எழுத்துலகின் நகைச்சுவை வேந்தர் – தேவன்…!

நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, துப்பறியும் கதைகளையும் நகைச்சுவைக் கதைகளையும் விரும்பிப் படிப்பேன். அப்படி நகைச்சுவைக் கதைகளில் நான் அதிகம் விரும்பிப் படித்தது யாருடைய எழுத்து என்றால், மகாதேவன் என்ற இயற்பெயர் கொண்டு ஆனந்த விகடனில் எழுதிவந்த திரு.தேவன் அவர்களுடைய கதைகள்தான் என்னைப் பெரிதும் ஈர்த்தன.
அப்போதெல்லாம் புத்தகம் வாங்குவதற்குப் பணவசதி இருக்காது. தொடர்கதைகளை நண்பர் வீடுகளிலும், தொகுப்புப் புத்தகங்களை நூலகங்களிலும் சென்று படிப்பது எனக்கு வழக்கம். ஒருநாள் தேவன் அவர்களுடைய ‘மைதிலி’ என்ற கதையை நான் நூலகத்தில் மனதிற்குள் படித்துக்கொண்டிருந்தபோது அதில் வந்த நகைச்சுவைக் காட்சிகளைப் படித்துவிட்டு சத்தம்போட்டு சிரித்துவிட்டேன். அங்கே படித்துக்கொண்டிருந்தவர்கள் என்னைக் கோபத்தோடு பார்க்க, நூலகர் வந்து ‘இப்படியெல்லாம் நூலகத்தில் சிரிக்கக்கூடாது’ என்று மிரட்டிவிட்டுப் போனார். அப்படி என்னை சிரிக்கவைத்த அந்தப் புத்தகம்போலவே ‘கோமதியின் காதலன்’, ‘துப்பறியும் சாம்பு’, ‘சிஐடி சந்துரு’, ‘மிஸ்டர் வேதாந்தம்’ என்ற கதைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
பத்தாண்டுகளுக்கு முன் ஒருமுறை நான் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் வீட்டின் பின்புறத்தில் கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அங்கே மடிசார் சேலை கட்டிய மாமி ஒருவர் இடுப்பில் கைவைத்தபடி அந்தக் கட்டிட வேலைகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.
ரா.கி.ரங்கராஜனுடைய எழுத்துக்கள் என்றால் எனக்கு உயிர். நான் அவரது கதைகளைப் பற்றி சரளமாகப் பேசத்தொடங்கினேன். அவர் ஆச்சர்யமாக அதைக் கேட்டுக்கொண்டிருந்தார் (இதே அனுபவம் எனக்கு மற்றொரு ரங்கராஜன் (சுஜாதா) வீட்டிலும் நிகழ்ந்தது) அதற்குள் அந்த மாமி வீட்டிற்குள் வந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டுக்கொண்டிருப்பார் போலும். நான் அவர்களை வணங்கி பேச வாய் எடுக்கும் முன், ‘என்ன, வீட்டுவேலையை நான் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தது ‘ராஜத்தின் மனோரதம்’ கதையில் வரும் காட்சி நினைவுக்கு வருகிறதா’ என்று கேட்டார்கள். நான் வியந்து போனேன். அதைத்தான் சொல்வதற்கு நான் தொடங்கினேன். அதற்குள் அவர்களே சொல்லிவிட்டு சிரித்தார்கள். அந்த ‘ராஜத்தின் மனோரதம்’ என்ற கதை தேவன் அவர்களால் ஆனந்த விகடனில் எழுதப்பட்டு கோபுலு அவர்களின் ஓவியங்களோடு வெளிவந்தவை.
ஒரு வீடு கட்டுவதற்கு என்ன பாடு படவேண்டும் என்பதை மிகுந்த நகைச்சுவையோடு சொல்லியிருப்பார் தேவன். இதே செய்தியை மிகச் சோகமாகப் படமாக்கியிருப்பார் இயக்குநர் பாலுமகேந்திரா. அந்தப் படத்தின் பெயர் ‘வீடு’.
இதேபோல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள், மறைந்த திரு.கிரேஸி மோகன், கலைஞானி கமல்ஹாசன் இவர்களோடு உரையாடும்போதும் கட்டாயம் எங்கள் பேச்சில் தேவனுடைய கதைகள் வந்து போகும்.
‘ஜஸ்டிஸ் ஜெகந்நாதன்’ என்று இரண்டு பாகங்களாக அவர் எழுதிய அந்த நாவல் முழுவதும் நீதிமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டது. முடிவில் அந்த மர்மக் கதையின் முடிச்சு அவிழும்போது நாம் வியந்துபோவோம். இப்படித் தேவன் அவர்களுடைய எந்தக் கதையைப் பற்றிப் பேசச் சொன்னாலும் என்னால் பேச முடியும். அவரது ‘கோமதியின் காதலன்’ எனும் நாவல் அந்தக் கால நகைச்சுவை நடிகரும் தயாரிப்பாளருமான திரு.டி.ஆர்.இராமச்சந்திரன் அவர்களால் படமாகவும் எடுக்கப்பட்டது.
