ஏட்டில் இருந்ததை நாட்டுக்குத் தந்தவர்… உ.வே.சா…

என்னுடைய வாழ்க்கையில் பல ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும்போது, ‘உங்களுக்குப் பிடித்தப் புத்தகம் எது? யாருடைய எழுத்தை மீண்டும் மீண்டும் படிப்பீர்கள்?’ என்று கேட்கப்படும் கேள்விக்கு நான் சொல்கின்ற பதில் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களுடைய என் சரித்திரம்’ என்ற புத்தகம்தான் என்று குறிப்பிடுவேன்.

எனக்கு ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் என்னுடைய பிறந்த தினம் 1955 அக்டோபர் 19. சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் உ.வே.சா. அதிலும் குறிப்பாக 1855 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அவர் உத்தமதானபுரம் என்ற ஊரில் வேங்கடராமன் என்பவரின் மகனாகப் பிறக்கிறார். இந்த மகிழ்ச்சியை நான் நெகிழ்ச்சியோடு பல நிகழ்ச்சிகளில் சொல்லுவேன்.

அவருடைய வரலாற்றைப் படிக்கத் தொடங்கும் அனைவருக்கும் நான் சொல்லுவது இதுதான். எழுத்துநடை எவ்வளவு எளிமையாக இனிமையாக இருக்கவேண்டும் என்பதற்கு உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரமே ஒரு சான்று.

உ.வே.சா தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களைப் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு (இரண்டு பாகம்), கும்பகோணம் தியாகராசச் செட்டியார் வரலாறு என்பதோடு நினைவு மஞ்சரி, கண்டதும் கேட்டதும் போன்ற கட்டுரைத் தொகுதிகளும் படிப்பவரை வியப்பில் ஆழ்த்தும்.

ஏட்டுச் சுவடிகளிலுள்ள தமிழை இவர் பதிப்பிக்கத் தொடங்கியதால்தான் இன்றைய தமிழுலகம் தலைத்தோங்கி இருக்கிறது. நம் தமிழ்மொழியும் செம்மொழி உயர்வினைப் பெற்றிருக்கிறது.

‘என் சரித்திரத்தில்’ தாம் பிறந்த வரலாற்றைப் பற்றிச் சொல்லுகிறபோது தம்; தாயார் வயிற்றில் இவர் இருக்கும்போது அந்த ஊரில் ஒரு சந்நியாசி ‘அதிசயம் நிகழப்போகிறது… அதிசயம் நிகழப்போகிறது…’ என்று கத்திக்கொண்டே ஓடிக்கொண்டிருப்பாராம். ‘அப்படிப்பட்ட நேரத்தில் நான் பிறந்ததால் நான்தான் அந்த அதிசயம் என்று என் தாயார் என்னைப் பாராட்டி மகிழ்வார்’ என்று சொல்லிவிட்டு, ஆனால் அந்த ஆண்டுதான் இந்தியாவுக்குள் ரயில் வந்தது என்ற வரலாற்றுச் செய்தியையும் உ.வே.சா. அவர்கள் பதிவு செய்திருப்பார்.

எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அவர் வாழ்க்கைப் பதிவு என் சரித்திரமாகத் தொடங்கி எழுதப்பட்டு வந்தது. ஆனால் அவர் மறைவிற்குப்பின் அந்த சரித்திரம் முழுமைபெறவில்லை என்ற ஏக்கம் என்னைப் போன்றவர்களுக்கு உண்டு. இத்தகைய பெருமைமிகுந்த தமிழ்த்தாயின் தவப்புதல்வராகிய உ.வே.சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றிய விரிவான செய்திகளை மேலும் காண்போம்….

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சாமிநாத ஐயர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர் உ.வே.சா. 90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுப் பதிப்பித்தது மட்டுமின்றி, 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார்.

உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்திலே கற்றார். பின்னர் தம் 17ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்து ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

சிறுவயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.

சமண இலக்கியங்களோடு சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் அடங்கிய ஏராளமான ஓலைச்சுவடிகளையும் தேடித்தேடி, அவற்றைப் பகுத்து, வேறுபடுத்தித், தொகுத்துப் பிழைதிருத்தி அச்சிலேற்றினார். இதன்மூலம் இவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார் உ.வே.சா.

பின்னாளில் அவற்றுக்கு உரையும் எழுதினார். சங்க காலத் தமிழும் பிற்காலத்தமிழும், பழையதும் புதியதும், நல்லுரைக்கோவை உள்ளிட்ட பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

உ.வே.சா. அவர்கள் உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும், புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர் இவர்.

உ.வே.சாமிநாத ஐயர் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி, 1932ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி அன்று சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தட்சிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

வீடுதோறும் ஏடுகளைத் தேடினார் அதனால் உலகநாடுகளில் வாழும் தமிழர்கள் இவரின் நூல்களைத் தேடி நாடிப் படிக்கின்றனர்.

பனையோனையில் இருந்த தமிழைப் பதிப்பித்தார் உ.வே.சா.இன்றைக்கு அவர் தந்த தமிழ்ச்சொத்து மின்ஊடகங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்தத் தலைமுறையில் அயல்கிரகங்களுக்கும் தமிழ்மொழி செல்லலாம். அப்போதும் உ.வே.சாவின் புகழ் பேசப்படும் என்பது உண்மை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.