எந்தக் கூட்டணியும் வேண்டாம்…!

‘பாலைக் கொடுத்துத் திருஞானசம்பந்தரையும்
சூலைக் கொடுத்துத் திருநாவுக்கரசரையும்
ஓலை கொடுத்துச் சுந்தரமூர்த்தி நாயனாரையும்
சிவபெருமான் ஆட்கொண்டார்’
எனத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பல்லாண்டுகளுக்கு முன் மதுரை ஆடி வீதியில் பேசியதை, சிறுபையனாக இருந்து கேட்டு ரசித்திருக்கிறேன். என் தந்தையார் இதற்கு அருமையாக விளக்கமும் சொன்னார்.
‘திருஞானசம்பந்தப் பெருமானுக்கு இறைவன் இறைவிமூலம் பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து ஆட்கொண்டார்.
திருநாவுக்கரசு நாயனாருக்கு ‘சூலை’ என்கின்ற கடுமையான வயிற்று வலியைத் தந்து, பின் அதனைத் தன்னருளால் நீக்கி ஆட்கொண்டாராம்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்தின்போது முதியவராக வந்த சிவபெருமான், ஓர் ஓலையைக் காண்பித்து அதில் உள்ளபடி சுந்தரர் தமக்கு அடிமை எனச் சொல்லி அத்திருமணத்தை நிறுத்;தி அவரைத் தன்னடியாராக மாற்றினாராம்.
மாணிக்கவாசகர், பாண்டிய மன்னன் தந்த செல்வத்தோடு குதிரை வாங்கத் திருப்பெருந்துறை எனும் கடற்கரை பட்டினத்திற்கு வந்தபோது, குருந்த மரத்தடியில் குருவாக வீற்றிருந்து தன் கால்களை அவருக்குக் காட்டி அவரைத் தன்னடியாராக மாற்றி, கோவில் கட்டுமாறு செய்தாராம். இதைத்தான் வாரியார், பாலை, சூலை, ஓலை, காலை என அற்புதமாகக் கூறினார் எனச் சொன்னார் என் தந்தை. நிற்க…
ஒருநாள் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக, பண்ருட்டி எனும் ஊருக்குப் பட்டிமன்றத்திற்காகக் குழுவினரோடு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. மாலையில்தான் பட்டிமன்றம். அதற்குள்ளாக, அவ்வூரின் அருகில் திருவதிகையில் உள்ள ‘வீரட்டானேசுவரர் கோவில்’ எனும் பல்லவர் கால கோவிலைப் பார்த்துவரப் புறப்பட்டோம்.
‘இந்த ஊருக்குப் ‘பண்ருட்டி’ என்ற பெயர் ஏன் வந்தது?’ என்று நான் என்னோடு வந்த அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டேன்.
‘அதென்னமோ ரொம்ப நாளா இதே பேர்தாங்க இருக்கு. ஏன்னுதான் தெரியலை!’ என்றார் அவர், அப்பாவியாக.
‘பலாப்பழத்துக்குப் பேர் போன ஊர் பாருங்க! அதனாலதான் பண்ருட்டி பலாப்பழம்னு வந்திருக்கலாம்’ என்றார் என்னோடு வந்த ஒரு பேச்சாளர்.
நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே ‘திருவதிகை’ கோவில் வாசலுக்கு எங்கள் கார் சென்று நின்றது.
6, 7ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்ட மகேந்திர பல்லவன் என்ற மன்னன் கட்டுவித்த கற்கோவில் இது. மாமல்லபுரத்தை உருவாக்கிய பெருமை இம்மன்னருக்கும், இவரது மகனான நரசிம்ம பல்லவருக்கும் உண்டு. இவர்களே கல்கி அவர்கள் எழுதிய ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ ஆகிய சரித்திர நாவல்களின் நாயகர்கள்.
‘திருவதிகை’ எனும் இத்தலம், சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த ‘அட்ட வீரட்டானத் தலங்களில்’ ஒன்று. தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் தங்கம், வெள்ளி, இரும்புக்கோட்டைகளால் தங்கள் நகரங்களை உருவாக்கி, தாங்கள் பெற்ற அரிய வரங்களால் தேவர்களையும் நல்லவர்களையும் அழித்து வந்தார்கள்.
அப்போது தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானே தேர் ஏறி போருக்குப் புறப்பட்டாராம். அத்தேரின் இரு சக்கரங்கள் சூரியனும் சந்திரனும்! மேரு மலையே வில், வாசுகி எனும் பாம்பு வில்லின் நாண் (நரம்பு), திருமாலே அம்பு, அக்கினியே அம்பின் கூர்மை, நான்கு வேதங்கள் குதிரைகள், பிரம்மனே தேர்ச் சாரதி!
