எட்டாவது வள்ளல்… எம்.ஜி.ஆர்…

சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் இலங்கை சென்றிருந்தபோது ‘கண்டி’ என்ற ஊருக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று அந்த ஓட்டுநர், ‘ஐயா அந்தப் பக்கம் கையெடுத்துக் கும்பிட்டுக்கோங்க’ என்று நெகிழ்வாகக் கூறினார். நானும் கையெடுத்து வணங்கிவிட்டு, ‘அருகில் ஏதேனும் கோவில் இருக்கிறதா?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘இந்த ஊருக்கு அருகில்தான் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்த வீடு இருக்கிறது’ என்று சொன்னவுடன் நான் வியந்து போனேன்.
ஆம், மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படுகின்ற திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் தந்தை கேரளாவிலிருந்து குடும்பத்தோடு இலங்கைக்கு வேலை தேடிச்சென்றபோது அங்குதான் எம்.ஜி.ஆர் பிறந்திருக்கிறார். பின்னர் தந்தையாருடைய மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரையும், அவரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியையும் கூட்டிக்கொண்டு தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு வந்தார் எம்.ஜி.ஆரின் தாயாராகிய சத்யபாமா அம்மையார். அங்கு மூன்றாம் வகுப்புவரை எம்.ஜி.ஆரும் அவருடைய சகோதரரும் பள்ளியில் படித்தார்கள். பின்பு மேற்கொண்டு படிக்க வசதியில்லாததால் நாடகத்தில் நடிக்கப் பிள்ளைகளை அனுப்பி வைத்தார் அவரது தாயார் சத்யபாமா.
அந்தக்காலத்தில் புகழ்பெற்றிருந்த நகைச்சுவை நடிகரான காளி.என்.ரத்தினம் என்பவரிடம் நடிப்புப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு எம்.ஜி.ஆரும், சக்கரபாணியும் நடிப்புத்துறையில் வளரத் தொடங்கினார்கள். பின்னர் சில ஆண்டுகள் கழித்துச் சென்னைக்கு அவர்களது குடும்பம் குடிபெயர்ந்தது. இளைஞராக இருந்த எம்.ஜி.ஆர், காந்தியின் மீது பற்றுக்கொண்டதால் கதர்ஆடை அணிந்துகொண்டு நடிப்பதற்கு வாய்ப்புக்கேட்டுப் பல ஸ்டுடியோக்களுக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். 1937இல் வெளிவந்த ‘சதிலீலாவதி’ படத்தில்தான் எம்.ஜி.ஆர் அவர்களுக்குச் சொல்லும்படியான வேடம் கிடைத்தது. அந்தப் படத்தில்தான் டி.எஸ்.பாலையா போன்ற பல பெரும் நடிகர்கள் அறிமுகம் ஆனார்கள்.
பின்னர் அந்தக்காலத்து சூப்பர்ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த அசோக்குமார் படத்திலும், ‘தவநடிக பூபதி’ என்றழைக்கப்பட்ட பி.யூ.சின்னப்பாவினுடைய ‘ரத்னகுமார்’ படத்திலும், சிறுசிறு வேடங்களில் தோன்றினார். வீரஜெகதீஸ், அபிமன்யு போன்ற படங்களிலும் நடித்து வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ‘மருதநாட்டு இளவரசியிலும்’ ‘ராஜகுமாரி’ என்ற படத்திலும் வி.என்.ஜானகி அவர்களுக்கு ஜோடியாக கதாநாயகனாக நடித்தார். (பிற்காலத்தில் அவர்தான் அவருடைய மனைவி, எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிலகாலம் தமிழக முதல்வர்). மருதநாட்டு இளவரசி வெற்றிப்படமாக அமையவே தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குத் தமிழ்த் திரையுலகில் தனி இடம் கிடைக்கத் தொடங்கியது. இதேபோல, அந்தமான் கைதி, என் தங்கை போன்ற கறுப்பு வெள்ளை படங்களிலும், இவர் தொடர்ந்து நடித்து வந்தார்.
‘சர்வாதிகாரி’ படத்திலும் ‘மர்மயோகி’ படத்திலும் அவருடைய வீரமான நடிப்பும், உணர்ச்சிமிகுந்த வசனங்களும் அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தன. அதிலும் குறிப்பாக ‘மர்மயோகி’ படத்தில், “கரிகாலன் குறிவைக்க மாட்டான், குறிவைத்தால் தவறமாட்டான்” என்று அந்தக் காலத்திலேயே ‘பஞ்ச்’ டயலாக் பேசி தியேட்டரை அதிர வைத்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ்த் திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்து, ஒரு புதிய வரலாற்றை உருவாக்கினார். மதுரை வீரன் சக்கரவர்த்தி திருமகள், மன்னாதி மன்னன், இராஜஇராஜன் போன்ற சரித்திரப் படங்கள் எம்.ஜி.ஆரை தமிழ்த் திரையுலகின் கனவுக் கதாநாயகனாக மாற்றின.
இந்நிலையில்தான் எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அந்தக் காலத்திலேயே, இந்தக்கால பாகுபலிபோல ‘நாடோடிமன்னன்’ படத்தைப் பிரம்மாண்டமாக சொந்தச் செலவில் எடுத்து வெளியிட்டார். அந்தப் படம் வெளிவந்தபோது எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை, ‘இந்தப் படம் வெற்றிகரமாக ஓடினால் நான் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி’ என்றார். ஆனால் தமிழக மக்கள் அவரை உண்மையான மன்னனாகவே (முதலமைச்சர்) ஆட்சிபீடத்தில் அமர்த்திப் பார்த்தனர். நாடோடி மன்னன் என்ற இந்தப்படத்தில்தான் சரோஜாதேவி இவரோடு அறிமுகமாகிறார். இவர் எம்.ஜி.ஆரோடு 35க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தப் பெருமையை உடையவர்.
