இலக்கியங்கள் என்ன செய்யும்?…

ஒருநாள் கல்லூரியில் சிறப்புத்தமிழ் படிக்கின்ற மாணவர்களுக்காக வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடத்தில் கேட்கலாம் என்று சொன்னேன். யாரும் பேசவில்லை, வகுப்பில் மயான அமைதி நிலவியது.
பிறகு நான் அவர்களை நோக்கிப், பாடம் தொடர்பாக வேண்டாம். பொதுவான சந்தேகங்கள் எதுவானாலும் கேளுங்கள் என்று சொன்னவுடன், ஒரு மாணவி எழுந்தாள்… “ஐயா, எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர் டாக்டர் ஆகிறான். பொறியியல் படிப்பவர்கள் இன்ஜினியர் ஆகிறார்கள். சட்டம் படிப்பவர்கள் நீதிபதியாக, வழக்கறிஞராக ஆகிறார்கள். தமிழ் படிப்பதால் என்ன லாபம், இலக்கியம் படித்தால் என்ன ஆகலாம்?” என்று அந்தப் பெண் கேட்டவுடன் வகுப்பே கலகலப்பானது. நான் சற்று அதிர்ச்சியடைந்தேன்.
ஏனென்றால் பொதுவாக எந்த வழியும் இல்லாதவர்கள் வேறு வழி இல்லாமல் கடைசி முயற்சியாக இலக்கியத்தில் வந்து சேருவது போலவும், மொழிப் பாடங்கள் படிப்பது பயன் அற்றது போலவும், ஒரு கருத்து நம் நாட்டு மக்களிடையே நிலவி வருகிறது.
நான் சிறுபிள்ளையாக இருந்தபோது ஒருமுறை, தமிழாசிரியரான என் அப்பாவிடம் பாடம் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒருவர் ஒரு இருபது வயதுப் பையனைத் தன்னுடன் கூட்டிவந்தார்.
வந்தவர் ‘இந்தப் பையனுக்குப் படிப்பு வரவில்லை. ஒரு மண்ணும் புர்pயமாட்டேங்குது. இவன் எந்த வேலைக்கும் லாயக்கு இல்லை, பேசாம உங்கள மாதிரி வாத்தியார் ஆக்கி விட்டுடுங்களேன்’ என்று சொன்னவுடன், என் தந்தை வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.
கேள்வி கேட்ட பெண்ணிடம் ‘நீங்கள் சொல்வது உண்மைதான். அவர்கள் எல்லோரும் தொழிற்கல்வி கற்கிறார்கள். அதனால் அவர்கள் தொழிலைச் செய்ய முடியும், பணம் ஈட்ட முடியும் உண்மைதான்.
ஆனால் வாழ்க்கை என்னும் பாடத்தைச் சொல்லித் தருவது இலக்கியம். விலங்கு நிலையிலிருந்த காட்டுமனிதனைப் பண்பட்ட மனிதனாக மாற்றிக் காட்டியது கல்வி. குறிப்பாக இலக்கியங்கள்.
இன்பம், துன்பம், காதல், குடும்பம், தனிமை, பெருமை என்று அத்தனை உணர்ச்சிகளையும் பண்படுத்துவது இலக்கியங்கள்தான் என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தேன்.
‘குறைந்தபட்சம் அன்பை வெளிக்காட்ட ஒரு காதல் கடிதத்தை உணர்வோடு எழுதவாவது இலக்கியம் துணை நிற்காதா’ என்று கேட்டபொழுது, வகுப்பறையில் அப்போது எல்லாம் புரிந்ததுபோல் ஒரு சந்தோஷ அலை எழுந்தது. இலக்கியம் எனக்குக் கை கொடுத்தது.
வாழ்க்கையின் இனிமைகளை உணரவைப்பது இலக்கியம்.
அன்பை, காதலை, மானஉணர்வை, குடும்பப் பாசத்தை கற்றுக்கொடுப்பது இலக்கியம். கல்லாதவர்களிடம் இந்த இயல்புகள் அனுபவத்தின் மூலம் வரும். அந்த அனுபவத்தை மேலும் மெருகூட்டுவது இலக்கியங்கள்தானே!
சங்க இலக்கியத்தைக் கற்றதால் கம்பனும், கம்பனைக் கற்றதால் பாரதியும், பாரதியைக் கற்றதால் கண்ணதாசனும், கண்ணதாசனைத் தொடர்ந்து இன்றைய கவிஞர்களும் இலக்கிய ஒளியை நம்மீது பாய்ச்சிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இலக்கியங்களைப் படித்துப் பாருங்கள், பின்னர் அதை நினைத்துப் பார்த்து அசைபோடுங்கள் அதன் அருமையை அனைவரும் உணர்வீர்கள்! என்று நான் சொல்லி முடித்தேன் வகுப்பறையில் கைதட்டல் எழுந்தது.