இந்தோனேசியா சோழர் கோவில்…

‘இந்தோனேசியாவில் முதல்நாள் கூட்டத்தை முடித்துக் கொண்டு நானும் என் துணைவியாரும் நாங்கள் தங்கியிருந்த 60மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தபோது இரவு மணி 12. ஆனால், அந்நகரமோ நமது மதுரையைப் போலவே தூங்கா நகரமாகச் சுறுசுறுப்பாக அந்த நேரத்திலும் இயங்கிக் கொண்டிருந்தது.
‘காலை 7மணிக்கு விமானம். நாம் 6 மணிக்கு அங்கே இருக்க வேண்டும். 5மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு விடலாம். நான்கு மணிக்கு எழுந்து தயாராகி விடுங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தமிழ்ச்சங்கத் தலைவர் விசாகன் சென்றபோது, நாங்கள் திகைத்துப் போனோம். நாங்கள் தங்கியிருந்த அறை 50வது மாடியில் இருந்தது. அங்கிருந்து அந்த நகரத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
மிகப்பெரிய சாலைகளில் மல்லிகைப் பூ போன்றும், கனகாம்பரப் பூ போன்றும் கார்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தன. ஆமாம்! வந்துகொண்டிருக்கும் கார்களின் முன்விளக்குகள் மல்லிகைச் சரங்களைப் போன்று வெண்மையாகவும், சென்றுகொண்டிருக்கும் கார்களின் பின்னிருக்கும் சிவப்பு விளக்குகள் கனகாம்பரப் பூக்கள் போன்றும் மிக அழகாக இருந்தன.
மேலைநாடுகளில் நாம் தங்கியிருக்கும் அறைகளிலேயே காபி, டீ போன்றவற்றைத் தயாரித்துக்கொள்ளத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும்.
திடீரென்று சுள்ளென்று வெயில் அடிக்க, ‘ஆஹா… மோசம் போய்விட்டோமே! இப்படியா மதியானப்பொழுது வரைக்கும் தூங்கித் தொலைப்பது?’ என்று கவலைப்பட்டுக்கொண்டே எழுந்து மணியைப் பார்த்தபோது மணி நான்குதான் ஆயிருந்தது. நான் திடுக்கிட்டுக் கடிகாரத்தை உற்றுப்பார்த்தால் நேரம் அதிகாலை 4மணிதான். அப்படியானால், அந்தச் சூரியன்…? அங்கே கோடைக்காலத்தில் சூரியன் அதிகாலையிலேயே தோன்றி இரவு 8மணி வரை ‘ஓவர்டைம்’ பார்த்துவிட்டுத்தான் செல்லுமாம். அதற்குப் பதிலாகக் குளிர்காலத்தில் விரைவில் மறைந்து, காலையிலும் கால தாமதமாகத்தான் வருமாம்! அதனால்தான் மேலைநாடுகளில் குளிர்காலம், கோடைக்காலங்களுக்கு ஏற்ப நேரங்களை மாற்றி அமைத்துக் கொள்வார்களாம்!
‘ஒருநாள் கல்லூரியில் காலதாமதமாக வந்த மாணவனை, ‘ஏன் லேட்?’ என்று கோபத்தோடு ஒரு ஆசிரியர் கேட்க, ‘லேட் ஆயிடுச்சு சார்’ என்றானாம். மறுநாள் அதே ஆசிரியர் அதே பையனைப் பார்த்து, ‘நேத்து கடைசி மணியிலே உன்னைக் காணோமே…?’ என்று கேட்க, ‘ஆமாம் சார், காலையில லேட்டா வந்ததால கவலைப்பட்டுச் சீக்கிரமே வீட்டுக்குப் போயி நேரத்தைச் சரி பண்ணிட்டேன்’ என்று சொல்ல, அவன் சொன்னது விளங்காத அந்த வாத்தியார் ‘வெரிகுட்’ என்றாராம்.
பொதுவாகப் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் சீக்கிரம் வந்து தாமதமாக வீடு செல்வது அந்தக் காலத்தில் வழக்கம். ஆனால், இந்தப் பையனோ மேல்நாட்டு குளிர்காலச் சூரியனைப் போல காலையில் தாமதமாக வந்து விரைவாகச் சென்றிருக்கிறான்.
இந்தோனேசியா நாட்டில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனை – போக்குவரத்து. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. விமானத்திலிருந்து இறங்கி ‘டூரிஸ்;ட்’ கார் பிடித்துப் போராபுதூர் வந்து இறங்கியபோதுதான் நிம்மதியாக மூச்சுவிட்டோம்.
