ஆறுமுக நாவலர்

               ஆங்கிலேயர் வருகையினால் பழமை மிகுந்த இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அறிவியல் வளர்ச்சியின் காரணமாகத் தொழில் புரட்சியும், அச்சுக்கலையும், தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் மிகுதியும் வளர்ச்சியடைந்தன.

               2000ஆண்டுப் பழமையுடைய தமிழ் இலக்கியங்கள் முதலில் கல்லில் எழுதப்பட்டு பின்னர் தாமிரப் பட்டயம், ஓலைச்சுவடிகள் என 17ஆம் நூற்றாண்டு வரை இருந்த நிலைமாறி, அச்சுக்கலையின் வளர்ச்சியால் பனை ஓலைகளில், ஏடுகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் அச்சில் ஏறிப் புத்தகவடிவில் வரத் தொடங்கின.

    புதிய நூல்களைத் தமிழறிஞர்கள் பதிப்பிக்கத் தொடங்கினர். அவ்வாறு பதிப்பித்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆறுமுக நாவலர்;, சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் என்ற மூவராவர்.

               அக்காலத்தில் ஆறுமுக நாவலரின் பெருமையைக் கூறும்போது, ‘ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் தமிழ் எங்கே? சைவம் எங்கே?’ எனத் தமிழ் கூர் நல்லுலகம் ஆறுமுக நாவலரைப் போற்றிக் கூறுகிறது.

              தமிழ்நாட்டிற்கும், ஈழநாட்டிற்கும் (இலங்கை) பன்னெடுங்காலமாகவே அரசியல், இலக்கியம், சமயம் போன்றவற்றில் நெருங்கிய தொடர்பு உண்டு. சங்க இலக்கியப் புலவர்களில் ஈழத்துப் பூதன் தேவனார் தொடங்கி, இன்றைக்குக் கைலாசபதி, கா.சிவத்தம்பி, மகாகவி, காசி ஆனந்தன் வரை இத்தொடர்;ச்சி இலக்கியப் பாலமாக விளங்கி வருகிறது.

               இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் – இன்றைக்கும் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற பகுதியாகும். கி.பி.16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசியர்கள் ஆண்டு வந்தார்கள். அக்காலத்தில் யாழ்ப்பாணத்து நல்லூரைச் சார்ந்த ஞானப்பிரகாச சுவாமிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மரபில் தோன்றிய கந்தர் – அவரது துணைவியார் சிவகாமி இவர்களின் கடைசி மகனாக 1822ஆம் ஆண்டு (18.12.22) பிறந்தவரே தவத்திரு ஆறுமுக நாவலர் ஆவார். எனவே யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர்’ என இவரை அழைப்பது வழக்கம்.

               ஆறுமுக நாவலர் அவர்கள் சைவமும், தமிழும் செழிக்க தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர். கிறித்தவர்கள் தங்களை ஆண்டபோதிலும் சைவ மதத்தின் பெருமையை மக்களுக்கு உணர்த்தி, அவர்களை வேற்றுமதத்திற்குச் செல்லவிடாமல் சாதித்த பெருமை நாவலர் அவர்களுக்கே உண்டு. அவரது வாழ்நாளில் மூவகைப் பணிகளைச் சிறப்புடன் செய்தார் எனப் பாராட்டுவர். அவை நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்தல், நூல்களுக்கு உரை எழுதுதல், புதிய நூல்களைப் படைத்தல் எனும் பணிகளாகும்.

               சிறந்த நூல்களைப் பதிப்பிப்பதற்காகவே 1850ஆம்ஆண்டு சென்னை நகரில் தங்க சாலைத் தெருவில் சொந்தமாக ஒரு அச்சு இயந்திர சாலையை நிறுவினார். அதன் பெயர் வித்தியானுபாலன் அச்சியந்திர சாலை’ என்பதாகும். தாம் பதிப்பித்த நூல்களில் ஒரு குறிப்பு எழுதுவாராம் ஆறுமுக நாவலர். ‘இந்நூலில் ஏதேனும் அச்சுப்பிழை சொல்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்’ என்பதே அக்குறிப்பு.

