இதழியல் உலகின் தீபம் (நா. பார்த்தசாரதி)

தமிழக எழுத்தாளர்களுள் தனக்கென ஒரு மொழிநடையையும், இலக்கையும் தீர்மானித்துக்கொண்டு எழுதிய எழுத்தாளப் பெருமக்களுள் ஒருவர் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி அவர்கள்.
நான் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்த காலத்தில் (1977) எங்களுக்குப் ‘பிறந்த மண்’ என்கின்ற ஒரு குறுநாவல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதன் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள். அதில் அவர் சொல்லியிருந்த செய்தியானது இன்றைக்கு வரைக்குமான இளைய சமுதாயத்திற்கான செய்தியாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அந்தக் கதையில் வருகின்ற கதாநாயகன் வறுமையின் காரணமாகத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற அயல்நாடு சென்று அங்கு பல அவமானங்களைச் சந்தித்தபின், தன் சொந்தஊருக்கே திரும்பிவந்து, தண்ணீர் இல்லாததால்தான் ஊரில் விவசாயம் செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து, ஊராரோடு சேர்ந்து ஒரு வாய்க்காலை உருவாக்கி அதன் மூலம் விவசாயம் செய்து உயர்வதாக அந்தக் கதை அமைந்திருக்கும்.
‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்,
ஒழுங்காய்ப் பாடுபடு வயல்காட்டில்,
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’
என்று மருதகாசி, ‘விவசாயி’ படத்தில் பாடல் எழுதியிருப்பார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அந்தப் பாடலைப் பாடியபடி, காலத்திற்கு ஏற்ப டிராக்டரில் உழவு செய்வார்.
பிறந்த மண் கதையைப் படித்தபிறகு, பார்த்தசாரதி அவர்களின் எழுத்துக்களை நான் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அவர் கதையில் வருகிற கதாநாயகனுடைய பண்பு, ஒழுக்கம், நேர்மை இவை என்னை மட்டுமல்லாமல் அன்றைய இளைய சமுதாயத்தினரையும் மிகவும் ஈர்த்தது. அவர் கதைகளில் வருகின்ற கதாநாயகன், கதாநாயகியினுடைய பெயர்களான அரவிந்தன், பூரணி போன்ற பெயர்கள் தமிழர்களின் வீட்டுக் குழந்தைகளின் பெயர்களாயின.
படிக்கிறகாலத்தில் அவரைச் சந்திக்க வேண்டுமென்று நான் நினைத்திருந்தேன். அதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மதுரை சேதுபதி பள்ளியில் ஒருமுறை அவர் ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு வந்திருந்தார். அப்போது அவருடைய எடுப்பான தோற்றம் அனைவரையும் ஈர்த்தது. வெள்ளை வேட்டியும், வெள்ளை ஜிப்பாவும் அணிந்திருந்த அவர் சிவந்த மேனியோடும், சுருள்முடியோடும் அமர்ந்திருந்த காட்சி அந்த சபைக்கே ஒரு அழகிய தோற்றத்தைக் கொடுத்தது. பேசி முடித்துவிட்டு அவர் இறங்கி வரும்போது, அவரது சிவந்த பாதங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப்போனேன்.
ஏனென்றால், அவருடைய கதைகளில் கதாநாயகன், கதாநாயகினுடைய சிவந்த மென்மையான பாதங்களைப் பற்றி அவர் அதிகம் வர்ணித்திருப்பார். நான் அவசரமாக அவரிடத்திலே ஓடி ‘உங்கள் கதைகளில் வருகிற கதாநாயகன் போலவே இருக்கிறீர்களே’ என்று சொன்னபோது, அவர் மென்மையாகச் சிரித்துவிட்டு, ‘தொடர்ந்து படியுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
சிலஆண்டுகள் கழித்து அவர் பிறந்த ஊரான வத்திராயிருப்பிற்கு நான் பட்டிமன்றத்திற்குச் சென்றபோது, இதுதான் ‘தீபம்’ பார்த்தசாரதியினுடைய வீடு’ என்று அந்த அக்ரஹாரத்திலிருந்த பழைய வீட்டைக் காட்டினார்கள். அந்த வீட்டுக்கு எதிர்வீட்டில்தான் எங்களுக்கு உணவும், தங்குவதற்கு ஏற்பாடும் செய்திருந்தார்கள். பட்டிமன்றம் முடிந்தபிறகு, நிலாவெளிச்சத்தில் மொட்டை மாடியில் படுத்திருந்த நாங்கள் விடியும்வரை அவரைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். (மதுரைக்கு முதல் பேருந்து காலை 5மணிக்குதான்).