அந்த இடத்தில் எந்தக் கோவிலையும் காணவில்லை. அருமையான சுற்றுலாத் தலம். என் துணைவியார் நம் தமிழ்நாட்டு மரபுப்படி பட்டுச்சேலை கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அந்நாட்டுப் பெண்களுக்கு ஒரே வியப்பு! சென்ற இடமெல்லாம் என்னைத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, கூட்டம் கூட்டமாகப் பெண்களும் குழந்தைகளும் அவர்களோடு புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்கள். கழுத்தில் அணிந்திருந்த நகை, தோடு, ஜிமிக்கி இவற்றைத் தொட்டுத் தொட்டு மகிழ்ச்சியோடு அவர்கள் அவர்கள் மொழியில் பேச, என் துணைவியார் தூய தமிழில் அவர்களிடம் பேச, எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
சற்றுதூரம் பசுமையான அந்தக் காட்டிற்குள் நடந்து போனபோது, ‘அதோ… அதுதான் புத்தர் ஆலயம்!’ என்று சொன்ன சொல்தான் என் காதில் விழுந்தது. ‘அடேயப்பா….! என்ன அழகு?’ என்று நான் வியந்து நின்றுவிட்டேன்.
வட்டவடிவில் பௌத்த மடாலயங்களின் வடிவமைப்பு முறையில் உயரே உயரே ஏறிச்செல்லும் படிக்கட்டுப் பாதையாக, ஒவ்வொரு தளமும் வட்டவடிவில் சுற்றிப்பார்க்கத் தக்கதாக, 10தளங்களை உடையதாக அப்புத்தர் கோவில் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு தளத்திலும் வெட்டவெளியில் – நமது ஊரில் பஞ்சாரக் கூடை (கோழியை அடைத்து வைப்பது) என்று ஒரு கூடை வைத்திருப்பார்கள் – வட்டவடிவில் 10அடிக்கு ஒரு சிறுகோவில் வடிவில், பஞ்சாரக் கூடை போன்று அமைக்கப்பட்ட அதன் உட்புறத்தில் அமர்ந்த நிலையில் புத்தர் பெருமான்!
இப்போது கற்பனை செய்து பாருங்கள். எத்தனை தளங்கள்… ஒரு சுற்றுக்கு எத்தனை சிறு பஞ்சார வடிவக் கோயில்கள்…! அதன் உள்ளே புத்தர் சிலைகள். உச்சியில் உயர்ந்த பிரம்மாண்டமான பஞ்சாரக் கூடைக்குக் கீழே, தரைத்தளத்தில் தஞ்சைப் பெருவுடையார் லிங்கவடிவில் இருப்பதுபோல அமர்ந்த நிலையில் புத்தர். ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகள்.
மேலே ஏறிச்செல்லச் செல்ல வியப்பு! பரந்த பசுமையான காடு! பின்னணியில் நீலநிற ஆகாயம்! மோனநிலையில் புத்தரின் புன்னகைக்கும் தோற்றம்!!!
கி.மு.ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் கபிலவஸ்து எனும் நகரில் தோன்றிய ஞானச்சுடராம் புத்தரின் பெருமையை இன்றைக்கும் பறைசாற்றும் அரிய கோவில் போராபுதூர் புத்தர் ஆலயம்.
பிற்பகல் ஆனவுடன் மெதுவாகக் கீழே இறங்கி ‘பிரம்மனன்’ எனும் சோழர் காலத்துக் கோவில்களைக் காணப் புறப்பட்டோம். 50 மைல்களுக்கு முன்னரே, அடிவானத்தில் நமது தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற மூன்று வானோங்கிய கோபுரங்கள் தெரியத் தொடங்கின. அவை சித்திரங்கள் போலக் காட்சி தந்தன.
கோவிலுக்கு முன்னே, தாஜ்மஹாலில் இருப்பதுபோன்ற மிகப்பெரிய பூந்தோட்டம். கோவில், அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருப்பதால் உள்ளே மூலவர் சிலைகள் இல்லை.
உள்ளே செல்வோர் யாராக இருந்தாலும் சிறிய ஹெல்மெட் போட்டுக்கொண்டுதான் போக வேண்டும் – கற்சுவரில் முட்டிவிடாமல் இருக்க!
சோழமன்னர்கள் ருத்திரனாகிய சிவனுக்கும், பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இக்கோவில்களைக் கட்டியுள்ளார்கள்.
தம் கடற்படையால் நாடுகளை வெற்றிகண்ட நம் சோழமன்னர்கள், அங்கே தங்கள் புலிக்கொடியைப் பறக்க விட்டதோடு, பண்பாட்டுத் தலங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
மன்னர்களும் அவர்கள் வாழ்ந்த அரண்மனைகளும் காலத்தால் அழிந்துவிட்டாலும், அவர்கள் இறைவனுக்குக் கட்டிய கோவில்கள் இறைவனைப்போல அழியாது காட்சி தருவது நினைக்கத்தக்க ஒன்று.
நாங்கள் விமான நிலையத்திற்குக் காரில் புறப்பட்டபோது, தமிழ்ச்சங்கத் தலைவர் கொண்டுவந்த ஒலி நாடாவிலிருந்து ஒலித்த பாட்டு என்னை வியப்புறச் செய்தது.
‘இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகிறான்.
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகிறான்!’
எனும் பூவை செங்குட்டுவனின் பாடல், ‘வா ராஜா வா’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் ஒலித்தபோது பயணம் தேனாக இனித்தது.
ஒருபுறம் புத்தர். மறுபுறம் எல்லாம் வல்ல சித்தர் (சிவபெருமான்).
காணக் கண்கோடி வேண்டும்! வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள்! இல்லையேல் வலைதளத்தில் பாருங்கள்.