‘இல்லாதன இல்லை இளங்குமரா…’

சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்…. இராமநாதபுரம் நகைச்சுவை மன்றத்தை உருவாக்க உதவியாய் இருந்த என் இனிய நண்பர், பண்பாளர் திரு.நாராயணன் அவர்கள், நண்பர்களின் கூட்டத்தாரோடும், அவர்களின் குடும்பத்தாரோடும் எங்களை இராமேசுவரத்திற்கு அருகிலே மண்டபத்திற்கு இடையிலே உள்ள நல்லதண்ணீர் தீவுக் கூட்டத்திற்கு மோட்டார் படகினிலே அழைத்துச் சென்றார்.
அத்தீவு அகலம் குறைந்து நீண்டு காணப்பட்டது. அத்தீவில் ஒருபுறம் ஆர்ப்பரிக்கும் கடலலை. மறுபுறம் ஞானிகளின் மனம் போன்ற சலனமற்ற நீர்நிலை! பளிங்கு தண்ணீர், வெண்பட்டு மணல், புன்னை மரங்கள், அதைப் பார்த்து ஆனந்தப்பட்ட நான் அந்த அமைதியான கடல் நீரில் இறங்கினேன்.
‘ஐயா! அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துராதீங்க!’ என்று சொல்லி, இடுப்பளவு நீரில் ஓடிவந்து ஒரு மீனவர் என் கையைப் பிடித்துக்கொண்டார்.
நான் சிரித்தபடி, ‘அது இருக்கட்டும். இதே நீருக்கடியில் வட்டமான சூரியகாந்தி பூப்போல, நூடுல்ஸ் போன்று இழைகளோடு காணப்படுகின்ற இத்தாவரத்தின் பெயர் என்ன?’ என்று கேட்டேன்.
அவர் உடனே கடலே அதிரும்படியாக இராவணன் போல் சிரித்துவிட்டு, ‘இது தாவரமில்லீங்க. இது ஒருவகையான கடல்வாழ் உயிரினம்’ என்றார். நான் வியப்படைந்து ‘எங்கே அதனைப் பிடிங்க..’ என்றேன்.
அவர் மீண்டும் அதே மாதிரி சிரித்துவிட்டு, ‘வாத்தியார்ங்கறதால கடல் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியல’ என்று இயல்பாகச் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார். ‘ஐயா! உயிரினம் பத்து அடிக்குக் கீழே மண்ணுக்குள்ளே பொதஞ்சிருக்கு. இந்தப் பூ மாதிரி இருக்குறது, ஏதாவது ஒரு சின்ன உயிரினம் பட்டாலும் உடனே லபக்குன்னு உள்ள இழுத்து அதச் சாப்பிட்டுரும். அதப்போயி நாம் பிடிக்கிறதாவது’ என்று அவர் சொன்னதும் நான் வியந்து போனேன். என் வாழ்நாளில் இப்படியொரு உயிரினத்தை நான் அப்போதுதான் பார்த்தேன். அதற்கு முன்னால் இப்படியொரு உயிரினம் இருக்கிறது என்று யாராவது சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேன்.
கம்ப ராமாயணத்தில், ‘மாரீசன் வதைப் படலத்திலே’ சீதையைக் கவர வந்த மாரீசன் பொன்மானாக, கண்கள் வைரங்களாக, கொம்பு கோமேதகமாக, வால் வைடூரியமாக, கால்கள் நவரத்தினங்களாக ஜொலித்தபடி சீதையின் முன்னே வந்து நின்றான். அவ்வழகிய பொன்மானைப் பிடித்துத் தருமாறு சீதையாகிய பெண்மான் கேட்க, அயோத்தியின் கோமானாகிய இராமன் அதனைப் பிடித்துத் தர முயன்றபோது,
அருகே இருந்த இளையவனாகிய இலக்குவன், ‘அண்ணா! இப்படிப்பட்ட ஓர் உயிரினம் உலகில் உண்டா? இதுபோன்ற ஒரு பொன்மான் இருப்பதாக நாம் பார்த்ததும் இல்லை, படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இது அரக்கர் மாயை’ என்றான். அப்போது இராமபிரான் புன்னகையோடு, ‘இளங்குமரனே! நிலையில்லா இவ்வுலகத்தில் நிலைத்த புகழுடைய வல்லமை உள்ளோரும், பல்லாயிரங்கோடி மன்னுயிர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால், நாம் கண்ணால் காணாத ஒரு பொருளை உலகில் எங்கும் இல்லை என்று ஒருபோதும் கூற இயலாது’ என்றார். இதனைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர்,
“நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன்னுயிர்தம்
பல்லாயிரங் கோடி பரந்துளவால்
இல்லாதன இல்லை இளங்குமரா”
எனும் பாடலில் நயம்படக் கூறுகிறார்.
பார்த்ததையும் படித்ததையும் ஒப்பிட்டுக் காணும்போதுதான் உண்மையான இன்பம் பிறக்கிறது. ஒருமுறை மதுரை நகைச்சுவை மன்றக் கூட்டத்தில் சபையைக் குலுங்கவைத்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு எட்டு வயதுச் சிறுவன் மேடைக்கு வந்து ஒரு நகைச்சுவையைச் சொல்லத் தொடங்கினான்.
‘ஒருத்தன் ஒரு காபி கடையில் போயி ஒரு காபி எவ்வளவு?’ என்றானாம்.
’12 ரூபாய்’ என்றாராம் கடைக்காரர்.
‘எதிர்த்த கடையில் காப்பி ஒரு ரூபாய்தான்னு போட்டிருக்கு’ என்று கோபமாகக் கேட்க,
‘எலேய்ய்…அது ஜெராக்ஸ் காப்பிடா, இது கும்பகோணம் ஃபில்டர் காபிடா…!’ என்றாராம் காபி கடைக்காரர் கடுப்போடு.
குழந்தைகளின் மழலையில் நகைச்சுவை என்னமாய் மிளிர்கிறது!