இந்தோனேசியா தமிழ்ச்சங்கத்தில் கமல்ஹாசன்…!

               ‘இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள தமிழ்ச்சங்க இரண்டாம் ஆண்டு விழாவிற்கு நீங்கள் வந்திருந்து சிறப்புரை ஆற்ற வேண்டும்’ என்ற அழைப்பு வந்தபோது, நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நாம் சிறு வயதில் படித்த கடல் புறா’ ‘பொன்னியின் செல்வன்’ போன்ற நாவல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் சொல்லப்பட்ட அற்;புதமான தீவுக் கூட்டங்களைக் காணப்போகிறோம் என்று!

               அந்தமான், நிகோபார், ஜாவா, சுமத்திரா என்னும் தீவுக் கூட்டங்கள் முந்நீர்ப்பழந்தீவுகள் என இலக்கியங்களில் கூறப்படும் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ஜாவா’ எனும் பெரும் தீவே தற்போது இந்தோனேசியா என்ற பெயரிலும், அதன் தலைநகர் ஜகார்த்தா என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது.

               சாவகம்’ என்னும் தீவு, மணிமேகலை எனும் காப்பியத்தில் குறிப்பிடப்படுகிறது. இத்தீவுகளின் பெயர்களை நாம் இன்றும் பெருமையோடு குறிப்பிடக் காரணம், நம் பண்டைத் தமிழ் மன்னர்கள் தங்களின் வலிமை வாய்ந்த கடற்படையின் மூலம் அந்நாடுகளை வெற்றி கொண்டதோடு, அங்கே நம் தமிழர்களையும் குடியேற்றம் செய்வித்தனர். அத்தமிழர்களும் நமது பண்பாட்டை மரபுகளைப் போற்றி வளர்த்து வந்துள்ளனர்.

               மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் நல்ல உயர்நிலையில் வசித்துவரும் இடம் ஜகார்த்தா. தொழிலதிபர்கள், நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் எனத் தமிழர்கள் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்துள்ளார்கள் அங்கே!

               தமிழ்ச்சங்க விழாவில் என்னோடு பங்கேற்க எனது துணைவியார் அமுதா சம்பந்தன் அவர்களும், சூப்பர் சிங்கர் தேர்வில் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கோவா’ படப்புகழ் திரு.அஜீஸ் மற்றும் செல்வி ராகினிஸ்ரீ (இவர்தான் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பின்னணி குரல் கொடுத்தவர்) ஆகியோரும் வந்திருந்தனர்.

               தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.விசாகன் அவர்களும் அவர் குடும்பத்தாரும் எங்களைத் தங்களின் குடும்பத்தார்போல வரவேற்று உபசரித்தனர். நான் அங்கிருந்த நண்பர்களிடம், ‘இந்த ஊரில் என்ன விேஷசம்? முக்கியமாய் பார்க்க வேண்டிய இடங்கள் எவை எவை?’ என்று கேட்டேன்.

               ‘குமுறும் எரிமலைகள், கொந்தளிக்கும் கடல் சுனாமி, எப்போது வரும் என்று தெரியாத நிலநடுக்கம்’ (பூமியதிர்ச்சி) என்று அவர் சர்வ சாதாரணமாய் சொன்னார்.

               உடனே அருகே இருந்த மற்றொரு நண்பர், ‘இவை எல்லாம் இருந்தாலும் இந்த ஊரின் இயற்கை வளத்திற்கு ஈடுஇணை எந்த நாட்டிலும் இல்லை. எரிமலைச் சாம்பல், இயற்கை வளங்களை அள்ளிச் சொரியும்’ என்றார்.

               முப்பெரும் கடவுளர்களான சிவன், திருமால், பிரம்மன் மூவருக்குமான கோவில்கள் உண்டு. ஆனால், வழிபாடுகள் இல்லை. அவை மியூசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன’ என்றார்.

               அந்த ஊரின் பணத்திற்கு ரூப்யா’ என்ற பெயர் சொன்னார்கள். நமது ஊர் ஒரு ரூபாய்க்கு அங்கே 180ரூபாயை இணையாகச் சொல்கிறார்கள். நம்பவே முடியவில்லை. எனக்கு ஒருவர் 18,000ரூபாய்க்கு ஒர பொருள் வாங்கிக் கொடுத்தார் என்றால், அது நம்ம ஊர் விலையில் 100 ரூபாய்தான். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! இத்தனை ஆச்சரியங்களோடு மாலையில் விழா அரங்கிற்குச் சென்றோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பெருமக்கள், விழாவில் நம் தமிழகத்தின் பாரம்பரிய உடைகயான பட்டு வேட்டி, சேலை, பெண் குழந்தைகள் பாவாடை, தாவணி என வந்திருந்து பெருமை சேர்த்தனர்.

