ஆப்பிரிக்க நாட்டில் உயிர்நீத்த அதிசயச் சிறுமி…

‘ஆங்கிலேயர்கள் துப்பாக்கியை உன்னை நோக்கி குறிவைத்தபோது உனக்குப் பயம் ஏற்படவில்லையா?’ என்று அவர் கேட்க,
அதற்கு அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி, ‘இல்லை, பயம் இல்லை, அவன் சுட்டாலும் என் உயிர் நாட்டுக்காகத்தான் போகப்போகிறது அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்’ என்று நோயுற்று மரணத்தருவாயில் இருந்த அவள் சொன்னாள்.
என் தேசம் விரைவில் சுதந்திரம் அடையும் என்று மகிழ்ந்தார் அந்தப் பெரியவர்.
இவ்வாறு அந்தச் சிறுமியிடம் பேசியவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அவருக்குப் பெருமையோடும் உரிமையோடும் பதிலளித்த அந்தச் சிறுமிதான் தமிழகத்தின் கடற்கரை நகரமான தில்லையாடி பகுதியைச் சார்ந்த வள்ளியம்மை.
ஆம், தில்லையாடி வள்ளியம்மையின் மரணத்தருவாயில் காந்தியடிகளோடு பேசுகிற வாய்ப்பையும் அந்தச் சிறுமிக்காகத் தேசப்பிதா கண்கலங்கியதும் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பெர்க் நகரில்தான் நடந்தவை. இந்த உரையாடலுக்குப்பின் அந்தச் சிறுமி சிலநாட்களில் மரணமடைந்து விட்டார். இந்நிகழ்ச்சி நடந்த ஆண்டு 1914. அதன்பின்னர் 33ஆண்டுகள் கழித்துதான் 1947இல் நாம் சுதந்திரம் பெற்றோம்.
தமிழக மண்ணில் பூலித்தேவன் தொடங்கி, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் வரை எத்தனையோ ஆடவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் வீரமங்கை வேலுநாச்சியார்போல் களத்தில் இறங்கி சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பெண்களின் வீரத்தை நாம் என்றும் போற்றுகின்றோம். இவ்வீரப் பெண்மனிகளில் ஒருவர்தான் தில்லையாடி வள்ளியம்மை.
இந்தியாவில், தமிழகத்தில் இருந்து இந்திய மண்ணுக்காகப் போராடுவது ஒருவகை என்றால், அயலகத்தில் வயிற்றுப் பிழைப்புக்காகப் பிழைக்கப்போன இடத்தில் சுதந்திரத்திற்காகப் போராடுவது என்பது எளிய விஷயமன்று. இவர்களைத்தவிர நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் I.N.A படைப்பிரிவில் அதிகம் சேர்ந்து அயலகத்திற்குச் சென்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர்கள் தமிழர்கள்தான். இது தீவிரவாதப் போராட்டம். காந்தியடிகள் மிதவாதி. அகிம்சா முறையில் போராட்டத்தை நடத்துபவர். அந்த மிதவாதப் போராட்டத்திலும் நம் தமிழர்கள் பங்கேற்றார்கள். உயிர் நீத்தார்கள் என்பதற்குத் தில்லையாடி வள்ளியம்மையே ஒரு சான்று. இத்தகைய வீரச்சிறுமி தில்லையாடி வள்ளியம்மையின் வரலாற்றில் மேலும் சில செய்திகளைக் காண்போம்….
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாதுறை அடுத்து இருக்கும் தில்லையாடி என்ற ஊரில் வசித்து வந்த முனுசாமி மங்களத்தம்மாள் தம்பதியினரின் மகள் வள்ளியம்மை. ஆங்கிலேய ஆட்சியின்போது தமிழகத்தில் நெசவு தொழில் செய்து வந்த தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் குடும்பம் சிறிய வணிக தொழில் செய்வதற்காகத் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்குப் புலம்பெயர்ந்து சென்றனர். புலம்பெயர்ந்து சென்ற இடத்தில் ஜோகன்ஸ்பர்க் நகரில் 1898ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பிறந்தார் வள்ளியம்மை.
இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டும் எனப் பல இடங்களில் பேராட்டங்கள் நடைபெற்ற காலகட்டம் அது. குறிப்பாக, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை இந்தியா எதிர்த்துக் கொண்டிருந்த சமயம், தென்னாப்பிரிக்காவில் இடம்பெயர்ந்துள்ள இந்தியர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டிருந்தார் மகாத்மா காந்தி. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகத் தென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் காந்தி.
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண்போராளி வள்ளியம்மை ஆவார். இவர் ஆரம்பகாலத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப்போராட்டங்களில் கலந்து கொண்டு பின்னர் அந்நாட்டின் இன ஒதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.
சிறுவயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை உன்னிப்பாக கவனித்தார். தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்குப் பிரிட்டீஷாரால் விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து 1913இல் காந்தியடிகள் போராட்டங்கள் நடத்தினார். காந்திஜியின் சொற்பொழிவுகள் இந்த இளம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விடுதலைக் கனலை மூட்டின.
அதேபோல் 1913ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கிறித்தவ மதச்சடங்கின்படி, திருமணப்பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியாகாது என மார்ச் மாதம் 14ஆம் தேதி, கேப் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. எனவே இந்தியர்களுக்கான உரிமையைப் பெறுதவற்காக ‘ஜோகன்ஸ்பர்க்’கில் இருந்து ‘நியூகேஸில்’ நோக்கி அகிம்சை முறையிலான போராட்டத்தை நடத்தினார் காந்தி. நடைப்பயணத்தில், உறுதிமொழித்தாளை எடுத்து, நடைப்பயணத்தில் கலந்து கொண்டவர்களிடம் காண்பித்து, ‘இந்த உறுதிமொழித்தாளை யார் படிக்கிறீர்கள்’ என்று கேட்டார். அப்போது 15வயதே நிரம்பிய சிறுமியான வள்ளியம்மை ஓடிவந்து, ‘நான் படிக்கிறேன்’ எனக்கூறி, ‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’ என்ற முழக்கத்துடன் நடைப்பயணம் புறப்படுகிறது. போராட்டங்களில் இவரும் பங்கேற்கத் தொடங்கினார்.
அனைவருக்கும் மூன்றுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. வள்ளியம்மையும் சிறையில்; அடைக்கப்பட்டார். கொலை, கொள்ளை, திருட்டுக் குற்றவாளிகள் உள்ள சிறைக் கொட்டடியில் வள்ளியம்மை அடைக்கப்பட்டார். மிகுந்த சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.
சுகாதாரமற்ற சிறை வாழ்க்கையாலும், சிறுபெண் என்றும் பாராமல் சிறையில் கடுமையாக வேலை வாங்கியதாலும், இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை விடுவிக்க அரசு முடிவு செய்தது. விடுதலையாக மறுத்த வள்ளியம்மை, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகே வெளியே வந்தார். பின்னர் 10நாட்கள் நோயுடன் போராடியவர். 1914 பிப்ரவரி 22ஆம் தேதி தனது பிறந்தநாளன்றே உயிர்நீத்தார்.
தில்லையாடி வள்ளியம்மையின் மரணத்தை அறிந்த காந்தி மிகவும் வருத்தம் அடைந்தார். இந்தியாவின் ஒரு புனித மகளை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் கடமையைச் செய்தவர். மனோபலம், தன்மானம் மிக்கவர். அவரது இந்தத் தியாகம் இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் தரும்’ என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார் மகாத்மா காந்தி.
எல்லையில் போராடுகின்ற வீரர்களின் வீரத்திற்கு இணையானது நம் தில்லையின் (தில்லையாடி வள்ளியம்மை) போராட்டம். இந்தத் தியாகத் தீபங்களால்தான் நம் சுதந்திரக்கொடி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.