உலகத் தொலைக்காட்சியும் நீங்களும்…

               தொலைக்காட்சி 20ஆம் 21ஆம் நூற்றாண்டுகளின் அறிவியல் அதிசயம். இத்தகைய தொலைக்காட்சிகள் இன்றைய சூழலில் தவிர்க்கமுடியாத சற்றே மனிதர்களின் அன்றாடப் பணிகளைத் தடைசெய்யும் விதத்திலும்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆயினும், இதனைப் பயன்படுத்துவோர் அன்னப்பறவைபோல தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நேரத்தை வீணடிக்காமல் இத்தொலைக்காட்சியைப் பயன்படுத்தலாம்.

               தொலைக்காட்சியின் பயன்பாடு என்று வருகிறபோது, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் இதன் மூலமாகப் புதுமை பெறுகின்றன. விளையாட்டு, சுற்றுலா, கோவில் நிகழ்வுகள், இதுவரை நாம் விண்ணிலும், மண்ணிலும், கடல் ஆழத்திலும் கண்டிராத அரிய காட்சிகளை வீட்டுக்குள்ளேயே இருந்து காணுகிற வாய்ப்பினையும் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இத்தொலைக்காட்சியால் வயதானவர்கள், நோயுற்றவர்கள் ஆகியோருடைய பொழுதுகள்கூட பயனோடு கழிகின்றன.

               என்னைப் பொறுத்தமட்டில் 1995 முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிற வாய்ப்பினை நான் என் தமிழால் பெற்றேன் என்பது உண்மை. பொதிகைத் தொலைக்காட்சி, அக்காலத்தில் பட்டிமன்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தபோது அதில் பங்கேற்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சன் தொலைக்காட்சியிலும், கல்யாண மாலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று இருக்கிறேன்.

ஜெயா தொலைக்காட்சியில் மில்லினியம் ஆண்டாகிய 2000 முதல் 2020ஆம் ஆண்டுவரை 20ஆண்டுகள் தொடர்ந்து தினசரி காலை நிகழ்ச்சிகளிலும் (இன்றைய சிந்தனை), பட்டிமன்ற நிகழ்ச்சியிலும், நேர்முக வர்ணனைகளிலும் (அழகர் ஆற்றில் இறங்குதல், சூரசம்ஹாரம், திருவண்ணாமலை தீபம்) போன்றவற்றிலும் பங்கேற்று இருக்கிறேன்.

         சின்னத்திரையின் முக்கிய நிகழ்வான நாடகங்களிலும் பங்கேற்று வருகிறேன். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, சன்டிவியில் தமிழ்ச்செல்வி, தற்போது ஜீ தமிழில் திருமதி ஹிட்லர், கலர்ஸ் டிவியில் டான்ஸ் எள டான்ஸ் மற்றும் எங்க வீட்டு மீனாட்சி போன்ற நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறேன்.

              அறியப்படாமல் இருந்த பல்வகைத் திறமையாளர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் உலகப்புகழ் பெற்று உயர்ந்திருக்கிறார்கள் எனும் போது திறமையுள்ளவர்களுக்குத் தொலைக்காட்சி எப்போதும் உயர்வினைத் தரும் என்பதை இந்த நூற்றாண்டு தொலைக்காட்சியின் மூலம் நிரூபித்திருக்கிறது.

               உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி உலகத் தொலைக்காட்சி நாள் கொண்டாடப்படுகிறது.

      நவம்பர் மாதம் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைக்காட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில், தொலைக்காட்சியின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாச்சார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் உலகத் தொலைக்காட்சி நாள் 1997 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

               ‘கிறிஸ்டோபர் கொலம்பஸ் 12.10.1492இல் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இச்செய்தியை ஸ்பெயின் நாட்டு அரசர் 5 மாதங்கள் கழித்து அறிந்தார். பிரிட்டிஷ் படைத்தலைவர் நெல்சன் 21.10.1805இல் மரணமடைந்த செய்தி, இங்கிலாந்து நாட்டுக்கு 15 நாட்களுக்குப் பின்னரே தெரியவந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் 14.4.1865இல் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி 12 நாட்களுக்குப் பின்னரே ஐரோப்பா கண்டத்துக்குத் தெரிந்தது’ என்று தன்னுடைய தகவல் தொடர்பியல்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் வெ.கிருட்டிணசாமி. தகவல் தொடர்பு கருவிகளாலேயே இது சாத்தியமானது. அதேநேரத்தில் தகவலை மக்களுக்கு விரைந்து சேர்ப்பதற்கான அவசியமும் அக்காலத்தில் ஏற்பட்டது. செய்தியைத் தெரிவித்தல், அறிவித்தல், அனுப்புதல், செய்தி பங்களித்தல், கருத்துப் பரிமாறுதல், அடையாளங்கள், குறியீடுகள், பேச்சு, எழுத்து, உடல்மொழி போன்றவை தகவல் தொடர்பு எனப்படுகிறது.

