ஒரு நிமிஷம் பொறு…

ஒருமுறை ‘திருஆவினன் குடி’ என்ற பழைய பெயர் கொண்ட பழனித் திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு (கும்பாபிேஷக) விழாவிற்கு, நேர்முக வர்ணனைக்காகப் போயிருந்தேன்.

               அப்போது, அறுபடை வீடுகளில் ஒன்றாகிய அந்தப் பழனிமலை பற்றி கல்வெட்டுக்களில், இலக்கியங்களில், புராணங்களில், நாட்டுப்புறக் கதைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் படித்துப் பார்த்து வியந்து போனேன்.

               ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு. கோயில் அத்தனை முக்கியமானதா? என்றொரு கேள்வி எழுகிறது. தமிழர்களின்  அடையாளம் என்று பட்டியலிடும்போது, கோயில், நாதஸ்வரம், பரதம், தமிழிசை எனத் தங்களுக்கெனத் தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டவர்கள் தமிழர்கள்.

               ஓர் அரசன், ஒரு கோயிலைக் கட்டும்போது, ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது. இரண்டாவது, இப்போது போன்று பொது மருத்துவமனைகள் அக்காலத்தில் இல்லாததால், கோவிலைச் சுற்றி நந்தவனங்கள் அமைக்கப்பெற்று, அதில் கிடைத்த மூலிகைகள், மலர்களை வைத்து மருந்து உருவாக்கி, நோயுற்ற மக்களுக்கு உதவியதால், கோவில் ஆதூர சாலை’ (மருத்துவமனை) ஆயிற்று.

               மூன்றாவதாக, சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம், நாடகம் எனப் பல்வகைக் கலைகளும் உருவாகும் இடங்களாக, கோவில்கள் விளங்கத் தொடங்கின.

               நான்காவதாக, நல்ல உடை உடுத்தல், ஒழுக்கத்துடன் இருத்தல், வேண்டியவற்றைக் கேட்டல், கேட்டவை கிடைத்தல், வேண்டுதல் நிறைவேற்றுதல் போன்ற மனிதகுல சமுதாய ஒழுக்க நெறிக்கும் கோவில்கள் இடங்களாய் அமைந்திருந்தன.

               குடமுழுக்கு’ என்பது. கோபுரத்தின் உச்சியில் இருக்கின்ற கலசத்தில் தண்ணீர் விடுவது மட்டுமன்று, கோவிலைச் சுத்தப்படுத்துதல், வண்ணம் பூசுதல், சிதைந்து போன சிற்பங்களைச் சீர் செய்தல் எனப் பற்பல வேலைகளை உள்ளடக்கியதுதான்.

               பேரறிஞர் அண்ணா ஒருமுறை கூறினார், ‘இருக்கிற கோவில்களை நாம் பாதுகாத்தலே பெருமை, புதிய கோவில்கள் தேவையில்லை’ என்றார்.

               பழனிமலையைப் பற்றிப் பார்ப்போம். பழனிமலை ‘ஆவினன் குடி’ என்ற பெயரோடு பழங்காலத்தில் வைகாவூர்’ நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவராகிய மயிலுக்குப் போர்வை கொடுத்த ‘பேகன்;’ என்ற குறுநில மன்னன் ஆண்ட பகுதி இது.

               சேரமன்னர்கள், பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசைச் சார்ந்த கிருஷ்ண தேவராயர் போன்றோர் இக்கோவிலுக்குத் திருப்பணியும், நிலமானியமும் வழங்கியுள்ளதாக வரலாற்றுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

               இந்தக் குடமுழுக்கு விழாவில் சில விஞ்ஞான விந்தைகளையும் நான் நேரில் பார்க்க முடிந்தது. கோவில் கலசத்தில் விழுந்த புனிதநீரை, அனைவர்மீதும் சிவாச்சாரியார்கள் தெளிப்பார்கள். தங்கள்மீது அந்தத் தண்ணீர் படவில்லையே என்று ஆயிரக்கணக்கான மக்கள் வருந்துவார்கள்.

               தற்காலத்தில் அந்தப் புனிதநீரை, பெரிய தொட்டிகளில் நிரப்பி, நீரேற்றுப் பம்புகள் மூலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள்மீது பீச்சி அடித்தபோது, அத்தனைபேரும், மனமுருகி மகிழ்ந்தார்கள்.

               அடுத்ததாக, குடமுழுக்கு முடிந்தவுடன், ஆகாயத்தில் பறந்துவந்த விண்ணூர்தி (ஹெலிகாப்டர்) பூக்களை அங்கிருந்து வாரி இறைக்க, தேவர்கள் பூமாரி பொழிந்ததுபோல, ஒரு விந்தைக் காட்சியைக் காண முடிந்தது. அறிவியலும், ஆன்மிகமும் கைகோர்த்த இடமாக, அந்தக் காட்சியைக் கண்டவர்கள் மகிழ்ந்தனர்.

               கடவுளோடு பேசிக்கொண்டிருந்த ஒரு மனிதன், அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டானாம். ‘சாமி, உங்களுக்கு ஒரு கோடி வருஷம்கிறது எவ்வளவு நேரம்? என்று…’

               அதற்குக் கடவுள் சிரித்துக்கொண்டே, ‘ஒரு கோடி வருசம்ங்கிறது எனக்கு  ஒரு நிமிஷம்’ என்றாராம். இதைக்கேட்டு சந்தோஷம் அடைந்த மனிதன், ‘அப்ப ஒரு கோடி ரூபாய்ங்கிறது சாமி’

               ‘ஒரு ரூபாய் போல’ என்றாராம் கடவுள். கடவுளை மடக்க நினைத்த மனிதன், ‘சாமி எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன்’ என்றானாம் பவ்யமாக,

               உடனே கடவுள் ‘ஒரு நிமிஷம் பொறு’ என்றாராம்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.