ஆனந்த விகடனில் கல்கி அவர்களுக்குப் பிறகு தனிப்பெரும் பேனா மன்னராகத் திகழ்ந்தவர் நம்முடைய தேவன் அவர்கள். ஆனந்த விகடனின் நல்ல வளர்ச்சிக்கு அவரது எழுத்தும், ஆளுமையும் பெருந்துணை புரிந்தன. இத்தனை புகழுடைய திரு.தேவன் அவர்கள் மகாகவி பாரதியைப் போல குறுகிய காலத்திலேயே (44வயது) மறைந்து போனது எழுத்துலகம் சந்தித்த ஒரு இழப்பாகும். திரு.தேவன் அவர்கள் குறித்து மேலும் சில செய்திகளைக் காண்போம்….
பிரபல நகைச்சுவை எழுத்தாளரும், ஜனரஞ்சக எழுத்தின் முன்னோடிகளில் ஒருவருமான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் அவர்கள் கும்பகோணம் அடுத்த திருவிடை மருதூரில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி பிறந்தார். அங்குள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.
சாரணர் படைத்தலைவர் கோபால்சாமி ஐயங்கார் நிறைய கதை சொல்வார். கதை கூறச்சசொல்லி மாணவர்களை ஊக்குவிப்பார். அதனால், இவருக்கும் கதையில் ஆர்வம் உண்டானது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆனந்த விகடன் இதழில் 21 வயதில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை அதன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். விகடனில் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், 20க்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதியுள்ளார் தேவன்.
மேலும் இவர் உருவாக்கிய ‘துப்பறியும் சாம்பு’ பாத்திரம் ெஷர்லக் ஹோம்ஸ், ஜேம்ஸ் பாண்ட் போலச் சாகாவரம் பெற்றது. சாம்புவின் சாகசத்தையும், அதற்கு ராஜு வரைந்த ஓவியத்தையும் காண வாராவாரம் வாசகர் கூட்டம் காத்திருந்தது. ‘துப்பறியும் சாம்பு’ சின்னத்திரையில் தொடராகவும் வந்திருக்கிறது.
பத்திரிக்கை, எழுத்துத் துறையில் தேவன் அவர்கள் கையாளாத உத்திகளே இல்லை என்னும் அளவிற்கு பல புதிய உத்திகளைக் கையாண்டு விகடனின் விற்பனையை உயர்த்தினார். அக்கால வாசகர்களின் வாசிப்புத் தரத்தை உயர்த்தியதில் தேவனுக்கு மிக முக்கியப் பங்குண்டு.
ஜஸ்டிஸ் ஜெகந்நாதன், கோமதியின் காதலன், கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், சி.ஐ.டி.சந்துரு, மிஸ் ஜானகி, மைதிலி, மாலதி, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் ராஜாமணி, ராஜியின் பிள்ளை, ராஜத்தின் மனோரதம் போன்ற இவரது படைப்புகள் மறக்க இயலாதவை. ‘சீனுப்பயல்’ என்ற சிறுகதைத் தொகுப்பு, சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைப்பது.
மேலும் இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜெகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள் மேடைநாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப்பட்டன. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய மிக விரிவான புதினம் ‘ஜஸ்டிஸ் ஜகந்தாதன்’. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சென்னை தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்திருக்கிறார் தேவன். பள்ளி ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், பத்திரிக்கை நிர்வாக ஆசிரியர், நகைச்சுவை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.
‘தேவனின் கதைகளை ஒன்றுவிடாமல் படித்தவன் நான். அவர் ஒரு தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர். என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவர் முன்னோடியாகவும், மானசீக ஆசானாகவும் இருந்திருக்கிறார். தேவன் என்றைக்கும் இருப்பார். அவர் நிஜமாகவே தேவன்தான்’ என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.
‘குழந்தைகளின் அற்ப சந்தோஷங்கள், துக்கங்கள் மட்டுமல்லாது, வயதானவர்களின் மகா அற்ப சுக துக்கங்களைக்கூட அவ்வளவு அற்புதமாக எழுதக்கூடியவர் தேவன்’ என்று பாராட்டியுள்ளார் கல்கி.
ஆங்கிலக்கதைகள் மட்டுமே படித்தவர்களைக்கூட தன் இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து மூலம் தமிழுக்கு இழுத்தவர் என்று போற்றப்பட்டவர். ‘வாசகர்களால் அடுத்த தலைமுறை எழுத்தாளராகப் பார்க்கப்பட்டவர். தமிழ் எழுத்துலகில் சார்லஸ் டிக்கன்ஸ்’ என்று அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தான் மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் குறித்து கட்டுரைகள் எழுதினார். அவை, ‘ஐந்து நாடுகளில் அறுபது நாள்’ என்ற புத்தகமாக வெளிவந்தது.
நகைச்சுவை கட்டுரைகள், கதைகள், அபாரமான குடும்ப நாவல்கள் என அனைத்து வகைகளையும் அநாயசமாகக் கையாண்டவர். பத்திரிக்கை துறையில் தனித்துவம் வாய்ந்த படைப்பாளி தேவன் அவர்கள்.
எழுத்தில் நகைச்சுவை, அதை நாடகமாகப் படமாக்கினால் நடிப்பில் நகைச்சுவை, அவரது நூல்களைப் பற்றிப் பேசினால் பேச்சில் நகைச்சுவை என எல்லாவற்றிலுமாக நகைச்சுவை உணர்வை அள்ளித் தெளித்த மகாதேவன் உண்மையில் எழுத்துலகின் தேவாதி தேவன்தான்…!