               விழா நிகழ்வுகளை இளம்பெண்கள் இருவர் அழகு தமிழில் தொகுத்தளிக்க, இந்தியத் தூதுவர் திரு.சுர்ஜித் சிங் அவர்கள் ‘வணக்கம்’ என்று சொல்லித் தொடங்கவும், விழா  மண்டபமே மகிழ்ச்சி ஆரவாரத்தால் பொங்கி வழிந்தது.

               என்னைப்பற்றி இந்தியத் தூதர் குறிப்பிடும்போது, ஞானத்தோடு சம்பந்தம் உள்ளவர்’ என என் பெயரைக் கொண்டே எனக்குப் புகழாரம் சூட்டினார்.

               நான் பேசத் தொடங்கும்போது, அந்த அழகான அரங்கத்தையும், அரங்கத்தின் பிரம்மாண்டமான வெண்திரையையும், மேடை நிகழ்ச்சிகள் அத்திரையில் தோன்றும் அழகினையும் சுட்டிக்காட்டி, சிலப்பதிகாரத்தில் மாதவி அரங்கேற்றம் செய்த மேடை அமைப்பை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இளங்கோவடிகள் வருணனை செய்த அழகினையும் ஒப்பிட்டுச் சொன்னேன்.

               மேடையும் ஒலிபெருக்கியும் ஒருங்கிணையாவிட்டால் நிகழ்ச்சி வெற்றிபெறுவது கடினம் என்பதைச் சொல்லவந்த நான், ஒரு செய்தியை நகைச்சுவையோடு விளக்கினேன். ‘இப்படித்தான் நான் ஒரு கூட்டத்தில் பேசத் தொடங்கியவுடன் அரங்கத்தின் பின்னால் இருப்பவர்களைப் பார்த்து, ‘நான் பேசுவது கேட்கிறதா?’ என்று கேட்டேன். அவர்கள் அங்கிருந்தபடியே, ‘ஒண்ணும் கேக்கல! அதனால் என்ன? நீங்க பேசுங்க, இங்க நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்’ என்று சொல்ல, அதற்கு முன்வரிசையில் இருந்த சிலபேர், ‘அங்கே கேட்கலையாமே!’ என்று ஆர்வத்தோடு அங்கே எழுந்து செல்லத் தொடங்கினார்கள்’ என்று நான் சொல்லிக்கொண்டு வர வர, சிரிப்பலை சுனாமியாகச் சுழன்றடித்தது (அந்த நாட்டுக்கு ஏற்ற உவமை தாங்க)

               எனது பேச்சு முடிந்தவுடன், எதிர்பாரத செயல் ஒன்று நடைபெற்றது. மேடையில் பிரம்மாண்டமான ‘கேக்’ ஒன்று கொண்டு வரப்பெற்று, என்னையும் என் துணைவியாரையும் அழைத்து அந்த கேக்கை வெட்டச் சொன்னார்கள். ஆம்! அக்டோபர் 19 எனது பிறந்தநாள் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்கள் எனக்கே தெரியாமல் செய்த ஏற்பாடு அது. நானும் சற்று கூச்சத்தோடு அந்த கேக்கினை வெட்டி முடித்தபோது, வந்திருந்த அத்தனைபேரும் எழுந்துநின்று பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறினார்கள். நான் அந்த வாழ்த்தினை, நான் கற்ற தமிழுக்கும் தமிழன்னை எனக்குத் தந்த உயர்வுக்குமாக எண்ணி மகிழ்ந்தேன்.

               அப்போது மற்றுமொரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. என் இனிய நண்பர் உலக நாயகன் கலைஞானி திரு.கமல்ஹாசன் அவர்கள், எனது அலைபேசியில் என் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அழைத்தார். நான் உடனே அவரிடத்தில், ‘நீங்கள் எனக்கு வாழ்த்து கூறுவதோடு இந்தோனேசியாவின் ஜகார்த்தா தமிழ்ச் சங்கத்திற்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்’ என்று சொல்லி, எனது செல்போன் இணைப்பை அங்கிருந்த ஒலிபெருக்கியோடு இணைக்க, இரண்டு நிமிடம் அவர் பேசிய அழகுத் தமிழால் அந்த மண்டபமே அதிர்ந்தது. அவ்வோசை கேட்டு அவரும் மகிழ்ந்தார்.

               உலக நாயகனின் வாழ்த்தினைக் கேட்ட நம் தமிழ் மக்கள், அவரையும் அடுத்த ஆண்டு அழைத்து வரவேண்டும் என அன்போடு வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் இன்னிசை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விழா முடிய இரவு 12மணி ஆயிற்று.

               சரித்திரக் கதைகளில் படித்த நாட்டினை சரித்திர நாயகர்கள் கால்பதித்த இடத்தினைக் கண்டுவந்த மகிழ்ச்சி, நான் பெற்ற கல்வியால் அல்லவோ எனக்குக் கிடைத்தது!

               கற்கை நன்றே! கற்கை நன்றே! உலகைச் சுற்ற கற்கை நன்றே!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.