ஏ! குருவி! சிட்டுக்குருவி!

“விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே…”
என மகாகவிபாரதியும்,
“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
என்னை விட்டுப்பிரிஞ்சு போன கணவன் வீடுதிரும்பல…”
என்று ‘டவுன்பஸ்’ படத்தில் கவிஞர் க.மு.ெஷரிப்பும்,
“ஏ! குருவி! சிட்டுக்குருவி…. என்று ‘முதல் மரியாதை’ படத்தில் கவிஞர் வைரமுத்துவும், சிட்டுக்குருவியை பரவசத்தோடு பாடி மகிழ்ந்திருப்பார்கள்.
பாரதியார் ‘சிட்டுக்குருவி’ என்ற பெயரிலேயே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அதன் மூக்கு சிறு தானியத்தைப்போலவும், அதன் நெற்றி தலைவலியே காணாத அழகான நெற்றிபோலவும் இருக்கிறது எனக் குறிப்பிட்டிருப்பார்.
‘சிட்டு’ என்ற சொல்லுக்கே சிறிய என்பதுதான் பொருள். குருவிகளில் மிகச்சிறிய இனத்தைச் சேர்ந்தது இப்பறவையினம். இவற்றின் உடம்பில் ஒரு அதிசயம் என்னவென்றால், இதற்கு இருக்கின்ற இரண்டு சிறிய கால்களை முன்னும் பின்னுமாக வைத்து நடக்கமுடியாது. இரண்டு கால்களையும் தூக்கி தத்தித் தத்திதான் செல்லும் இந்தக் குருவி.
ஒரு சிட்டுக்குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சலீம் அலி என்ற சிறுவன்தான், பின்னர் தனது வாழ்க்கையையே பறவைக்காக அர்ப்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார். ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ என்ற அரிய நூலை எழுதிய பறவை மனிதராகிய சலீம் அலி இந்தக் குருவிகளோடையே தம்முடைய வாழ்நாளைக் கழித்திருக்கிறார்.
இச்சிறிய பறவையினம் அழிந்து வருவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வயல்களில் அடிக்கப்படும் இரசாயன மருந்துகள்தான். ஏனென்றால் அந்த மருந்துகளால் இறக்கும் புழுப்பூச்சிகளை உண்ணுகின்ற இக்குருவியினமும் விரைவில் இறந்துவிடும்.
நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில், இரசாயன மருந்துகளும், யூரியா போன்ற இரசாயன உரங்களும், கிராமங்களுக்குள் வரத்தொடங்கின. ஒருநாள் மாலை, எங்கள் ஊராகிய சோழவந்தானில் எங்கள் வயலில் ‘பச்சாலை’ என்றொரு நோய் பயிரில் பரவியிருப்பதாகக் கண்டறிந்தோம். பச்சாலை என்பது ஒருவகையான பூச்சி. இப்பூச்சி நெற்பயிர்கள் விளைந்து பால்பிடித்து, அரிசியாக நெல் திரளும் நேரத்தில் அதனைக் குடித்துவிடும். அதனால் விளையவேண்டிய கதிர்கள் எல்லாம் பொக்குகளாகச், சாவிகளாக (பதர்களாக) மாறிவிடும்.
இதனால் பயந்துபோன நானும் என் தந்தையாரும் அந்தப் பூச்சிகளைக் கொல்வதற்கு ஆட்களைவைத்துக் கைபம்புகள் மூலமாக மருந்து அடிக்கத் தொடங்கினோம். அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. என்னவென்றால், அந்த நிலத்தின் நெற்பயிரிலிருந்த இலட்சக்கணக்கான பூச்சிகள் மேலே கிளம்ப, அடுத்த நிமிடம் எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான குருவிகள் பறந்துகொண்டே, அந்தப் பூச்சிகளைப் பிடித்து உண்ணத்தொடங்கின. என்னால் அந்தக் காட்சியை இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.
பிற்காலத்தில்தான் நான் இந்த இரசாயன மருந்துகளின் கொடுமைகளை உணர்ந்துகொண்டேன். இந்த நிகழ்வு நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.
இயற்கையையும், நம்மையும் சார்ந்து வாழும் இச்சிற்றுயிர்களை விழிப்புணர்வோடு காப்பது நம் கடமை. சிட்டுக்குருவிகளைப் பற்றி மேலும் சில செய்திகளைக் காண்போம்….
இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதனின் சுயநலத்துக்காக மிருகங்களையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம்.
இன்று நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும்கூட பறவைகளைப் பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. சின்னச் சின்னச் சிட்டுக்குருவிகளும் உலகளவில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனங்களில் சேர்ந்துவிட்டது.
சிட்டுக்குருவி முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக்குருவிகள் ‘பசரீன்கள்’ குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக் குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இதனைச் சங்க இலக்கியங்களில் மனையுறைக் குருவி, உள்ளுறைக் குருவி மற்றும் உள்௵ர்க் குருவி என்றும் குறிப்பிடுகின்றனர். இவை கிராமங்களிலும், நகரங்களிலும் மக்களோடு சேர்ந்து வாழ்பவை. காடுகளில் தன்னிச்சையாக வாழ்பவை அல்ல. காகத்திற்கு அடுத்துபடியாக மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.
மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.
மனிதனின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், நவீன தகவல் தொழில்புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும்; சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால் சிட்டுக்குருவிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் எரிவாயுக்களில் இருந்து வெளிவரும் Methyl Nitrate எனும் வேதிப்பொருள் வெளிப்பட்டு பூச்சியினங்கள் அழிக்கப்பட்டு குருவிகளுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காமல் போகின்றன.
தொலைபேசி டவர்கள் குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. அலைபேசி டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைத்துவிடுகிறது. முட்டையிட்டாலும் கரு வளர்ச்சி அடைவதில்லை.
முன்பெல்லாம் கிராமங்களிலும், வீடுகளிலும் தென்னங்கீற்றால் பந்தல் அமைத்திருந்தனர். அதில் சிட்டுக்குருவிகள் வீடுகட்டி வாழ்ந்து வந்தன. ஆனால் இன்று வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாலும், கான்கிரீட் கட்டிடங்களாகவும் மாறிவிட்டதால் குருவிகள் கூடுகட்ட முடியாமல் போனது.
பண்டைய காலங்களில் வீட்டிற்குத் தேவையான உணவு தானியங்களை வீட்டு முற்றத்திலும், மொட்டை மாடிகளிலும் காயப்போடுவார்கள். அப்பொழுது அங்குவரும் சிட்டுக்குருவிகள் தானியங்களை உணவாக உண்ண வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகளும் இப்போது குறைந்து விட்டது. தற்போது மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து உணவு தானியங்களையும் நேரடியாக நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் வாங்கி, சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திவருகின்றனர்.
சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐ.நா.சபை, 2010ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது. டில்லி அரசு கடந்த 2012ஆம் ஆண்டுமுதல் சிட்டுக்குருவியைத் தங்கள் மாநிலப் பறவையாக அங்கீகரித்தது.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது.
முதலில் சிட்டுக்குருவிகளை அழிவு நிலையிலிருந்து காப்பாற்ற, வீடுகளில் சிறிய கிண்ணங்களில் தானியங்களை நிரப்பி பறவைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். கிண்ணங்களில் நீரை நிரப்பி சிட்டுக்குருவிகள் நீர் அருந்தவும் அமைக்க வேண்டும்.
சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஓர் உயிரினமும் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல்படி என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது.
பட்டுப்போன்றவை சிட்டுக்குருவிகள், அவை பட்டுப்போய்விடாமல் பாதுகாப்பது நம் கடமை!