வருவது யாரெனத் தெரியாத அசுரர் மூவரும் எதிரே வர, சிவபெருமானோடு வந்த தேவர்கள், நம் கூட்டணியால்தான் சிவபெருமான் வெற்றிபெறப் போகிறார் என ஆணவமாக எண்ண, அந்த எண்ணத்தை உணர்ந்த சிவபெருமான், எந்தக் கூட்டணியும் தனக்கு வேண்டாம் எனக் கோபம் கொண்டு ஒரு சம்ஹார சிரிப்பு சிரித்தாராம். அந்தச் சிரிப்பில் பிறந்த நெருப்பில், அம்மூன்று அரக்கர்ளுகம் அவர்களது கோட்டைகளும் சாம்பலாயிற்றாம்! இத்தகைய வீரச்செயலைச் செய்த இடமே இந்த வீரட்டானத் தலமாகிய ‘திருவதிகை’ என்று அக்கோவிலின் அர்ச்சகர் எங்களுக்கு அத்தலத்தின் புராணத்தைச் சொன்னார்.
‘இக்கோவிலின் அமைப்பும் தேரைப் போலவே இருப்பதைப் பார்த்தீர்களா?’ எனவும் எங்களுக்குச் சுட்டிக் காட்டினார்.
‘இந்தக் கோவிலுக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு தெரியுமா?’ என்று என்னோடு வந்தவர்களிடம் நான் கேட்டேன்.
‘பிரசாதம் மிக அருமையாக இருக்குமாம்’ என்று ஒருவர் சொல்ல, இல்லை… இல்லை.. அப்பர் சுவாமியான திருநாவுக்கரசருக்கு, இறைவன் ‘சூலை’ நோய் கொடுத்து ஆட்கொண்ட திருத்தலம் இதுதான்’ என்று ஒருவர் பக்தியோடு எடுத்துரைத்தார்.
‘ஆம், அருமையாகச் சொன்னீர்கள்’ என்று நான் அவரைப் பாராட்டினேன்.
‘இன்னும் கேளுங்கள்… திருநாவுக்கரசரின் தந்தை புகழனார், தாய் மாதினியார். சகோதரிதான் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெண்ணடியார்களுள் ஒருவரான திலகவதியார்.
தன் தம்பியாகிய நாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபோது அவரை சைவ மதத்திற்கு அழைத்துவர வேண்டுமென்று இக்கோவிலில்தான் விளக்கேற்றி நாளும் வழிபட்டாராம். அதனாலேயே இறைவன் அவருக்கு ‘சூலை’ நோயாகிய வயிற்று வலியைக் கொடுக்க, அத்துயரம் தீரும்பொருட்டு இங்கே வந்துதான் தன் முதல் தேவாரப் பதிகத்தைப் பாடினாராம். அப்பதிகம்…’ என்று நான் சொல்லிக் கொண்டிருந்தபோதே…
‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது
வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே!’
எனும் அப்பரின் தேவாரப் பாசுரம், எங்கள் காதுகளில் தேனாக வந்து பாய்ந்தது. கோவில் ஓதுவார் இத்திருத்தலப் பதிகத்தை மெய்யுருகப் பாடிக்கொண்டிருந்தார்.
அப்பாடலைக் கேட்டபடி திரிபுராந்தகராகிய வீரட்டனேசுவரரையும், அருமறை மாதா எனக் கல்வெட்டுகளால் அறியப்படும் பெரிய நாயகியம்மனையும் வழிபட்டு வெளியே வந்தபோது, ‘அதோ தெரிகிறதே… அதுதான் கெடில நதி’ என ஒருவர் சுட்டிக்காட்ட அதனையும் வணங்கினோம்.
‘அய்யா! அப்போது கேட்டீர்களே… இந்த ஊருக்குப் பண்ருட்டி எனப் பெயர் ஏன் வந்தது என்று? நினைவுக்கு வந்துவிட்டது. இந்த ஊரின் பெயர் உண்மையில் ‘பண்சுருட்டி’. இசையில் மேன்மை உடைய ஊராம். இதுவே, பிற்காலத்தில் பண்ருட்டி ஆயிற்றாம்’ என எங்களோடு வந்தவர் மகிழ்ச்சியோடு சொன்னார்.
காரில் ஏறியவுடன் என் இனிய நண்பர் பத்மஸ்ரீ உலக நாயகன் கமல் அவர்களை அலைபேசியில் அழைத்தேன். மறுமுனையில் அவர், ‘எந்த ஊரில் இருக்கீங்க?’ என்றார் இனிமையாக.
நானும் உடனே வரலாறுகளை எல்லாம் சொல்லி, ‘அப்பர் சுவாமிகளுக்கு ‘சூலை’ நோய் தீர்த்த திருவதிகையில்’ என்றேன்.
‘அப்படியா…? சூலை நோய் தீர்த்த இடமா? பிறகு செப்டம்பரில் போயிருக்கிறீர்களே…!’ என்றார் குறும்பாக.
‘ஆமாம்.. சூலை நோய் தீர்த்த இடத்திற்கு, சூலை மாதத்தில்தான் போயிருக்க வேண்டும்’ என்று நானும் வேடிக்கையாகச் சொல்ல, எங்களின் சிரிப்பலை கெடில நதிக்கரையைத் தொட்டுச் சென்றது.