழிவிற்குப் பிராயசித்தம் தேட யோசித்தார். அதன் விளைவாகத் தனது சொத்து முழுவதையும் பொதுச் சேவைக்காகச் செலவு செய்வது என முடிவெடுத்த ஆல்பிரட் நோபல், பல உயில்களை எழுதினார். 1895ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, அவர் கையெழுத்திட்ட உயிலில், தனது ஒட்டுமொத்தச் சொத்தின் 94சதவீதத்தை மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக உண்டானதே இன்று உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படும் நோபல் பரிசு.
ஆல்பிரட் நோபல் அவர்களின் விருப்பப்படி, 1901ஆம் ஆண்டு முதல் 5 பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1969ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. நோபல் பரிசு மனிதகுலத்திற்குப் பயன்படும்படி சிறந்த ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும், தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கும், சமூகத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றுபவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மனித உயிர்களைக் கொல்வதற்காகப் பயன்படும் வெடிபொருள்களைக் கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல், இறப்புக்குப் பிறகு அவர் நினைத்தபடி சமாதானத் தூதராகவே அறியப்படுகிறார்.
வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காகத் தன் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 50ஆண்டுகள் உழைத்த ஆல்பிரட் நோபலின் நினைவாக, ‘நோபலியம்’ என்ற தனிமத்துக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
பணம் எப்போதும் நல்ல செயல்களுக்குப் பயன்படும்போதுதான் பெருமை அடையும் நிலைத்து நிற்கும். சான்று நோபல் பரிசு.