உலகை ஒளிர வைத்தவர்…தாமஸ் ஆல்வா எடிசன்

அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரத்திற்கும் நியூயார்க்குக்கும் இடையில் ‘எடிசன்’ என்ற ஒரு சிற்றூர் இருக்கிறது. இவ்வூரில்தான் தாமஸ் ஆல்வா எடிசன் முதன்முதலில் மின்சார பல்பினை உருவாக்கிக் காட்டினார். நான் சிலமுறை அங்கு சென்றிருந்தாலும் 2019 நவம்பர் மாதம் நியூஜெர்ஸி சென்றபோது எடிசனுக்கும் சென்றிருந்தேன். அங்கு இப்போது புதிதாக மிகப் பிரம்மாண்டமான டவர் ஒன்றை உருவாக்கி அதன் உச்சியில் மிகப்பெரிய பல்பினையும் பொருத்தியிருக்கிறார்கள்.

அத்தோடு அவர் உருவாக்கிய கிராமபோன் ரெக்கார்டுயும் பார்த்தேன். அதில் அவர் பதிந்துவைத்திருந்த இசையையும் கேட்கிற வாய்ப்பினையும் நான் பெற்றேன். அங்கே தாமஸ் ஆல்வா எடிசனைப்போன்ற உருவமும், உடையும் உடுத்திய அறிவியலாளர்கள் நமக்கு அங்கிருக்கும் கருவிகளைப் பற்றியெல்லாம் விளக்கம் சொல்லுகிறபோது எடிசனே நேரில்வந்து சொல்வதைப் போல் இருக்கிறது.

எடிசன் கண்டுபிடித்த இசைத்தட்டு முதலில் உருளைவடிவத்தில் கைப்பிடியோடு இருந்திருக்கிறது. அதை நாம் சுற்றிக்கொண்டே அதன் மீது ஊசியை வைக்கிறபோது பக்கத்தில் இருக்கும் குழாய்வடிவ ஸ்பீக்கரில் வருகின்ற இசையானது நம்மை வியக்கவைக்கிறது. அவர் கண்டுபிடித்த சினிமாப் படக்கருவியையும் அங்கே என்னால் கைகளால் தொட்டுப் பார்க்க முடிந்தது.

இந்தக் கருவியின் வருகையால்தானே, 1967க்குப் பிறகு தமிழ்நாட்டின் ஐந்து முதல்வர்கள் திரைப்படத்தின் மூலம் முதலமைச்சர் ஆனார்கள் என்று எண்ணிப்பார்த்து வியந்தேன். தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களைப் பற்றி மேலும் சில செய்திகள்…

               அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வியத்தகு நிகழ்ச்சி நடைபெற்றது. மிகப் பெரிய அறிவியல் மேதை ஒருவருடைய நினைவு நாளை அந்த நாடு வித்தியாசமான முறையில் சேர்ந்து நினைவுகூர்ந்தது.

               அமெரிக்க நகரம் முழுவதும் மின்சாரத்தை ஒரு வினாடி தடை செய்தார்கள். எங்கும் இருள் சூழ்ந்தது. சில வினாடிகள் சென்றபின் மீண்டும் ஒளி வந்தது. அந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்கள். “இதோ சில வினாடிகளுக்கு முன்பு இருளாயிருந்ததே உலகம். இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டுகாலம் உலகம் இருளில் இருந்தது. தாமஸ் ஆல்வா எடிசன் தோன்றினார். மின்சார பல்பினைக் கண்டுபிடித்தார். உலகம் ஒளிமயமானது. அவருடைய நினைவை நாம் எப்போதும் நினைத்துப் போற்றுவோம்”.

          இத்தகைய புகழை உலகுக்கு அளித்த தாமஸ் ஆல்வா எடிசன் 1847ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் அமெரிக்காவில் ‘மிலன்’ என்ற நகரில் பிறந்தார். இவருடைய முன்னோர்கள் டச்சு இனத்தைச் சேர்ந்தவர்கள். தந்தையார் சாமுவேல் எடிசன் – தாயார் நான்சி எலியட்.

               சிறுவயதில் எதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறுவனாக எடிசன் வளரத் தொடங்கினார்.

               ஒருமுறை தன்வீட்டின் ஒரு மூலையில் ஒரு கோழி தன் முட்டைகளை அடைகாப்பதையும், அதன் காரணமாக அதிலிருந்து குஞ்சுகள் வெளிவருவதையும் கண்ட எடிசன், சில முட்டைகளை எடுத்து அடைகாப்பது போல தன்னுடைய படுக்கையறையில் வைத்துப் பாதுகாத்தார். ஆனால் அதிலிருந்து குஞ்சுகள் வரவில்லை. பிறகு கோழியின் உடலில் உள்ள சூட்டில்தான் குஞ்சுகள் தோன்றும் என்பதைப் புரிந்துகொண்டார்.