         1936இல் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு தொலைக்காட்சி புரட்சிக்கு 1925இல் வித்திட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஜான்லோகி பெயர்டு என்ற அறிவியலாளர். 27.01.1926இல் தான் கண்டறிந்த கருவியைப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மத்தியில் இயக்கிக் காட்டினார்.

               அவரைத் தொடர்ந்து அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக, 1936ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொலைக்காட்சி கருப்பு வெள்ளை ஒளிபரப்பு நடைமுறைக்கு வந்தது.

               Television என்பதற்குத் தமிழில் படரேடியோ, வானொளி, என்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இச்சொல் தொலைவில் உள்ளதை காண்பது என்ற பொருள் தந்ததால், தொலைக்காட்சி என்று அழைக்கப்பட்டது.

               உலக நிகழ்வுகளை வீடுகளுக்குள் கொண்டுவந்து காட்சிப்படுத்திய, தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பானது ஆன்டெனாவில் தொடங்கி, தற்போது டிஷ் கேபிள், இணையம் எனப் பல்வகை ஊடகங்களில் நிலைபெற்று விட்டது.

               அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுவதால், ஒளிபரப்பு பல்வகை ஊடகங்களுக்குள் ஊடுருவி நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. சிறிய பெட்டி வடிவில் கருப்பு வெள்ளைத் திரையுடன் தயாரிக்கப்பட்டுப், பின்னர் பெரிய அளவிலும், வண்ணத்திரையுடனும் தயாரிக்கப்பட்டு 20ஆண்டுகளுக்கும் மேலாகக் காட்சியளித்த தொலைக்காட்சிகள், 2010க்குப் பிறகு எல்இடி, எல்சிடி என அதிநவீன தொழில்நுட்பத்தில் சிறியது முதல் பெரிய திரைகளுடன் தயாரிக்கப்பட்டு, வீடுகளை அலங்கரித்து வருகின்றன.

               தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஏற்பட்ட போட்டியானது நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் மக்களுக்கு அதிகளவில் கொண்டு சேர்க்கத் தொடங்கின. நாள்தோறும் சிலமணி நேரங்கள் மட்டுமே அளிக்கப்பட்ட ஒளிபரப்பானது பின்னாளில் 24×7 என்ற 24மணி நேரமாக மாறி நிற்கிறது. 24மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் பெருகிவிட்டன.

               அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உதவியுடனும், யுனெஸ்கோவின் ஆதரவுடனும் இந்தியாவில் முதல் முறையாக 1959ஆம் ஆண்டு அக்கோடர் மாதம் 15ஆம் நாள், இந்திய அரசு டெல்லியில் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது.

               தொடக்க காலத்தில் வாரம் இரு நாட்களும், பின்னர் நாள்தோறும் 20 நிமிடங்களும் என 40கி.மீ. சுற்றளவில் மட்டுமே தெரியும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. முதலில் சமுதாய மேம்பாட்டு நிகழ்;ச்சிகளை ஒளிபரப்பிய இந்திய அரசு, அதன் பின்னர் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்தது.

          மக்கள் ஆதரவு பெருகவே தொலைக்காட்சிப் பெட்டிக்கான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கு, 1965இல் இந்திய அரசு உற்பத்தியாளர்களுக்கு அனுமதியளித்தது. இது இந்திய தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு ஓர் மைல்கல்லாக அமைந்தது. 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விவசாய நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சிகளைத் தடையின்றி பார்க்கும் வகையில் ஒளிபரப்பின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தேவையானபோது பாருங்கள், தொலைக்காட்சி மூலம் உங்கள் திறமைகளை உலகுக்கு உணர்த்துங்கள். வெற்றிக் கனியை காலத்துக்கு ஏற்ற அறிவியல் மூலம் எட்டிப் பறிக்கலாம். இது உண்மை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.