தமிழில் வியாபார நோக்கமில்லாமல் வெளிவந்த அழகிய இலக்கிய இதழ் தீபம் பத்திரிக்கைதான். நான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்தபோது, தீபம் தொகுதிகள் முழுவதையும் (Back volume) பார்த்திருக்கிறேன். அதில் அவர் தொடர்கதை, கவிதை, கேள்வி – பதில் எனப் பலவகைகளிலும் தன்னுடைய எழுத்துத் திறமையை வெளிப்படுத்தி வந்தார். அவருக்குப் பிறகு, திரு.கோமல் சாமிநாதன் அவர்கள் ‘சுபமங்களா’ என்றொரு பத்திரிக்கையை நடத்தினார். அதுவும் தீபம் போன்ற இலக்கிய இதழாகவே வெளிவந்து கொண்டிருந்தது.
அக்காலத்தில் தீபம் பத்திரிக்கையில் புதுக்கவிதை படைப்பாளிகளான மீரா, மு.மேத்தா போன்றோர் மரபுக்கவிதைகளையும் எழுதி வந்தனர். நாம் இன்றைக்கும் அந்த இதழ்களில் அவற்றைக் காணலாம். அவருடைய படைப்புகள் பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்தன. இன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு. திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘குறிஞ்சி மலர்’ தொடரில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி திரு. நா. பார்த்தசாரதி அவர்களைப் பற்றி மேலும் சில செய்திகளைக் காண்போம். அவர் பள்ளிப்படிப்புக்குப் பிறகு மதுரை தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றார். மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் அமைந்திருக்கிற தியாகராசர் பள்ளியில் சில காலம் தமிழாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
எழுத்தாற்றல்மிக்க இவர், அக்காலத்தில் பல இதழ்களிலும் எழுதிவந்தார். ‘கல்கி’ இதழின் ஆசிரியர் சதாசிவம் அவர்கள் அழைப்பின்பேரில், அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரண், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைபெயர்களிலும் இவர் எழுதிவந்தார்.
‘தீபம்’ என்ற இலக்கிய மாதஇதழை 1965இல் தொடங்கி நடத்தி வந்தார். இதனால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்பட்டார். ‘மணிவண்ணன் பதில்கள்’ என்ற இவரது கேள்வி-பதில் பகுதி இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
பயணக் கட்டுரைகளும் நா.பார்த்தசாரதி அவர்கள் நிறைய எழுதியுள்ளார். ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. கல்கியில் இவர் எழுதித் தொடர்களாக வெளிவந்த பல பயணக்கட்டுரைகள் ‘புது உலகம் கண்டேன்’, ‘ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள்’ என்ற பெயரில் நூல்களாக வெளிவந்துள்ளன.
சிறுகதைகள், குறுநாவல்கள் அடங்கிய தொகுதிகள் உட்பட மொத்தம் 93நூல்களை எழுதியுள்ளார். ‘பொய் முகங்கள்’, முள்வேலிகள்’, ‘சுதந்திரக் கனவுகள்’, ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’, ‘துளசி மாடம்’, ‘மணிபல்லவம்’, ‘நித்திலவல்லி’, ‘பாண்டிமாதேவி’, ‘ராணி மங்கம்மாள்’ உள்ளிட்ட இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.
இவருடைய புகழ்பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன்விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன.
பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாக அமைந்துள்ளது.
சாகித்ய அகாடமியின் உறுப்பினராகச் செயல்பட்டு, தமிழ்ப்படைப்புகளை தேசிய அளவில் பிரபலப்படுத்த முழு முயற்சி மேற்கொண்டார்.
காமராஜர் தலைமையிலான ‘ஸ்தாபன காங்கிரஸ்’ கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார் நா. பார்த்தசாரதி. இவர் சிறந்த பேச்சாளரும்கூட. இலக்கியம், அரசியல் என இரு துறைகளிலும் தன் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார்.
‘சமுதாய வீதி’ என்னும் நெடுங்கதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழ் வளர்ச்சித்துறையின் 1983ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு, ‘துளசி மாடம்’ என்னும் இவரின் நெடுங்கதைக்காக ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு, கம்பராமாயணத் தத்துவக் கடல் விருது போன்றவை இவர் கதைக்காகத் தரப்பட்டன.
எழுத்துலகில் பல சாதனைகளைப் புரிந்த தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள் 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி தனது 55ஆவது வயதில் மறைந்தார்.
தம் நற்றமிழ் ஆற்றலால் இலக்கிய உலகில் தீபம் ஏற்றியவர்… தீபம் நா.பார்த்தசாரதி.