       ‘நன்னூல்’ என்ற இலக்கண நூலுக்கு ஆறுமுக நாவலர் எழுதிய காண்டிகை உரை இன்றைக்கும் இணையற்றதாக அமைவதைக் காண முடிகிறது. இலக்கண வினா – விடை, சைவ வினா – விடை, பெரிய புராண வசனம், திருவிளையாடல் புராண வசனம், கந்த புராண வசனம், சிவாலய தரிசன விதி, அனுட்டான விதி எனப் பல நூல்களை இவர் எழுதியுள்ளார். இவற்றில் சிவாலய தரிசன விதியும், அனுட்டான விதியும் சைவ மரபுகளைக் கடைப்பிடிக்கும் முறை (திருநீறு எப்படிப் பூச வேண்டும், வணங்கும்போது எப்படி வணங்க வேண்டும் போன்றவை) பற்றியும், கோவில்களுக்குச் செல்லும்போது தெய்வங்களை வணங்கும் முறை பற்றியும் கூறுகின்றன.

        வடமொழி அறிவும், தமிழ் இலக்கண – இலக்கியப் புலமையும், ஆங்கில மொழிகளில் வல்லமையும் இவருக்குப் படைப்பாற்றலைத் தந்துதவின.

      இவரது வசன நடையால் ஈர்க்கப்பட்ட பரிதிமாற்கலைஞர், ‘வசனநடை கைவந்த வல்லளார்’ எனப் பாராட்டுகிறார்.

          நாவலரின் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சதாசிவப் பிள்ளை, நடராச ஐயர், திருவண்ணாமலை ஆதீனத் தம்பிரான் ஆறுமுகம்பிள்ளை, திருவாவடுதுறை ஆதீன வித்வான் சபாபதி நாவலர் போன்றோர் ஆவர்.

       ‘சைவப் பிரகாச வித்தியாசாலை’ எனும் பெயரில் கல்வி நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்கினார் நாவலர். இதே பெயரில் தமிழகத்தில் சிதம்பரத்திலும் ஒரு கல்வி நிலையத்தை நிறுவினார்.

               ஆறுமுக நாவலர் சமயப் பணியோடு தமிழ் இலக்கியப் பணியையும் சிறப்புற ஆற்றியவர். அவர் பதிப்பித்த நூல்கள் 35க்கும் மேற்பட்டவை. நன்னூல் காண்டிகை, உரை, விருத்தியுரை, தொல்காப்பியம் எழுத்ததிகாரம், இலக்கண விளக்கச் சூறாவளி, வில்லி பாரதம், திருவாசகம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்றவை இவரது பதிப்பில் வெளிவந்தவையே. இதில் திருக்குறளுக்கான பரிமேலழகர் உரையைத் தமிழில் முதன்முதலில் பதிப்பித்தவர் ஆறுமுக நாவலரே என்பது குறிப்பிடத்தக்கது.

               நாவலரின் பிழைகள் ஏதுமற்ற பதிப்புத் திறமையைக் கண்ணுற்ற இராமநாதபுரம் சமஸ்தான மன்னரான பொன்னுசாமித் தேவர் (பாண்டித்துரைத்தேவரின் தந்தை) இவரைக் கொண்டு சேதுபுராணம் திருச்சிற்றம்பலக் கோவையார் போன்ற நூல்களைப் பதிப்பிக்கச் செய்தார்.

               நாவலரின் பதிப்பில் பாடல் எண்ணாக இருந்தாலும், பக்க எண்ணாக இருந்தாலும் அவை க, உ, ங, ச என்ற தமிழ் எண்களாலேயே குறிக்கப்பட்டிருக்கும்.

     சைவக் காப்பாளரான நாவலர், சுந்தரமூர்த்தி நாயனாருடைய ‘குருபூசை’ தினத்தன்று இறைத்திருவடியை அடைந்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது இவர் நினைவாக இவருடைய உருவச்சிலை நிறுவப்பெற்றது. இன்றைக்கும் அது வண்டியூர் தெப்பக்குளத்திற்கு அருகில், மதுரை தியாகராசர் கல்லூரிக்கு எதிரில் புகழோடு விளங்குகிறது.

தமிழ் ஆங்கிலம் என இருமொழிப் புலமை பெற்றிருந்த ஆறுமுக நாவலர் அவர்களை அக்காலத்திய கிறித்தவ மதத்தைச் சேர்ந்த பாதிரிமார்கள் தங்களது வேதநூலான ‘பைபிளை’ எளியநடையில் தமிழில் மொழிபெயர்க்குமாறு வேண்டிக்கொண்டார்கள். நாவலர் அவர்களும் அதனைச் செம்மையாகச் செய்து கொடுத்தார். அந்த மொழிபெயர்ப்பே இன்றைக்கும் கிறித்தவ மத போதகர்களுக்குப் பயன்பட்டுவருகிறது.

               தமிழுக்குத் தொண்டு செய்வோர், தமிழ்போல நிலை பெற்றிருப்பர்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.