இப்போது இது அவசியம்…. அவசரம்….

பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, பள்ளிகள் கல்லூரிகள் தொடங்கி மாணவ மாணவியரும் பள்ளி, கல்லூரி செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். மீண்டும் கல்விக்கான எந்திரம் சுழலத் தொடங்கிவிட்டது என்பதில் நமக்கு மகிழ்ச்சியே.
ஆனால் சமீப காலங்களில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆசிரியர்கள் குறிப்பாகப் பெண் ஆசிரியைகள் மாணவர்களால் தாக்கப்படுகிறார்கள் என்பதும் மாணவ மாணவியர்களுள் சிலர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கின்ற செய்திகளும் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.
மாதா பிதா குரு தெய்வம் எனச் சொல்லும்போது, ஆசிரியர் தந்தைக்கு அடுத்தபடியாகவும் தெய்வத்திற்கு இணையாகவும் போற்றப்படக்கூடிய பெருமையை உடையவர் என்பது நம்முடைய மரபு. கல்வியின் பெருமையை ஆசிரியர் இல்லாமல் நாம் அறிந்துகொள்ள முடியாது.
தற்காலத்தில் கல்வி போதிக்கும் முறையில் மாணவர்களுக்கு எந்தச் செய்தியும் எளிதில் புரியும்படி விளக்கமுறையில் சொல்லித் தருதல் வேண்டும். அவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் அடிக்கவோ தண்டிக்கவோ இன்னும் சொல்வதாக இருந்தால் கண்டிக்கவோ கூடாது என்ற நிலை இக்காலத்தில் காணப்படுகிறது.
இதே சூழலில் ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாற்றலாகிப் போகும்பேர்து அந்த மாணவ மாணவியர் எல்லாம் அவர்மீது கொண்ட அன்பினால் அழுது புலம்பி அதிகாரிகளுக்கு ‘இந்த ஆசிரியரை மாற்றக் கூடாது’ என விண்ணப்பிக்கும் முறையையும் பார்க்கிறோம். இந்த முரண் நமக்கு வியப்பைத் தருகிறது.
எப்படி இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே இணையவழி படித்த மாணவ மாணவியரின் மனநிலையில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் அறிகிறோம்.
ஊடகங்களும், திரைத்துறையும், ஆசிரியர் என்று ஒருவரைக் காட்டும்போது பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களையே அதில் நடிக்கச் செய்வதும், மாணவ மாணவியர் அவரை முட்டாளாக்கிக் கேலிசெய்வதுமாகக் காட்டப்படும் காட்சிகள் காலங்காலமாக நடந்து வருகிறது.
கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட கதாநாயகர்கள் இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து இதற்கு மாற்றாக ஏதாவது செய்வார்களேயானால் அது சமுதாயத்துக்குச் செய்யும் சேவையாகும்.
மற்றொன்று இந்த மாணவ, மாணவியரின் பெற்றோர்களும், உறவினர்களும் நண்பர்களும் தங்களால் ஆன உதவியினை மாணவச் சமுதாயத்திற்குச் செய்தாக வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியிருக்கிறது. குறிப்பாக அலைபேசி (செல்போன்) பயன்பாடு மாணவர்களை என்ன பாடு படுத்துகிறது என்பதைப் பார்க்கிறோம். சூதாட்ட விளையாட்டுகளும் அவர்களைத் தவறான முடிவுக்கு தள்ளிவிடுகின்றன.
எனவே ஊர்கூடித் தேர் இழுத்தால்தான் தேர் நிலைக்கு வரும். மாணவ சமுதாயத்தை நன்நிலைக்கு கொண்டுவர நாம் அவர்களிடத்தில் நல்ல உணர்வுகளோடு நகைச்சுவை உணர்வுகளையும் தோற்றுவித்தால் எதிர்காலத்தில் இவை நல்ல பலனைக் கொடுக்கலாம்.
நகைச்சுவை உணர்வுள்ளவர்கள் தீங்கு செய்ய எண்ண மாட்டார்கள். கல்விநிலையங்களில், பாடத்திட்டங்களில்கூட நகைச்சுவைக்கான பகுதியை சேர்த்தால் நலமாக இருக்கும்.
இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு தன்னாட்சி கல்லூரியில் வித் அண்ட் ஹியூமர் என்று ஒரு பேப்பரை, பாடமாகப் பாடத்திட்டத்தில் வைத்திருந்ததை நான் அறிவேன். நானும் ஆசிரிய சமுதாயத்தைச் சார்ந்தவனாதலால் மேற்கூறியவற்றையெல்லாம் செய்ய வேண்டியது அவசியம்; அவசரம் என்று உணர்கிறேன். இதில் எல்லோருக்கும் பொறுப்புண்டு.