               சிறுவயதில் புகைவண்டி நிலையங்களில் பத்திரிக்கை விற்கும் பையனாக, பயணிகளுக்குத் தேவையான பொருட்களைச் சுறுசுறுப்பாக வாங்கிக் கொடுக்கும் சிறுவனாகச் செயல்பட்டார்.

               டெட்ராய்ட் நகரில் இருந்த இலவச நூல் நிலையம் அவரது அறிவுப்பசிக்கு  தீனி போட்டது. புகைவண்டி நிலையத்திலிருந்த பயன்படுத்தப்படாத சாமான்கள் ஏற்றுகின்ற இரயில்பெட்டியைத் தன் ஆராய்ச்சிக் கூடமாக்கிச் சோதனைகள் செய்தார்.

       ரயிலில் செல்லும் பயணிகளுக்கு உடனுக்குடன் செய்திகளைத் தருதவற்காக ஒரு திட்டத்தைக் கண்டுபிடித்தார். பத்திரிக்கைகள் அச்சாகின்ற அந்த அலுவலகத்திற்கு ஓடிச்சென்று அச்சுக்கோர்ப்பதற்கு முன்பாகவே செய்திகளையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அவற்றைத் தலைப்புச் செய்திகளாக மாற்றி, அதைச் சுவரொட்டிகளில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் விரைந்து சென்று ஒட்டி, பத்திரிக்கை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி அதிகமான பத்திரிக்கைகளை மக்கள் படிக்கச் செய்து அதன் விற்பனைமூலம் பொருள் சேர்த்தார்.

        பின்னர் பத்திரிக்கைகளின் சக்தியை உணர்ந்துகொண்டு தாமே ஒரு பத்திரிக்கையைத் தொடங்கி அதற்குக் ‘கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்’(Grand Trunk Herald) எனப் பெயரிட்டு அதை நடத்தலானார். அக்காலத்தில் அமெரிக்காவின் புகழ்மிக்க பத்திரிக்கையான ‘டைம்ஸ்’ பத்திரிக்கை எடிசனின் இந்த முயற்சிகளைப் பெரிதும் பாராட்டி எழுதியது.

         தந்தி அனுப்பும் முறையில் பல புதுமைகளை எடிசன் செய்ததால், அதிகச் செய்திகளை விரைந்து அனுப்பும் முறை அவரால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

       கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அதிக அளவிலான உலகமக்களை எந்த விஞ்ஞானி கண்டுபிடித்த அறிவியல் கருவி சென்றடைந்தது என்று ஒரு ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியில் அதிகமான மக்களைச் சென்றடைந்த அறிவியல் சாதனம் மின்சார பல்பு என்றும், அதனைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனே மக்களின் விஞ்ஞானி என்றும் அந்த ஆராய்ச்சி விடை கூறியது.

               1812ஆம் ஆண்டு சர்.ஹம்ப்ரிடேவி என்ற அறிவியல் அறிஞர்; மின்சாரத்தினால் வெளிச்சம் உண்டாக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்தார். அதன்படி 1879ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசனும், அவருடைய உதவியாளர்களும் சுமார் 18நாட்கள் இடைவிடாது இரவு பகல் பாராது உழைத்தார்கள்.

              இத்தகைய மின்சார பல்பை இவர் உருவாக்க 1300முறை முயன்றிருக்கிறார். 1300வது தடவை ‘டங்ஸ்டன்’ என்ற அறுந்து போகாத கம்பியில் மின்சாரத்தைப் பாய்ச்ச இவரால் முடிந்தது. மின்சார பல்பு இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் மின்னொளியில் ஒளிர்ந்தது.

               1887ஆம் ஆண்டு எடிசன் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஒலியைப் (Sound) பதிவுசெய்து மீண்டும் கேட்பதைப் போல் மனித நடமாட்டங்களை, சலனங்களைப் (அசைவுகளை) பதிவுசெய்து மீண்டும் பார்க்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு இரவும், பகலும் உழைத்து சினிமாடோகிராபி’யை (இன்றைய சினிமாக் கருவி) உருவாக்கினார்.

        எடிசன் தனது வாழ்நாளில் 1500க்கும் மேற்பட்ட புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டும், அதற்கான காப்புரிமையைப் (Patent rights) பெற்றும் வைத்திருந்தார் என்பது வியப்பான செய்தி.

         ஏழைச்சிறுவனாக வாழ்க்கையத் தொடங்கி, கோடீஸ்வரராக எடிசன் திகழ்ந்தாலும் தான் கண்டுபிடித்த தந்திக்கருவி, மின்சார பல்பு, சினிமாக் கருவி என்பவற்றால் உலகின் அறிவியல் வளர்ச்சிப் போக்கையே புதுப்பித்துக் காட்டியவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது குறிப்பிடத்தக்கது.

             அறிவியலை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்திய எடிசன், உலகம் உள்ளளவு என்றைக்கும் நினைக்கத்தக்கவர்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.