என் சீடர் அல்லர் குரு…

விநாயக் நரஹரி பாவே எனும் முழுப்பெயர் கொண்ட வினோபா பாவே ஒரு இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர். இவர் மண்கொடை (பூமி தானம்) இயக்கத்துக்காக மிகவும் அறியப்படுகிறார். மேலும் மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்கு கொண்டவர்.
காந்தியடிகளின் விருப்பத்துக்குரிய சீடராகிய இவர், காந்தியடிகள் வாழ்ந்த காலத்திலும், அவர் மறைந்தபின்னரும் அவரது கொள்கைகளை உலகெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்த உத்தமசீடர். ‘தனது தர்மயுத்தத்தின் சேனாதிபதி வினோபா பாவே’ என்று காந்தியடிகள் பெருமிதமாகக் கூறுவாராம்.
ஒருமுறை வினோபா பாவே அவர்களுக்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்த வினோபாஜி அதை உடனடியாகக் கிழித்துத் தன் பையில் வைத்துக்கொண்டாராம். அருகில் இருந்தவர்களெல்லாம் அது யாருடைய கடிதம்? எங்கிருந்து வந்தது? கடிதத்தில் உங்களைத் தாக்கி யாரும் எழுதிவிட்டார்களா?’ என்று பதைபதைப்போடு கேட்டார்களாம்.
உடனோ வினோபாஜி, ‘இல்லை இல்லை, இந்தக் கடிதம் காந்தியடிகளிடமிருந்து எனக்கு வந்திருக்கிறது’ என்று சொல்ல, ‘என்ன, காந்தியின் கடிதமா? அதை வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுகாக்காமல் இப்படிக் கிழித்து விட்டீர்களே, அப்படி அவர் என்ன எழுதியிருந்தார்’ என்று மற்றவர்கள் ஆர்வமாய்க் கேட்டார்களாம்.
அதற்கு வினோபாஜி, ‘வேறொன்றுமில்லை காந்தியடிகள் என்னைப் புகழ்ந்து என் செயல்களைப் பாராட்டி, பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தை நான் பாதுகாத்து வைத்து சுமந்துகொண்டே இருந்தால்; என் மனதில் அகந்தைதான் வளரும். அதனால் அந்த அகந்தையைக் கிள்ளி எறிந்து விட்டேன்’ என்றாராம் புன்னகையோடு.
மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை என இந்திய அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு தலைவருக்கும் தனித்த அடையாளம் ஒன்றுண்டு. அந்த வரிசையில் ‘நிலம்’ என்றாலே நம் நினைவுக்கு வந்து நிற்பவர், காந்தியின் ஆன்மீக வாரிசாக அறியப்பட்ட ‘வினோபா பாவே’தான்.
வினோபாஜி தன் வாழ்நாள் முழுவதும் இந்தியா முழுவதும் நடந்தார், பூமியை அளந்தார். செல்வந்தர்கள், ஜமீன்தார்கள், குறுநிலமன்னர்கள் இவர்களிடம் அளவுக்கு அதிகமாக இருந்த நிலங்களை ஏழைகளுக்குப் பிரித்துக்கொடுக்கப் பேருதவி செய்தார். திருமாலைப்போல இவரும் நிலமளந்த பெருமாள்தான்.
வினோபா பாவேயின் சர்வோதயா ஆசிரமம் இப்பூமிதான இயக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாகச் சேகரிக்கப்பட்டன. 13ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தை இயக்கத்திற்காகத் தானமாகப் பெற்றார்.
இந்தியாவில் பெருநில உரிமையாளர்கள், நிலம் இல்லாதாருக்குத் தாமாகவே முன்வந்து நிலத்தைக் கொடையாக அளிக்கும் நிகழ்ச்சி 1951ம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பெற்றது.
பூமிதான இயக்கத்தைத் தன் வாழ்நாளின் குறிக்கோளாகச் செய்துவந்த இவர், கல்வியிலும் மேம்பட்டவராகவே திகழ்ந்தார். 13க்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்த பன்மொழி வித்தகர் இவர். பசுக்களைத் தெய்வமாகக் கருதி வளர்க்கவேண்டும் என்று தான் போகும் இடங்களிளெல்லாம் கோசாலைகளை (பசுப் பாதுகாப்புச் சாலை) உருவாக்கினார்.
ஒரு கூட்டத்தில் அவர் பேசும்போது ‘பசுவின் பால் கன்றுக்காகத்தான், இருப்பினும் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் இந்தப் பசுவின் பாலை நாம் அருந்தக் கொடுக்கிறோம். பசுவின் பாலிற்குத் தனிப்பெருமை என்ன தெரியுமா? மனிதன் அனுபவிக்கின்ற அத்தனை இன்பங்களும் அவன் உயிரோடு இருக்கிற வரைதான் வரும். ஆனால் பால் ஒன்றுதான் மனிதர்கள் இறந்தபிறகும் பயன்படும். எவ்வாறு தெரியுமா? இறப்புக்குப் பின்னால் அவர்களுக்கான சடங்காக சுடுகாட்டிலோ அல்லது இடுகாட்டிலோ பால் ஊற்றுதல் எனும் சடங்கினை நடத்துகிறோம் என்றால் இந்தப் பசுவின் பால் ஒன்றுதான் மரணத்துக்குப் பின்னும் மனிதர்களுக்குப் புனிதத்தைத் தருகின்றது. எனவே பால் உயர்ந்தது’ என்று நெகிழ்வோடு கூறினாராம்.
‘மகாராஷ்டிரா தர்மா’ என்ற மாத இதழை 1923இல் தொடங்கினார். அதில் உபநிடதங்கள் பற்றி பல கட்டுரைகளையும், பகவத்கீதைக்கான உரையையும் எழுதினார். கதர்ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பலமுறை சிறைசென்றார். இவர் மேலும் படிக்கவும், புத்தகங்கள் எழுதவும் சிறைச்சாலை சிறந்த களமாக அமைந்தது. பகவத்கீதையை மராத்தியில் மொழிபெயர்த்தார்.
‘வினோபா பாவே என்னை விட காந்தியத்தைச் சரியாகப் பின்பற்றுபவர், எனக்கு அவர் மாணவர் அல்லர்… குரு’ என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும், தலைவர்களாலும் ‘ஆச்சார்யா’ என்று போற்றப்பட்டவர்.
வினோபா பாவேயின் மிகச்சிறந்த தேசிய சேவைகளைப் பாராட்டி அவரது மறைவுக்குப்பின் 1983இல் ‘பாரத ரத்னா விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.