அதிகமான இரட்டைவேடப் படங்களிலும், வண்ணப் படங்களிலும் நடித்தவர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். எங்க வீட்டுப் பிள்ளை, மாட்டுக்கார வேலன், ஆசை முகம், நீரும் நெருப்பும், நாடோடி மன்னன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் இவர் இரட்டை வேடத்தில் நடித்த வெற்றிப்படங்கள்.
மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நடித்தப் ‘படகோட்டி’ படம் மிகப்பெரிய புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது.
இவரது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த மூன்று படங்களில் இரண்டு படங்களினுடைய இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான் (நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்) ‘அடிமைப்பெண்’ படத்தை மட்டும் டைரக்டர் கே.சங்கர் இயக்கியிருந்தார்.
திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து அரசியல் உலகிலும் காலடி எடுத்து வைத்த இவர், பரங்கிமலைத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெற்றார். பின்னர் தி.மு.க.விலிருந்து விலகி, அண்ணா தி.மு.க கட்சியை ஆரம்பித்துத் தமிழக முதல்வராகவும், பத்தாண்டு காலம் ஆட்சி புரிந்தார்.
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ இவர் பதவியேற்பதற்கு முன் நடித்த கடைசிப் படம். இவருடைய படங்களில் நல்ல குணம் கொண்ட கதாநாயகனாகத்; தீயபழக்கங்கள் இல்லாத நல்லவனாக, வீட்டைக் காக்கவும் நாட்டைக் காக்கவும் தயங்காத போர்வீரனாக இவர் நடித்த அந்தப் பாத்திரங்கள் மக்களைப் பெரிதும் ஈர்த்தன. ‘ஒளிவிளக்கு’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் அவர் குடிகாரனாகத் தோன்ற, அவருக்குள் இருந்து ஐந்து எம்.ஜி.ஆர்கள் வந்து அவரை மனம் மாற்றுவதாகக் காட்டித் தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக்கொண்டவர் எம்.ஜி.ஆர்.
சிறுவயதிலிருந்தே அவரது படங்களைப் பார்த்துத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட நான், அவர் கையால் பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டே வந்தேன். மதுரையில் நான் தியாகராசர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு படித்தபோது, பல்கலைக்கழக அளவில் நடந்த கட்டுரைப்போட்டியில் முதல் பரிசினைப் பெற்றேன். மதுரைக்கு எம்.ஜி.ஆர் வந்து அந்தப் பரிசு வழங்கப்போவதாகவும் கேள்விப்பட்டுக் கனவுகளோடு தயாராக இருந்தேன். ஆனால் அவர் வரவில்லை.
ஆனாலும் 1984ஆம் ஆண்டு என் தந்தையார் புலவர் குருநாதன் அவர்களுக்குக் கிடைத்த விருதினை எம்.ஜி.ஆர் கையால் பெறுகின்ற வாய்ப்பினைப் பெற்றேன். 1984ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் கையால் அந்த விருதினைப் பெற்றேன்.
அப்போது அந்த மேடையில் எம்.ஜி.ஆரைப் பார்த்த மிரட்சியில் நான் அதிர்ந்துபோய் நிற்க, அவர் சிரித்தபடி, என் கையைப் பற்றிப், ‘படமெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்ன அந்தச் சொல்லும், அவர் கையால் நான் விருது வாங்கிய படமும், இன்றைக்கும் என் நினைவில் இருக்கின்றன. (மூன்று முதல்வர்கள், திரு. எம்.ஜி.ஆர், டாக்டர் கலைஞர், செல்வி. ஜெயலலிதா மூவர் கரங்களாலும் பரிசு பெற்றிருக்கிறேன் என்பது ஒரு சிறப்புச் செய்தி)
நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். அவர்கள், தமிழ்த் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செய்தார்.
எம்.ஜி.ஆர் அவர்கள் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டுபேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன் மற்றும் சினிமாவில் வலம் வரும் கோவை சரளா ஆகியோர் ஆவர்.
1921ஆம் ஆண்டுத் தமிழ்மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய திரு.உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், அவரின் கனவுப்படி தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்தத் தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981ஆம் ஆண்டு அன்று முதலமைச்சராக இருந்த திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் முன் முயற்சியால் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
1981ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையும் மதுரையில் வெற்றிகரமாக நடத்தினார் எம்.ஜி.ஆர்.
‘நான் ஏன் பிறந்தேன்’ – ஆனந்தவிகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.
மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்துவிட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. எம்.ஜி.ஆரைப் பற்றித் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.
எம்.ஜி.ஆர் அவர்கள் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘பாரத ரத்னா’ விருதினைப் பெற்றவர்.
சாதனை நாயகனாக, அள்ளித்தரும் வள்ளலாகப் படங்களில் மட்டுமில்லை, அவர் வாழ்க்கையிலும் நடந்து காட்டினார். வார்த்தையையும் வாழ்க்கையையும் ஒன்றாக்கிக் கொண்டவர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். அதற்குச் சான்று திரு. எம்.ஜி.ஆர் அவர்கள்.
எட்டாவது வள்ளலாகிய எம்;.ஜி.ஆர் அவர்களின் புகழ் என்றென்றும் வாழ்க!