இவரும் எட்டயபுர பாரதிதான்…சோமசுந்தர பாரதியார்

எட்டயபுரம் தமிழுலகுக்குத் தந்த மற்றுமொரு பாரதி சோமசுந்தர பாரதி. இவர் மகாகவி பாரதிக்கு மூன்று ஆண்டுகள் மூத்தவர். சத்தியானந்த சோமசுந்தர பாரதி என்ற இவரது இயற்பெயரை ச.சோ. பாரதி’ எனத் தமிழக மக்கள் அன்போடு அழைப்பார்கள்.

மகாகவி பாரதியின் பால்யகால நண்பரான இவர் பாரதியோடு இணைந்து பாடல்கள் பலவற்றை இயற்றியிருக்கிறார். ஒருமுறை எட்டயபுர அரண்மனையில் வெண்பா போட்டி நடந்தது. ஈற்றடி கொடுத்து வெண்பா பாடச்சொன்னபோது மகாகவி பாரதியும், நம்முடைய சோமசுந்தர பாரதியும் அதில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றதால் இருவருக்கும் பாரதி’ பட்டம் வழங்கப்பெற்றது.

சுப்பையாவும் (சுப்பிரமணியன்) பாரதியானார், சோமசுந்தரமும் பாரதியானார். தமிழோடு வழக்கறிஞர் பட்டமும் பெற்ற இவர், அவ்வழக்கறிஞர் தொழிலில் பெரும் பணம் சம்பாதித்தபோதிலும், அதைவிடுத்து வ.உ.சிதம்பரனாரின் இண்டியன் நேவிகேன்’ சுதேசி கப்பல் கம்பெனியில் 100ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தார் என்பது ஓர் அரிய செய்தி.

வ.உ.சி.கூட கூறுவாராம். என்னிடம் இரண்டு சரக்குக் கப்பல்களும், ஒரு தமிழ்க்கப்பலும் உள்ளது’ என்று சோமசுந்தர பாரதியாரைப் பெருமைப்படுத்திக் கூறுவாராம் வ.உ.சி.

சுதந்திரப்போராட்டக் காலத்தில் சி.ஆர்.தாஸ் என்று அழைக்கப்படுகின்ற சித்தரஞ்சன் தாஸ் அவர்களை 1926இல் மதுரைக்கு அழைத்துவந்து சொற்பொழிவு ஆற்றச்செய்த பெருமை சோமசுந்தர பாரதியாரையேச் சாரும்.

காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்தபோது தம் வீட்டாரோடு சென்று காந்தியடிகளை வணங்கித், தம் மனைவி குழந்தைகள் கழுத்திலிருந்த நகைகளைக் கழற்றி தேச நிதிக்காக அளித்தப் பெருமை இவருக்கு உண்டு.

1932-33ஆம் ஆண்டுகளில் நான்காம் தமிழ்ச்சங்கமாகிய மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், நற்பணி ஆற்றியிருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியபோது தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க்கழகம் என்ற அமைப்பை நிறுவினார். தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழிபெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். நான் கண்ட சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலை எழுதினார்.

சோமசுந்தர பாரதியின் தமிழ்தொண்டைப் பாராட்டி ஈழநாட்டுப் புலவர் மன்றம் நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. திருவள்ளுவர் கழகம் கணக்காயர்’ என்ற பட்டத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது.

இத்தகைய பெருமைகளைக் கொண்ட சோமசுந்தர பாரதியார் அவர்கள் மதுரையில் பசுமலைப் பகுதியில் தன் இறுதிக்காலம் வரை வசித்து வந்தார். சோமசுந்தர பாரதி அவர்கள் 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மறைந்தார். இவருடைய நினைவாக உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது இவருடைய திருவுருவச் சிலை, அவர் வாழ்ந்த பகுதியாகிய பசுமலைக்கு அருகில் நிறுவப்பட்டு இன்றைக்கும் பெருமையோடு திகழ்ந்து வருகிறது.

தமிழ்மொழிக்கும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவுகூறத்தக்கன. பாரதிகளால் இந்தியா பெருமை பெறட்டும். தமிழ் உலகம் பயன்பெறட்டும்.   

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.